மதுரைக்கு இதுதாங்க முதல்முறை.. அடேங்கப்பா ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்! பலூன் திருவிழாவுக்கு ரெடியா?

post-img
மதுரை: இந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் பலூன் திருவிழா நடக்க இருக்கிறது. மதுரையில் பலூன் திருவிழா நடப்பது இதுதான் முதல் முறை என்பதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரையில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது 10வது ஆண்டாகும். சென்னையில் மாமல்லபுரத்திற்கு பக்கத்தில் உள்ள திருவிடந்தை எனும் பகுதியில் பலூன் திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகின்றன. திருவிடந்தையில் இசிஆர் சாலையையொட்டி திருவிழா நடைபெறுகிறது. நாளை (ஜன.10) தொடங்கி ஜன.12ம் தேதி வரை என மொத்தம் 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்கின்றனர். எனவே, வித்தியாசமான வடிவங்களில் பலூன்கள் வானத்தில் பறக்க இருக்கின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஆச்சிபட்டியில் இந்த திருவிழா ஜன.14 தொடங்கி ஜன.16 வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு சுமார் 10 ராட்சத பலூன்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. யானை, தவளை உள்ளிட்ட உருவங்களில் இருந்த இந்த பலூன்கள் தரையிலிருந்து 500-1000 அடி உயரம் வரை 30 நிமிடங்கள் பறக்கவைக்கப்பட்டன. சில பலூன்கள் 80 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. 80 அடி உயரத்திலிருந்து பொள்ளாச்சியின் அழகை கண்டு ரசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருந்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கட்டணம்தான் கொஞ்சம் ஓவராக இருந்தது. அதாவது, 30 நிமிடங்கள் பலூனில் பறப்பதற்கு தனிநபருக்கு ரூ.25,000 வரை கட்டணம் பெறப்பட்டது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் வந்தால் கூட இவ்வளவு செலவு ஆகாது. ஆனால் ஒரே இடத்தில் நின்றுக்கொண்டிருக்கும் பலூனுக்கு ரூ.25,000 கட்டணமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். எனவே இந்த முறை கட்டணம் குறையுமா? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பொள்ளாச்சியிலும், சென்னையிலும் பலூன் திருவிழா தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மதுரையில் இப்படியான திருவிழா நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் இந்த திருவிழா வரும் ஜன.18-19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. முதல்முறை பலூன் திருவிழா என்பதால் மதுரை மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம், அழகர் மலை, யானை மலை, திருப்பரங்குன்றம் மலை, சமணர் மலை ஆகியவை பலூனிலிருந்து பார்த்தால் ரம்மியமாக தெரியும். இது குறித்து அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், "சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்க இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து 3 மாவட்டங்களில் வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்துகிறோம். தமிழகத்தை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான மாநிலமாக மாற்ற முதல்வர் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறார். இப்படியான திருவிழாக்கள் மூலம் தமிழ்நாட்டின் வருவாய் அதிகமாகும்" என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post