ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக, தேமுதிக புறக்கணிப்பால் நாம் தமிழர் கட்சி பலன் பெறுமா?

post-img
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இடைத்தேர்தல்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்தொகுதியில் காங்கிரசின் சார்பில் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி அவர் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் காங்கிரசின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இரண்டாண்டுகளுக்குள்ளாகவே இளங்கோவனும் உடல்நலக் குறைவால் டிசம்பர் 14-ஆம் தேதி காலமானார். இதனால் மீண்டும் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் காங்கிரசின் சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என விவாதம் எழுந்த நிலையில், தி.மு.கவே அந்தத் தொகுதியில் போட்டியிடும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்குப் பிறகு, தி.மு.கவின் சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் ஈரோடு கிழக்குத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே 2011 முதல் 2016வரை தே.மு.தி.கவின் சார்பில் இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்நிலையில், இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) ஆகியவை அறிவித்துள்ளன. இதற்கு முன் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அ.தி.மு.கவும் தே.மு.தி.கவும் புறக்கணித்துவிட்ட நிலையில் இந்தத் தேர்தலையும் அக்கட்சிகள் புறக்கணித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், தே.ஜ.கூவின் சார்பில் பா.ம.க. போட்டியிட்டது. ஆனால், இந்தத் தேர்தலை தே.ஜ.கூ. முழுமையாகப் புறக்கணித்திருக்கிறது. ஆகவே, இந்தத் தேர்தலில் தி.மு.கவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் நிற்கிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றிபெறுவது பொதுவான வழக்கமாக இருக்கிறது. ஆனால், வெகு சில தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. 2001ஆம் ஆண்டில் மங்களூர் தொகுதியில் வெற்றிபெற்ற திருமாவளவன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இடையில் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத் தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.கவைத் தோற்கடித்து, தி.மு.கவின் வேட்பாளரான வி. கணேசன் வெற்றிபெற்றார். 2006 முதல் 2011வரையிலான சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் ஆளும் கட்சியான தி.மு.கவே வெற்றிபெற்றது. 2011 முதல் 2016வரையிலான இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவே வெற்றிபெற்றது. 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல், ஒரு வித்தியாசமான முடிவைத் தந்தது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் மதுசூதனனும் தி.மு.கவின் சார்பில் மருது கணேஷ் என்பவரும் சுயேச்சையாக டி.டி.வி. தினகரனும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, வெற்றிபெற்றார். ஆளும் கட்சியான அ.தி.மு.க. இரண்டாவது இடத்தையே பிடித்தது. எதிர்க்கட்சியான தி.மு.கவின் வேட்பாளர் தனது டெபாசிட் தொகையை இழந்தார். 2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆளும் கட்சியைச் சேராத ஒருவர் வெற்றிபெற்றது அதுவே முதல் முறையாக அமைந்தது. இதற்குப் பிறகு, 2019ல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளில் எதிர்க்கட்சியான தி.மு.க வெற்றிபெற்றது. 9 தொகுதிகளில் அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இடைத்தேர்தல்களை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க. புறக்கணித்தது. 2015-ஆம் ஆண்டில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா போட்டியிட்ட நிலையில், அந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்தது. என்ன காரணத்திற்காக அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தாலும் அது தவறு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருப்பதன் மூலம், இந்த அரசையும் அரசின் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் விமர்சிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்து வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், அதே வெற்றி விக்கிரவாண்டியிலும் எதிரொலிக்கும் என அ.தி.மு.க. அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என வைத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தத் தேர்தலையும் அவர்கள் புறக்கணித்திருப்பது சரியாக இல்லை" என்கிறார் அவர். 2009-ஆம் ஆண்டு இடைத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தாலும் பிறகு அது தவறு என உணர்ந்த ஜெயலலிதா அடுத்த வந்த பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். "இடைத் தேர்தல் வந்தால், ஆளும் கட்சி அமைச்சர்கள் அனைவரையும் அந்தத் தொகுதியில் கவனம் செலுத்தச் சொல்கிறது என்ற காரணத்தை எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இடைத் தேர்தல் வந்தால் எல்லாக் கட்சிகளுமே தங்கள் முக்கியப் பிரமுகர்களை அப்படித்தான் குவிக்கும். இடைத் தேர்தலைப் பொறுத்தவரை தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க ஒரு வாய்ப்பு. விக்கிரவாண்டி தேர்தலில் நிச்சயம் சில எதிர்கட்சி தொண்டர்களாவது கட்சி மாறி வாக்களித்திருப்பார்கள். அதே போன்ற வாய்ப்பை இங்கேயும் ஏன் ஏற்படுத்தித்தர வேண்டும். தோல்வி கிடைக்கும் எனத் தெரிந்தாலும் போராடித் தோற்பதுதான் அரசியல் கட்சிகளுக்கு அழகு" என்கிறார். இப்போது ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.கவுக்கு எதிரான பிரதான கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே நிற்பதால், எதிர்க்கட்சிகளுக்கு விழ வேண்டிய வாக்குகள் அனைத்தும் அந்தக் கட்சிக்கு விழுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. தவிர, கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராகத் தெரிவித்துவரும் கருத்துகள் இந்த இடைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் கவனிக்கத்தக்கது. "கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சி கூடுதலாக எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறது எனப் பார்க்க வேண்டும். வேறு எதிர்க்கட்சிகளே இல்லை என்பதால், இந்தத் தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகள் அனைத்தையும் அந்தக் கட்சியின் வாக்குகளாகக் கொள்ள முடியாது. தவிர, பெரியாரைப் பெற்றி சீமான் பேசிவிட்டு, ஈரோட்டில் தேர்தலை எதிர்கொள்கிறார். அதன் தாக்கம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும்" என்கிறார் ப்ரியன். தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள எல்லாக் கட்சிகளுமே ஆளும் தி.மு.க. மீது குற்றம்சுமத்தியே இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. "நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அமைச்சர்களும் தி.மு.கவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும் பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்களையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்" என அ.தி.மு.க. கூறியிருக்கிறது. "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்ததைப்போல மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை நடத்தி தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது" என்று சொல்லியிருக்கிறது தே.மு.தி.க. பா.ஜ.கவும் இதே போன்ற குற்றச்சாட்டுகளைத் தி.மு.க. மீது சுமத்தியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். "தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்றால் அது எப்படி? அது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்கள் நடந்தால் நீதிமன்றங்களை அணுக முடியும். இத்தனை இருந்தும் திட்டமிட்டு, ஆளுங்கட்சியின் மீது குற்றம்சுமத்திவிட்டு, தங்கள் ஜனநாயகக் கடமையிலிருந்து எதிர்க்கட்சிகள் தவறுகிறார்கள்" என்கிறார் கான்ஸ்டைன்டீன். வாக்காளர்களுக்கு தி.மு.க. பணம் கொடுப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளுகிறார் அவர். ஆனால், பல தருணங்களில் இதுபோல தி.மு.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது. "அப்படிப் புறக்கணிப்பதற்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக அதனை ஒரு முறை செய்யலாம். இப்படித் தொடர்ந்து செய்தால் எப்படி?" என்கிறார் கான்ஸ்டைன்டீன். 2026-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு எனக் கூறியிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தல் குறித்து இதுவரை எதையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post