பேனிக் அட்டாக்: சில நிமிடங்கள்தான்; ஆனால் உயிர் பயம் ஏற்படும் - சமாளிப்பது எப்படி?

post-img
அலுவலகப் பணியாளர் ஒருவர் அதீத மன அழுத்தம் ஏற்படும் சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கலாம் அல்லது மாணவர் ஒருவர் தேர்வு குறித்த அச்சத்தில் இருக்கலாம். இல்லையேல், இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவர் திடீரென ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவருக்கு மூச்சுத்திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பது, வியர்த்துக் கொட்டுவது போன்ற அசாதாரண பாதிப்பு ஏற்படலாம். அதுதான் 'பேனிக் அட்டாக்'. அதாவது, பேரச்சத்தின் விளைவாக திடீரென ஏற்படும் ஒரு பாதிப்புதான் பேனிக் அட்டாக். இது எதனால், எப்போது ஏற்படுகிறது என்பதைக் கணிக்க முடியாது என்பதே இதன் பண்புகளில் முக்கியமானது. "சில மனிதர்கள் மிகவும் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது, உடல் தன்னிச்சையாக ஒரு பேரச்ச நிலைக்குச் சென்றுவிடும். அப்போது அபாயத்திற்கு எதிர்செயலாற்றுவதைப் போல் உடலில் சில மாற்றங்கள் நடக்கும். அதன் விளைவாக ஏற்படுவதே பேனிக் அட்டாக்," என்று விளக்கினார் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூரண சந்திரிகா. பொதுவாக, பதற்றம், குழப்பம் போன்ற பிரச்னைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். அவற்றில் இருந்து பேனிக் அட்டாக் வேறுபடுவதே அதன் கால அவகாசத்தில்தான். இது சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் ஒரு பாதிப்பு. ஆனால், அந்தச் சில நிமிடங்களில் அதனால் பாதிக்கப்படுவோர் உயிரையே இழக்கப் போவதாகக் கருதி கடும் அச்சத்திற்கு உள்ளாவார்கள் என்று விவரிக்கிறார் பூரண சந்திரிகா. "பிற உளவியல் பிரச்னைகளைப் போலவே இதையும் அணுக வேண்டும். உயிரியல், உளவியல், சமூகம் ஆகிய மூன்று காரணிகளுமே இதில் பங்கு வகிக்கின்றன" என்கிறார் அவர். ஒரு சிலருக்கு எப்போதோ ஒரு சமயத்தில், மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்திருக்கலாம், அதேபோன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்போது தங்களையே அறியாமல் அவர்களின் ஆழ்மனதில் 'ஆபத்து' என்ற எச்சரிக்கை மணி அடிக்கும். அதன் தூண்டுதலின்பேரில் அவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பேனிக் அட்டாக் ஏற்படலாம் என்றும் விளக்கினார் அவர். உதாரணமாக, ஒருவரை சிறுவயதில் தனிமையில் மிகவும் இருட்டான ஓர் அறையில் பூட்டிவிடுகிறார்கள். அந்தச் சம்பவம் அவர்மீது ஏற்படுத்தும் தாக்கம் ஆழ்மனதில் பதிந்துவிடும். அந்த நபர் வளர்ந்த பிறகும் அத்தகைய சூழ்நிலையில் மீண்டும் சிக்கினாலோ அல்லது சிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலோ அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்படலாம். மற்ற உளவியல் பிரச்னைகளைப் போலவேதான் இதுவும் என்கிறார் அவர். இந்த பாதிப்பு உளவியல் ரீதியானது என்றாலும், இது மரபியல் ரீதியாக வருவதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் வல்லுநரும் துறைத் தலைவருமான மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன். இதற்கு அதிர்ச்சிகரமான அனுபவங்கள், நாள்பட்ட மன அழுத்தம், வாழ்வில் நடக்கும் திடீர் மாற்றங்கள் போன்றவையும் தூண்டுதலாக அமையலாம் என்றார் அவர். பலருக்கும் லிஃப்டில் சிக்கிவிட்டால் பதற்றம் ஏற்படும். அதுவே, லிஃப்டில் சிக்கிய ஒருவருக்கு அந்த அனுபவம் மோசமானதாக இருந்தால், மீண்டும் அவர்கள் சிக்கும்போதெல்லாம் அந்தப் பதற்றம் பன்மடங்கு அதிகரித்து பேனிக் அட்டாக் ஏற்படும். அதன் விளைவாக, "எச்சில் வறண்டுபோவது, சிறுநீர் வருவதைப் போன்ற உணர்வு, இதயத் துடிப்பின் எண்ணிக்கை பெருகுவது, வாய் குளறுவது, வயிற்றில் அசௌகரியம் எனப் பல எதிர்வினைகள் ஒரே நேரத்தில் ஏற்படும். அந்த நிமிடத்தில் அவர்களுக்கு 'நாம் இறக்கப் போகிறோமோ' என்ற அளவுக்குப் பேரச்சம் வரும்," என்று விவரித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா. அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உடலில் ஏற்படும் தொடர் மாற்றங்கள், நெஞ்சு வலி ஏற்படுவதைப் போல உணரலாம். அதோடு, அதன் காரணமாகவே பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகப் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார். "ஒருவருக்கு முதல்முறையாக பேனிக் அட்டாக் ஏற்படும்போது, மாரடைப்பு குறித்த அச்சம் பெரும்பான்மை மக்களிடம் இருப்பதால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள். ஆனால், அடுத்தடுத்த பாதிப்புகளின்போது மருத்துவர்கள் அது பேனிக் அட்டாக் என்பதை உணரத் தொடங்கிவிடுவார்கள்," என்றும் விளக்கினார் பூரண சந்திரிகா. அதன் பிறகு, மனநல மருத்துவரை அணுகுமாறு பேனிக் அட்டாக் பாதிப்புக்கு ஆளானோர் பரிந்துரைக்கப்படுவர் என்று விளக்கினார். முதல்முறை பேனிக் அட்டாக் ஏற்படும்போது உறுதியாக அதுதான் என்பதைக் கண்டறிவது கடினம் என்கிறார் மருத்துவர் பூரண சந்திரிகா. அவரது கூற்றுப்படி, முதல் முறை பேனிக் அட்டாக் அறிகுறிகள் ஏற்படும்போது, இதர மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். வேறு பாதிப்புகள் எதுவும் இல்லாத பட்சத்தில் அது பேனிக் அட்டாக் ஆக இருக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழ்நிலையில், "மனநல மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும், சிகிச்சை எடுக்கத் தொடங்கினால் பெரும்பாலும் பேனிக் அட்டாக் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பாதிப்பின்போது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சத்தை மூளை ஏற்படுத்தும். அந்தத் தூண்டுதலின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் செயல்படுவார்கள். மன அழுத்தத்திற்கு எளிதில் பாதிக்கப்படுவது, அதிகம் கவலைப்படுவது போன்ற சில குணநலன்களைக் கொண்டவர்களுக்கு, பேனிக் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மருத்துவர் பூரண சந்திரிகா. "சிலர் எப்பேற்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் பெரிய அலட்டலின்றி அமைதியாகவே இருப்பார்கள். ஆனால், சிலர் சிறிய அதிர்வலைகளுக்கே பெரியளவில் பதற்றமடைவார்கள். அத்தகைய நபர்களுக்கு இதன் பாதிப்பு அதிகம் இருக்கலாம்," என்று தெரிவித்தார். ஆனால், இதன் அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். பொதுவாக பேனிக் அட்டாக் ஏற்படும்போது, இதயம் வேகமாகத் துடிப்பது, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி அல்லது அசௌகர்யம், மயக்க உணர்வு, வியர்த்துக் கொட்டுவது, உடல் நடுக்கம், குமட்டல், உடல் சிலிர்த்துக்கொள்வது, சுயநினைவை இழப்பதைப் போன்ற உணர்வு, கவனச் சிதறல் ஆகியவை ஏற்படலாம் என்று விவரித்தார் மருத்துவர் பூரண சந்திரிகா. எந்தக் காரணமும் இன்றி, திடீரென இவற்றில் சில அறிகுறிகள் ஏற்பட்டால் அது பேனிக் அட்டாக் ஆக இருக்கலாம் என்று கூறுகிறார் அவர். மூளையின் எந்தப் பகுதி பேனிக் அட்டாக் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பிபிசி தமிழிடம் விளக்கிய மருத்துவர் பிரபாஷ், "முடிவெடுத்தல், உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல் போன்ற உயர் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு மூளையின் ப்ரீஃபிரன்டல் கோர்டெக்ஸ் என்ற பகுதி உதவுகிறது. நமது உணர்ச்சிகளை, குறிப்பாக அச்சத்தைக் கையாள்வதில் அமிக்டாலா என்ற பகுதிக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், பேனிக் அட்டாக் ஏற்படும்போது அமிக்டாலாவில் அதிவேக மாற்றங்கள் நிகழும். அதன் விளைவாக, உண்மையான அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், தீவிர பய உணர்வு தூண்டப்படுகிறது. அதனால், அமிக்டாலாவில் இருந்து வரும் அதிகப்படியான அச்ச உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ப்ரீஃப்ரன்டல் கோர்டெக்ஸ் திணறும்," என்று விளக்கினார். இதன்போது, இதயத் துடிப்பு அதிகரிப்பது, மூச்சுத் திணறல், வியர்த்துக் கொட்டுவது போன்றவற்றுக்கு, மன அழுத்தத்திற்கு எதிர்செயலாற்றக்கூடிய ஹைபோதாலமஸ் என்ற பகுதி தூண்டுவதாகவும் தெரிவித்தார் மருத்துவர் பிரபாஷ். மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் என்ற உணர்ச்சிபூர்வமான நினைவுகளை உருவாக்கவும் நினைவுகூரவும் உதவும் பகுதி, பழைய மோசமான சம்பவங்களை நினைவூட்டுவதால், பேனிக் அட்டாக் ஏற்பட வழிவகுக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இந்த பாதிப்பு மரபணு ரீதியாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றபோது, "இதில் மரபணு, சுற்றம், உளவியல் ஆகிய மூன்று காரணிகள் பங்கு வகிப்பதாக" தெரிவித்தார் மருத்துவர் பிரபாஷ். "ஒருவேளை பெற்றோருக்கு இந்த பாதிப்பு இருந்தால், குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு, சில மரபணுக் காரணிகள் பேனிக் அட்டாக் உள்பட பல மனப் பதற்றக் கோளாறுகளுக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன." அவரது கூற்றுப்படி, மரபணு தாக்கங்கள் சில மூளை ரசாயனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பாதிக்கலாம். "இது பதற்றத்தை ஏற்படுத்தலாம். மனநிலை ஒழுங்குபடுத்துதலில் பங்கு வகிக்கும் நரம்பியல் கடத்தி அமைப்புகளுடன் தொடர்புடைய மரபணுக்களில் நிகழும் மாறுபாடுகள் பேனிக் அட்டாக் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன," என்றும் அவர் விளக்கினார். ஒரு முறையேனும் பேனிக் அட்டாக் பாதிப்பை எதிர்கொண்டவர்கள், அது மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள சூழ்நிலைகளை முன்கூட்டியே உணர்ந்து தங்களை அமைதிப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், தங்கள் தினசரி வாழ்வில் சில மாற்றங்களைச் செய்துகொள்வதும் இதற்கு உதவலாம் என்கிறார், மருத்துவர் பூரண சந்திரிகா. "அடிக்கடி பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பணிச்சூழல் ஒருவருக்கு அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால், அதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டால், அதே சூழ்நிலையில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது," என்று அறிவுறுத்துகிறார். மேலும், உடற்பயிற்சி, தியானம் போன்ற தினசரி வாழ்க்கை முறையில் சில பயிற்சிகளை இணைத்துக்கொள்வதும் இதில் பலனளிக்கலாம் என்கிறார் அவர். கூடுதலாக, இதற்கான உளவியல் சிகிச்சைகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றைச் சீராகப் பின்பற்றினால் பேனிக் அட்டாக் பாதிப்பை முற்றிலுமாகத் தவிர்க்க வாய்ப்புள்ளதாக, தெரிவிக்கிறார் மருத்துவர் பூரண சந்திரிகா. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post