'எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள்?' - வாரத்திற்கு 90 மணிநேரம் பணி செய்யுமாறு கூறிய எல்&டி தலைவர்

post-img
இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 10) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை அன்றும் வேலை செய்ய வேண்டும் என்று எல் அண்ட் டி (L&T) நிறுவனத்தின் தலைவர் என். சுப்ரமணியன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் வாரத்திற்கு 90 மணிநேரம் பணியாளர்கள் வேலை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், "ஞாயிற்றுக் கிழமை அன்று உங்களிடம் வேலை வாங்க இயலவில்லை என்பதை நினைத்து நான் வருந்துகிறேன். என்னால் ஞாயிறு அன்று உங்களிடம் வேலை வாங்க இயலும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமை அன்று பணியாற்றுகிறேன். எவ்வளவு நேரம் தான் வீட்டில் அமர்ந்திருப்பீர்கள்? எவ்வளவு நேரம் தான் உங்களின் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்?" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாளிதழ், "இதுபோன்ற கருத்துகளை பெரும் பதவிகளில் வகிக்கும் தலைவர்கள் கூறுவதை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது," என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கூறியிருப்பதை மேற்கோள் காட்டியுள்ளது. பட்டியலின, பட்டியல் பழங்குடியின மக்கள் மத்தியில் நிலவும் கிரீமிலேயர் தொடர்பான முடிவை எடுக்க வேண்டியது நாடாளுமன்றமும், சட்டமன்றமும் தான் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியினர் மத்தியில் உள்ள வசதி படைத்தவர்களை (கிரீமிலேயர்) கண்டறிவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தோஷ் மாளவியா ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்ற நீதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஜனவரி 9ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "பட்டியலின, பழங்குடியினர் மத்தியில் உள்ள வசதி படைத்த இரண்டாவது தலைமுறைக்கு இடஒதுக்கீடு அளிப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசு நிர்வாகமும், சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுமே" என்று கூறியுள்ளனர். மேலும், ரிட் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்ததாக 'தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகியோர், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் 'கிரீமிலேயேர்' நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று தெரிவித்திருந்தனர். மேலும், இதற்கான புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டில் முதல் தலைமுறையினர் பலன் அடைந்த பிறகு, இரண்டாவது தலைமுறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தனர். சத்தீஸ்கர் காவல்துறையை சேர்ந்த டி.ஆர்.ஜி படை வீரர்கள் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது டி.ஆர்.ஜி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4ம் தேதி அபுஜ்மாத் பகுதியில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, கடந்த 6ம் தேதி பிஜாப்பூர் மாவட்டம், அம்பிலி பகுதியில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின்போது இந்த தாக்குதல் நடைபெற்றது என்றும் இந்து தமிழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்களை தமிழக எல்லையில் காவல்துறையினர் பறிமுதல் செய்து 9 நபர்களை கைது செய்துள்ளனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக எல்லையான பனச்சமூட்டில் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த 5 சிறிய சரக்கு வாகனங்களைச் சோதனையிட்டபோது, அவற்றில் இறைச்சிக் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் என 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post