3 அடி அகல நிலக்கரிச் சுரங்கத்தில் 295 அடி ஆழத்தில் சிக்கிய இந்த தொழிலாளி உயிர் பிழைத்தது எப்படி?

post-img
"அன்று காலை 4:30 மணிக்கு வேலைக்குச் சென்றேன். நாங்கள் 4 தொழிலாளர்கள் இருந்தோம். நாங்கள் அனைவரும் நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் போது ஒரு சுரங்கத்தினுள் ஆழமான பகுதிக்குச் சென்றோம்." "அன்று என் வேலையின் முதல் நாள், நான் கொஞ்சம் சோர்வாக உணர்ந்தேன். திரும்பி சென்றுவிடலாம் என நினைத்தேன். அப்போது அதிவேகமாக தண்ணீர் ஓடும் பயங்கர சத்தம் கேட்டது. நான் பயந்துவிட்டேன். மரணம் என்னை நோக்கி வரும் உணர்வு ஏற்பட்டது." என தனது அச்சம் நிறைந்த அனுபவத்தை விவரித்தார் ராஜீவ் பர்மன். இதை சொல்லும் போதே, 39 வயதான ராஜீவ் பர்மனின் முகத்தில் அச்சம் வெளிப்பட்டது. அந்த காட்சிகளை ராஜீவ்வால் மறக்கவே முடியவில்லை என்கிறார். ராஜீவ் அசாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் உயிர் பிழைத்த தொழிலாளி. சம்பவத்தன்று, எலி துளை போன்ற குறுகிய சுரங்கத்திற்குள் அமர்ந்து நிலக்கரி பிரித்தெடுக்கும் பணியின் ஈடுபட்டிருந்தார். பிரேசில்: சட்டவிரோத தங்கச் சுரங்கங்களால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் இளம் பெண்கள் இந்தியாவில் 'வைர வேட்டை' நடக்கும் நகரம் - குடும்பம் குடும்பமாக பல ஆயிரம் பேர் என்ன செய்கிறார்கள்? அமேசான்: சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் உண்மை நிலை கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? பிபிசி கள ஆய்வு அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள இந்த நிலக்கரி சுரங்கத்தில் 7 தொழிலாளர்கள் இன்னமும் உள்ளே சிக்கியுள்ளனர். ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் கடற்படையைச் சேர்ந்த டைவர்ஸ் (divers) குழுவினர் இந்தத் தொழிலாளர்களைத் தேடுவதற்காக சுரங்கத்திற்குள் தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து ஆறு நாட்களுக்கு முன்பு, திங்கட்கிழமை (ஜனவரி 6) காலை 8 மணியளவில் நிகழ்ந்தது. திங்கள்கிழமை காலை ராஜீவ் சுரங்கத்திற்குள் நிலக்கரி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அந்த திகிலூட்டும் காட்சியை நினைவு கூர்ந்த ராஜீவ், "நான் சுரங்கத்திற்குள் இருந்தேன், எனது மூன்று சகத் தொழிலாளிகள் சிறிது தூரம் முன்னால் வேலை செய்து கொண்டிருந்தனர். வேலையை முடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, திடீரென தண்ணீர் ஓடும் பயங்கர சத்தம் கேட்டது." "நாங்கள் அனைவரும் வெளியேற நினைத்து நடக்க ஆரம்பித்தோம். நிலத்தடியில் சுமார் 90 மீட்டர்(சுமார் 295 அடி) ஆழத்தில் இருந்தோம். சுரங்கப்பாதை மிகவும் குறுகலானது. 3 முதல் 3.5 அடி அகலம் மட்டுமே இருக்கும் அதனால் நடந்து வருவது சிரமமாக இருக்கும். நீண்ட சுரங்கப்பாதையில், வெளியில் இருந்து எந்த சத்தமும் கேட்காது, எந்த வெளிச்சமும் தெரியாது." என்று ராஜீவ் விளக்கினார். "எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது போல் இருந்தது. நான் என் தாய், மனைவி மற்றும் மகனை பிரிந்துவிடுவேன் என அஞ்சினேன். தண்ணீர் மிக வேகமாக என் அருகே வந்ததால், என் ஹெல்மெட் கீழே விழுந்தது, டார்ச் பழுதடைந்தது. இருண்ட சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறுவது எனக்கு கடினமாக இருந்தது. என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று நினைத்தேன்." மெல்லிய குரலில் ராஜீவ் இவற்றை விவரித்து கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து பேசினார்.. "நான் அந்த சுரங்கப்பாதையின் உள்ளே படுத்தபடி நீந்தி வரலாம் என எண்ணினேன். பலமான நீரோட்டத்தில் வெளியே வந்துவிடலாம் என்று உணர்ந்தேன். ஏனென்றால் நான் அப்போது சுரங்கப்பாதையின் நுழைவாயிலிலிருந்து 10-15 மீட்டர் தொலைவில் இருந்தேன்." "நான் கடவுள் நினைத்துக்கொண்டு இருண்ட சுரங்கப்பாதையில் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் பெருக்கெடுத்த தண்ணீரால் அடித்து செல்லப்பட்டு கிணற்றில் விழுந்தேன். கயிறுகள், மோட்டார் பைப்புகளை பிடித்துக்கொண்டு ஏராளமான தொழிலாளர்கள் அங்கு இருந்தனர். சிலர் நிலக்கரியை இழுக்க பயன்படுத்தப்படும் இரும்புச் சங்கிலியில் தொங்கிய மரப்பெட்டியை பிடித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றனர். அப்போது கிணற்றில் 15-20 அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியிருந்தது." என்று ராஜீவ் கூறுகிறார். "நானும் இரும்புச் சங்கிலியைப் பிடித்துக் கொண்டேன். எனது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் மேலே கிரேனை இயக்கியவர் உள்ளே ஏதோ நடந்திருப்பதை உணர்ந்தார். அவர் கிரேனை மேலே இழுத்தவுடன், இரண்டு தொழிலாளர்களும் இரும்புச் சங்கிலியைப் பிடித்தபடி மேலே சென்றனர். பின்னர் கிரேனில் நிலக்கரி எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் மரப்பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு அதில் ஏறி நாங்கள் வெளியே வந்தோம்." என்றார் அவர். சுமார் 25 பேர் சுரங்கத்தில் இருந்து இதே வழியில் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த தொழிலாளர்கள் கிரேனில் கட்டப்பட்ட கயிறு மற்றும் இரும்பு சங்கிலியில் தொங்கி கொண்டிருந்தனர். இதனிடையே 300 அடிக்கு மேல் ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பிக்கொண்டே இருந்தது. அன்று தன்னுடன் வேலைக்குச் சென்ற மூன்று நண்பர்கள் இன்னும் சுரங்கத்தில் இருந்து வெளிவராமல் இருப்பதை நினைத்து ராஜீவ் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள சிட்டிலா பஜார் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார் ராஜீவ். "சுரங்கப் பாதையில் இருந்த எனது இரண்டு தோழர்கள் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சஞ்சீவ் சர்க்கார் என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. " அசாமின் மலைப்பாங்கான பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கத்தில் சிக்கிய 7 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 320 அடி ஆழமுள்ள இந்த சுரங்கத்தில் தண்ணீர் மற்றும் குப்பைகள் நிரம்பியிருப்பதால் கடற்படை வீரர்கள் இதுவரை தேடும் பணியில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை தேடுவதற்காக கேமராக்கள் பொருத்தப்பட்ட ரிமோட்டால் இயக்கப்படும் வாகனங்களுடன் டைவர்ஸ் தினமும் உள்ளே சென்று வருவதாக என்டிஆர்எஃப் கூறுகிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்த தகவல்களை தேசிய பேரிடர் மேலாண்மை துணைத் தளபதி என்.கே. திவாரி பிபிசியிடம் கூறினார். "சுரங்கத்திற்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், கடற்படையின் முக்குளிக்கும் வீரர்கள் மேற்பரப்பை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்." "தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த வீரர்களால் நீருக்கடியில் 40 அடி வரை செல்ல முடியும், கடற்படை டைவர்ஸால் இன்னும் ஆழமாக டைவ் செய்ய முடியும்." "ஆனால் குப்பைகள் நிரம்பிய தண்ணீரில் 300 அடிக்கு செல்வது மிகவும் ஆபத்தான பணி. அங்கு சென்றடைவது சாத்தியமில்லை. " என்று விளக்கினார். தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினரின் கூற்றுப்படி, விபத்து நடந்த இடத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு 10 உயர் திறன் கொண்ட பம்புகளும் அதைச் சுற்றி 5 சுரங்கங்களும் நிறுவப்பட்டுள்ளன, இதனால் டைவர்ஸ் ஆழமாக உள்ளே சென்று சுரங்கத்தில் காணாமல் போன தொழிலாளர்களைத் தேட முடியும். தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி என்.கே. திவாரி, ``சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதுடன், கடற்படை டைவர்களும் அவ்வப்போது சுரங்கத்திற்குள் சென்று வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை" என்றார். "நீர் மட்டம் குறையும் வரை, டைவர்ஸ் எலி துளை போன்ற குறுகிய சுரங்கத்திற்குள் உள்ளே ஆழமாக செல்ல முடியாது. இந்த சுரங்கங்கள் 200-250 மீட்டர் நீளம் மற்றும் 3 அடி உயரம் கொண்டவை. இந்த சுரங்கங்கள் அனைத்தும் அருகிலுள்ள மற்ற சுரங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. உள்ளே பல வழிகளில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது" என்று விளக்கினார். ராஜீவ் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு சுரங்கத்திலிருந்து வெளியே வந்தார், ஆனால் அவருடைய நண்பர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. மூன்று சக ஊழியர்களின் குடும்பங்களிலிருந்து ராஜீவுக்கு தினமும் அழைப்புகள் வருகின்றன. ராஜீவ் மிகுந்த வருத்தத்துடன் இதனை கூறினார். "ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இப்போது எத்தனை பேர் உள்ளே உயிருடன் இருப்பார்கள் என்று தெரியவில்லை. என்னிடம் இருக்கும் போன் எனது நண்பர் குஷி மோகன் ராயுடையது. அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் தினமும் எனக்கு போன் செய்கிறார்கள். கடவுள் அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்றார். உயிருக்கு ஆபத்து இருக்கும் என தெரிந்தும் இந்த நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதிலளித்த ராஜீவ், "நாங்கள் ஏழை தொழிலாளர்கள். அதனால்தான் இந்த அபாயகரமான வேலையைச் செய்கிறோம். ஏனென்றால் இங்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது." "ஒவ்வொரு தொழிலாளியும் தினமும் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். சில தொழிலாளர்கள் மாதம் 80-90 ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்கிறார்கள். நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். மற்ற வேலைகளில் நானூறு ரூபாய்தான் கூலி. எனக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர் படிக்கிறார். குடும்பத்திற்கு உணவளிக்க நாங்கள் ஆபத்துகளை ஏற்ற வேண்டியுள்ளது" என்றார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சுரங்கத்தில் இருந்து காணாமல் போன 9 தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டு, வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கம் சட்டவிரோதமாக இயங்கியது போல் தோன்றுகிறது என்றார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சுரங்க விபத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா 2014-ல் `எலி துளை சுரங்கம்' என்று அழைக்கப்படும் சுரங்கங்கள் இயங்குவதை தடை செய்தது. ஆனால் இதையும் மீறி, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிறியளவிலான சட்டவிரோத சுரங்கங்களில் நிலக்கரி சுரங்கப் பணிகள் நடக்கிறது. இங்கு விபத்துகள் நிகழும்போது, பெரும் விவாதங்கள் எழுந்தாலும், இதுவரை இந்த பகுதியில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திமா ஹாசாவ் மாவட்டத்தில் நடந்த இந்த நிலக்கரிச் சுரங்கச் சம்பவம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அசாமின் எதிர்க்கட்சிகளும் சிபிஐ விசாரணையை அரசிடம் கோருகின்றன. முன்னதாக ஜனவரி 2024 இல், நாகாலாந்து மாநிலத்தில் எலி துளை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 2018 ஆம் ஆண்டில், மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் அருகிலுள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் சுரங்கத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது குறைந்தது 15 பேர் சிக்கிக்கொண்டனர். பாரிய மற்றும் நீண்ட மீட்பு நடவடிக்கையில் இரண்டு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post