சயின்ஸ் பிக்‌ஷன் காமெடியில் அசத்தும் ஜிவி பிரகாஷ்... அடியே திரைப்பட விமர்சனம் !

post-img

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், கெளரி ஜி கிஷன், வெங்கட் பிரபு

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

இசை: ஜஸ்டின் பிரபாகர்

தயாரிப்பு: மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்

ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 19 நிமிடங்கள்

சென்னை: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார்.

அவரது நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம் 'அடியே.' ஜிவி பிரகாஷுடன் கெளரி ஜி கிஷன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள அடியே திரைப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இன்று திரையரங்குகளில் வெளியான 'அடியே' படம் எப்படி இருக்கிறது என்ற முழுமையான விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

அடியே திரைப்பட விமர்சனம்: மிகச் சாதாரண ஏழ்மையான இளைஞனான ஜீவா, பாடகி செந்தாழினியை காதலிக்கிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றாலும், ஜீவாவின் ஒருதலை காதல் செந்தாழினிக்குத் தெரியாது. இதனை பல வருடங்களுக்குப் பிறகு செந்தாழினியிடம் சொல்லப் போகும் நேரத்தில் ஜீவாவுக்கு ஒரு விபத்து நடக்க, அவர் கோமா நிலைக்குச் செல்கிறார்.

கண் விழித்துப் பார்க்கும் போது ஜீவா இசையமைப்பாளர் அர்ஜுனாக மாறுகிறார், பாடகி செந்தாழினியும் அவரது மனைவியாக கண்முன்னே நிற்கிறார். ஜீவா எப்படி இசையமைப்பாளர் அர்ஜுனாக மாறுகிறான், காதலே சொல்லாத போதும் செந்தாழினி எப்படி அர்ஜுனின் மனைவியாகிறார் என்பதே அடியே படத்தின் கதை. ஜீவா, அர்ஜுன் என பெயரளவில் மட்டும் இரண்டு கேரக்டர்களாக நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அவருக்கு ஜோடியான செந்தாழினி கேரக்டரில் கெளரி ஜி கிஷன் நடித்துள்ளார். இதுவரை தமிழில் டைம் ட்ராவல், டைம் லூப் வகையில் சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அடியே கொஞ்சம் வித்தியாசமாக Reality Vs Alternative Reality-ஐ பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. 'இன்று நேற்று நாளை', 'மாநாடு' என இந்த இரண்டு படங்களும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. இந்தப் படங்களின் மிகப் பெரிய சக்சஸ்க்கு காரணம், காமெடி என்பதை தவிர்த்து கதையும் திரைக்கதையும் ரசிக்கும்படி இருந்தது.

'அடியே' திரைப்படம் காமெடியில் ரசிக்க வைத்துவிட்டு, திரைக்கதையில் ஏமாற்றத்தை தருகிறது. இந்திய ஆய்வு மையத்தில் இருந்து காணாமல் போகும் டைம் ட்ராவல் டிவைஸ் ஜிவி பிரகாஷிடம் கிடைக்க, அதனால் அவர் Reality, Alternative Reality உலகத்திற்குள் சென்று வருகிறார். இதனை ரசிகர்களுக்கு புரிய வைப்பதற்காக வெங்கட் பிரபுவை வைத்தே விளக்கம் கொடுப்பது கை கொடுத்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்குநர் கெளதம் மேனனாக வந்து தன்னைத் தானே பங்கம் செய்துகொள்கிறார். அதாவது ரியாலிட்டி உலகில் உள்ள பிரபலங்களை, Alternative Reality-யில் வேறொரு பிரபலமாக சித்தரிக்கும் இடங்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன.

பிரபுதேவா ஏஆர் ரஹ்மனாக மாறுகிறார், ஏஆர் ரஹ்மான் டான்ஸ் மாஸ்டர் ஆகிறார், இயக்குநர் மணிரத்னம் கிரிக்கெட் ப்ளேயர், சச்சின் ஃபுட்பால் ப்ளேயர், அஜித் ஃபார்முலா ஒன் ரேஸர், கேப்டன் விஜயகாந்த் இந்திய பிரதமர் என எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு காமெடியில் அதகளம் செய்கிறது இந்த Alternative Reality உலகம். ஆனால், அதுவே சிலநேரங்களில் ஓவர் டோஸ்ஸாகவும் மாறிவிடுவது கொஞ்சம் போரிங் தான்.

Alternative Reality-இல் இயக்குநர் மிஷ்கின், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரை பங்கமாக கலாய்த்துள்ளனர். முக்கியமாக இயக்குநர் அட்லீயை தட்லீயாக மாற்றி, அவர் இயக்கிய படங்கள் வரிசையில் மெளன ராகம், சத்ரியன், சக்தே இந்தியா என காட்டுவது தியேட்டரையே அதிர வைக்கிறது. அதேபோல், 'கட்டி புடி... கட்டி புடிடா' பாடலை காதல் பாடலாக மாற்றுவது, ஏஆர் ரஹ்மானின் பாடல்களை Alternative Reality உலகில் காப்பி பேஸ்ட் செய்யும் காட்சிகள் ரகளையாக வந்துள்ளன.

படம் தொடங்கி முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஆங்காங்கே வெடித்துச் சிரிக்க பல காட்சிகள் இருக்கின்றன. இதில் கவனம் செலுத்திய இயக்குநர் கதை, திரைக்கதை, ரன்னிங் டைம் போன்றவற்றை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். நல்ல கான்செப்ட்டை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல், அதன் போக்கில் விட்டு விட்டாரோ என யோசிக்கத் தோன்றுகிறது.

டெக்னிக்கலாகவும் படத்துக்கு இன்னும் கொஞ்சம் ஃபினிஷிங் டச் கொடுத்திருக்கலாம். ஜிவி பிரகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார். ரியாலிட்டி வாழ்க்கையில் திணறுவது, Alternative Reality-ஐ புரிந்துகொண்டு காதலுக்காக ஸ்கெட்ச் போடுவது, காதல் தோல்வி, விரக்தி என எல்லா ஏரியாக்களும் அவருக்கு கை கூடியுள்ளது. கெளரி ஜி கிஷன் கதைக்கு ஏற்ற செந்தாழினியாக வசீகரம் கொடுக்கிறார்.

இலவச இணைப்பாக இரண்டு லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்கவும் வைத்துள்ளார். ஜிவி பிரகாஷ், கெளரி ஜி கிஷன் இவர்களை தவிர்த்து இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பது வெங்கட் பிரபுவும் மிர்ச்சி விஜய்யும் தான். ரியாலிட்டியில் சயின்டிஸ்ட், Alternative Reality உலகில் இயக்குநர் கெளதம் மேனன் என இரண்டு கேரக்டர்களில் வெங்கட் பிரபு பின்னிப் பெடலெடுக்கிறார்.

ஜிவி பிரகாஷின் நண்பனாக வரும் மிர்ச்சி விஜய்யும் கிடைக்கும் இடங்களில் கலகலப்பூட்டி பக்காவாக ஸ்கோர் செய்கிறார். மொத்தத்தில் 'அடியே' கொஞ்சம் அடக்கி வாசிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி படம்.

Related Post