இரானிய அணு விஞ்ஞானியை ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கி மூலம் 'மொசாட்' கொன்றது எப்படி?

post-img
ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 27, 2020 அன்று, மொசாட் முக்கியத்துவம் வாய்ந்த ஆப்ரேஷன் ஒன்றை மேற்கொண்டது. இரானின் ராணுவ அணுசக்தி திட்டத் தலைவர் மொசீன் ஃபக்ர்சாதே, தெஹ்ரானுக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கருப்பு நிற காரில் சென்று கொண்டிருந்தார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஃபக்ர்சாதே காரில் இருந்து கீழே விழுந்தார். அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் மாலை 6:17 மணிக்கு, இரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள் இரானின் பச்சை, வெள்ளை மற்றும் சிவப்புக் கொடியால் மூடப்பட்ட அவரது சவப்பெட்டி இரானின் முக்கிய புனித இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியால், ஃபக்ர்சாதேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் அவரது பிரதிநிதி ஜியாவுதீன் அவர் சார்பாக இரங்கல் செய்தியை வாசித்தார். பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹடாமி, ஃபக்ர்சாதேவின் சவப்பெட்டியை முத்தமிட்டு, "இதற்குப் பழித்தீர்க்கப்படும்" என்றார். கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'டார்கெட் டெஹ்ரான்' என்ற புத்தகத்தில், யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிட்டார் ஃபக்ர்சாதே பற்றி எழுதியுள்ளனர். "அவரைப் பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாகக் காக்கப்பட்டன, அவருடைய சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன" என்று அந்தப் புத்தகத்தில் ஃபக்ர்சாதே பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. "அவரது பிறந்த இடம், தேதிகூடத் தெரியவில்லை. 2011ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் கிளர்ச்சி அமைப்பான 'நேஷனல் கவுன்சில் ஆஃப் ரெசிஸ்டன்ஸ் ஆஃப் இரான்' அவரது படத்தை வெளியிட்டது. அதில் அவர் கருப்பு நிற முடி மற்றும் சற்று நரைத்த தாடியுடன் நடுத்தர வயது மனிதராக இருப்பதைக் காட்டியது.'' ஃபக்ர்சாதே 1958இல் ஓமில் பிறந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 1979 புரட்சிக்குப் பிறகு அவர் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையில் உறுப்பினரானார். பின்னர் இயற்பியலில் பட்டமும், அணுசக்தி பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஃபக்ர்சாதே ஆரம்பத்தில் இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார், ஆனால் அதே நேரத்தில் புரட்சிகர காவல் படையில் பிரிகேடியர் ஜெனரலாக பணியாற்றினார். அவரது மரணத்திற்குப் பிறகு, இரானின் அணுசக்தி திட்டத்தில் அவரது பங்களிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசப்பட்டது. முதன்முறையாக அவரது புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் அவர் அதிபர் ஹசன் ரூஹானியிடம் இருந்து விருது பெறும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவரது குழுவின் மற்ற உறுப்பினர்கள் அலி அக்பர் சாலிஹி (இரான் அணுசக்தி அமைப்பின் தலைவர்) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஹொசைன் டெஹ்கானி அனைவர் முன்னிலையிலும் கௌரவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் ஃபக்ர்சாதேவுக்கு யாரும் இல்லாத தனி அறையில் விருது வழங்கப்பட்டது. அவரின் இருப்பு பற்றி இந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்ட போதிலும், இரானுக்கு வெளியே உள்ள நிபுணர்களுக்கு ஃபக்ர்சாதே பற்றி நன்கு தெரிந்தது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) பல அறிக்கைகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில், 'ஸ்பிகல்' என்ற ஜெர்மன் இதழில், 'இரானின் அணுசக்தி லட்சியங்களின் வரலாறு' என்ற புலனாய்வு செய்தியில் அவரை 'இரானின் ஓப்பன்ஹெய்மர்' (Oppenheimer) என்று விவரித்தனர். அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை ஓப்பன்ஹெய்மர் மேற்பார்வையில் தயாரித்தது. "இரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால், இரானின் அணுகுண்டு ஆயுதத்தின் தந்தை என ஃபக்ர்சாதே அழைக்கப்படுவார்'' என ஒரு மேற்குலக ராஜ்ஜீய அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யோனா ஜெர்மி பாப் மற்றும் இலன் எவிடார் தங்கள் புத்தகத்தில், "ஃபக்ர்சாதே பலமுறை வடகொரியாவுக்கு சென்று அங்கு அணு ஆயுத சோதனைகளை நேரில் பார்த்தார். பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் தலைவர் அப்துல் காதர் கானையும் சந்தித்தார். அவர்தான் யுரேனியத்தை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை இரானுக்கு விற்றார்." இது மட்டுமல்ல, "ஃபக்ர்சாதே ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டினார். இஸ்ஃபஹான் அணுமின் நிலையத்தை உருவாக்கிய சீன அணு விஞ்ஞானிகளுடன் ஃபக்ர்சாதே உறவுகளைப் பேணி வந்தார் என்று இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறையின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஃபர்காஷ் எங்களிடம் கூறினார்" என்றும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஃபக்ர்சாதேவை கொல்ல திட்டமிட்டவர்கள் அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர் செல்லும் பாதைகள் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தனர். செப்டம்பர் 18, 2021 அன்று நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட தங்கள் கட்டுரையில் ரோனென் பெர்க்மேன் மற்றும் ஃபர்னாஸ் ஃபசிஹி இதுகுறித்து எழுதியுள்ளனர். "ஃபக்ர்சாதேவின் மகன்களில் ஒருவரான ஹமீத், இரானிய உளவுத் துறைக்கு அன்றைய தினம் தனது தந்தையைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை வந்ததாகக் கூறுகிறார். அவர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ஃபக்ர்சாதே தனது பாதுகாப்புக் குழுவின் ஆலோசனையைப் பின்பற்றவில்லை". இரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஜெனரல் அலி ஷமகானி, 30 நவம்பர் 2020 அன்று ஃபக்ர்சாதேவின் இறுதிச் சடங்கில், "செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்ட ரிமோட் கன்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் ஃபக்ர்சாதே கொல்லப்பட்டதாக" கூறினார். இஸ்ரேலிய உளவுத்துறை வட்டாரங்கள் 'டார்கெட் தெஹ்ரான்' ஆசிரியர்களிடம் இது அறிவியல் புனைகதை அல்ல என்றும், ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி உண்மையில் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் உறுதிப்படுத்தின. பின்னர் அந்த ஆயுதம் பாகங்களாக இரானுக்குள் கொண்டு வரப்பட்டு ரகசியமாக ஒன்றிணைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த வேலையை சுமார் 20 பேர் கொண்ட குழு எட்டு மாதங்களாகத் திட்டமிட்டு செய்தது. ஃபக்ர்சாதேவின் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் கண்காணித்தனர். ஃபக்ர்சாதேவை கண்காணித்த ஒர் உளவு ஏஜென்ட், "நாங்கள் அந்த நபருடன் சுவாசித்தோம், அவருடன் தூங்கினோம், அவருடன் எழுந்தோம்" என்கிறார் (டார்கெட் டெஹ்ரான், பக்கம் 193). ஃபக்ர்சாதேவின் இறுதி ஊர்வலத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, புரட்சிகர காவல் படையின் துணைத் தளபதி, ரியர் அட்மிரல் அலி ஃபடாவி நடந்ததை விவரித்தார். "ஃபக்ர்சாதே தனது சொந்த காரை ஓட்டிச் சென்றார். அவரது மனைவி அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தார், அவரது மெய்க்காப்பாளர்கள் அவருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பயணம் செய்தனர்." இரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் நியூஸில், 'இரானிய விஞ்ஞானியின் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் ஆயுதம்' என்ற தலைப்பிலான செய்தி வெளியானது. அதில் ''மொசாட்டில் பணிபுரியும் இரானிய ஏஜென்ட்கள்,சாலையில் நீல நிற நிசான் ஜிமியாட் வாகனத்தை நிறுத்தியிருந்தனர்" என்று அலி ஃபடாவி குறிப்பிட்டிருந்தார். "வாகனத்தின் பின்புறத்தில் 7.62 மிமீ அமெரிக்க தயாரிப்பான M240C இயந்திர துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரிமோட் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும்." "மற்றொரு கார் அங்கு நிறுத்தப்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்தது. ஆனால் அதிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஃபக்ர்சாதே அந்த இடத்தை அடைவதற்கு முக்கால் மைல் தூரத்தில் படம் எடுத்து, காரில் அமர்ந்திருப்பது ஃபக்ர்சாதே என்பது உறுதி செய்யப்பட்டது." "ஃபக்ர்சாதேவின் கார் தூரத்தில் தெரிந்தது. கட்டளை கொடுக்கப்பட்டவுடன், இயந்திர துப்பாக்கியில் இருந்து மொத்தம் 13 சுற்றுகள் சுடப்பட்டன. இதைத் தொடர்ந்து இயந்திர துப்பாக்கி தானாக வெடித்துச் சிதறி, அது வைக்கப்பட்டிருந்த வாகனமும் வெடித்துச் சிதறியது" என்கிறார் அலி ஃபடாவி. "அந்த இயந்திர துப்பாக்கி ஃபக்ர்சாதேவின் முகத்தைக் குறிவைத்தது. ஷாட் மிகவும் துல்லியமாக இருந்தது, அவருக்கு அருகில் 25 சென்டிமீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி காயமடையவில்லை." ஜூயிஷ் கிரானிக்கல் எனும் பத்திரிக்கையில் வெளியான 'இரான் விஞ்ஞானியின் கொலைக்குப் பின்னால் உள்ள உண்மை' என்ற கட்டுரையில் பிரபல பத்திரிகையாளர் ஜேக் வாலிஸ் சைமன்ஸ், இந்த விவரத்தை உறுதிப்படுத்தினார். அவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, ரோனென் பெர்க்மேன் டிசம்பர் 4, 2020இல் இஸ்ரேலிய செய்தி தாளான யெடியோத் அஹ்ரோனோத்தில் இதுபற்றி எழுதினார். "அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நினைவாக 12 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட இரவு விருந்தில், அணு ஆயுதங்களை உருவாக்கும் இரானின் முயற்சிகள் பற்றிய ஃபக்ர்சாதேவின் டேப் ஒன்றை பிரதமர் எஹுட் ஓல்மர்ட் போட்டுக் காண்பித்தார்." "நான் உங்களுக்காக ஒரு டேப்பை போடப் போகிறேன். ஆனால் நீங்கள் யாருடனும் இதுபற்றி விவாதிக்க வேண்டாம், சிஐஏ இயக்குனருடன்கூட இதுபற்றிப் பேச வேண்டாம்" என்று ஓல்மர்ட் புஷ்ஷிடம் கூறினார். அவர் ஒரு டிஜிட்டல் மீடியா பிளேயரில் பாரசீக மொழியில் பேசும் ஃபக்ர்சாதேவின் பதிவை ஒலிப்பரப்பினார். அதில், "எங்கள் பாஸ் எங்களிடம் ஐந்து அணு ஆயுதங்களைக் கோருகிறார், ஆனால் இதற்குத் தேவையானவற்றை வழங்கத் தயாராக இல்லை" என்று ஃபக்ர்சாதே பேசியது ஒலித்தது. பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய தகவல்களை அனுப்பிய ஒரு இரானிய ஏஜென்டை இஸ்ரேலிய உளவு அமைப்புகள் ஃபக்ர்சாதே அருகே ரகசியமாக வைத்துள்ளதாக ஓல்மெர்ட் புஷ்ஷிடம் கூறினார். இந்த ஏஜென்ட்தான் ஓல்மெர்ட்டுக்கு ஃபக்ர்சாதேவின் ஆடியோ பதிவுகளை வழங்கினார். ஜூன் 10, 2021 அன்று இஸ்ரேலிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், முன்னாள் மொசாட் தலைவர் யோசி கோஹன் "மொசாட் ஃபக்ர்சாதேவை பற்றி அதிகம் அறிந்திருந்தது, அது அவரது முகவரி, தொலைபேசி எண் மற்றும் அவரது பாஸ்போர்ட் எண்ணையும்கூட அறிந்திருந்தது" என்று கூறினார். ஃபக்ர்சாதே உடனடியாகக் கொல்லப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து மொசாட்டில் கடும் விவாதம் நடந்தது. முன்னாள் இஸ்ரேலிய ராணுவ தலைவர் ஷால் மொஃபாஸின் கூற்றுப்படி, பிரதமர் ஏரியல் ஷாரோன் மொசாட்டின் தலைவராக மெய்ர் தாகனை நியமித்தபோது, அவரைத் தீவிமாகக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டார். கடந்த 2001 முதல் 2010 வரை இரானிய அணுசக்தித் திட்டத்தில் ஃபக்ர்சாதேவின் செல்வாக்கு, அவர் கொல்லப்பட்ட 2020இல் இருந்ததைவிட அதிகமாக இருந்தது. இரானின் அணுசக்தித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய பிறகு ஃபக்ர்சாதே கொல்லப்பட்டார். கடந்த 2020இல் அவர் கொல்லப்பட்டது இரானின் நற்பெயருக்குப் பெரும் அடியாக விழுந்தது. அவர் இல்லாததால், இரானின் அணுசக்தித் திட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஈடுபட்டு வந்த அனுபவமும், அறிவும் கொண்ட ஒரு திறமையான நபரை இரான் இழந்தது. கடந்த 2018இல், பெஞ்சமின் நெதன்யாகு ஒரு செய்தியாளர் சந்திப்பில் இரான் அணுக் காப்பகங்கள் திருடப்பட்டது பற்றி அறிவித்தபோது, அவர் 'ஃபக்ர்சாதே. இந்த பெயரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் கூறினார். எதிர்காலத்தில் இரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்க நினைத்தால், இந்தத் திட்டம் தொடர்பான ரகசிய தகவல்களை உலகுக்கு மறைக்கும் அனுபவம் ஃபக்ர்சாதேவின் வாரிசுகளுக்கு இருக்காது. ஜேக் வாலிஸ் சைமன்ஸ் எழுதியுள்ள தகவலின்படி, "ஃபக்ர்சாதேவுக்கு மாற்றாக ஒருவரைக் கண்டுபிடித்து செயல்பட வைக்க இரானுக்கு குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் ஆகும் என்று இரானிய உள்நாட்டு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அவரது மரணம் இரானின் வெடிகுண்டு தயாரிக்கும் திறனுக்கான காத்திருப்பைக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளதாக நம்புகின்றனர் இஸ்ரேலிய ஆய்வாளர்கள்." Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post