பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார்.
பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. பாலாவை வாழ்த்தும் விதமாக அவருக்கு நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தங்கச் சங்கிலியை அணிவித்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “நான் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெரிதாக போகவில்லை. ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு பாலா என்னை அழைத்தார்.
அதன் பிறகு அவரைப் பார்த்தோம். பாலா அழுது நான் பார்த்தது இல்ல. ஆனால், அவர் அன்னைக்கு அழுதார்.
அப்போது பாலா என்னை பார்த்து, ‘எனக்கு படம் பண்றியா டா’ என்று கேட்டார். அப்படி பண்ணிய படம்தான் பிசாசு. நான் கீழே விழுந்திருந்த நேரத்தில் என் கையைப் பிடித்து ஒரு படத்தை கொடுத்தார் பாலா. என் வாழ்க்கை முழுவதும் பாலாவிற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.
100 வருடத்திற்குள் அனைவரும் இறந்து விடுவார்கள். ஆனால் இளையராஜா, பாலா போன்றவர்கள் இறக்கமாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.” என்று நெகிழ்வாக பேசினார்.
“தமிழ் சினிமாவில் எத்தனையோ வளர்ச்சிகள், மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இத்தனை வருடமும் மாறாத ஒன்று பாலா படமும் அதன் தரமும் மட்டும் தான். நாங்கெல்லாம் மணிரத்னம், பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆட்களை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தோம். ஆனால் இப்ப உள்ள 2k கிட்ஸ் எல்லாம் பாலாவை பார்த்து தான் சினிமாவுக்கு வருகிறார்கள்” எனப் பேசினார் இயக்குநர் விக்ரமன்.
தொடந்து பேசிய இயக்குநர் பேரரசு, “நடிகர்களுக்கு பாலா படத்தில் நடித்து விட்டால் அது மிக பெரிய அங்கீகாரம்.” என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் ஆர்.வி உதயகுமார், “ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல் படம் என்று ரசிகர்கள் இருந்த காலத்திலும், பின்பு இயக்குனர்களில் மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா இருந்த வரிசையில் திரையரங்கில் ஒரு இயக்குனர் பெயரை சொல்லி எழுந்து நின்று கைதட்டினால் என்றால் அது பாலாவுக்கு தான்.” என்றார்.