போதை விழிப்புணர்வு பேரணியாணது சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதனை கோயம்பேடு மாவட்ட காவல் துணை ஆணையர் குமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான பதாய்கைகள் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
இதன் பின்பு கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் இணை கமிஷனர் மனோகர், திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள், போதையை ஒழிக்க தமிழக அரசும் போலீசாரும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சியும் மாணவர்கள் மத்தியில் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார். கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதை அடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், நான்கு மாதமாக உலக சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன் அனைவருக்கும் தெரியும். தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன் அது என்ன கிளின்னு தெரியாம நான் பட்ட பாடு பெரும்பாடு.
ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கு சென்று விட்டேன். அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள். அதற்கு அடிமையாகி விட்டேன். அதனால் உங்களுக்கு முன் உதாரணமாக நான் தற்போது இருக்கிறேன்.
மேலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்று விட்டேன். நான் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை. எனக்கு செல்போனில் இரண்டு பட்டன் மட்டும் தான் தெரியும். வாட்ஸ் அப்ல பேசினா அம்புக்குறிய அமுக்குனா தான் போகும்னு எனக்கு போன வாரம் தான் தெரியும் என மாணவர்கள் மத்தியில் தான் பட்ட அவஸ்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உருக்கமாக பேசினார்.