டங்ஸ்டன்: மாநில அரசு உறுதியளித்தும் மக்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள ஆய்வு

post-img
சுற்றிலும் மலைக் குன்றுகள், சுத்தமான நீரோடைகள் என எழில் கொஞ்சும் காட்சி தரும் இந்த கிராமம் இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது. இது அரிட்டாபட்டி. மதுரை மாநகரில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் தேர்வானதாக மத்திய அரசு கடந்த நவம்பர் ஏழாம் தேதி அறிவித்தது. அன்று முதல் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் தமிழ்நாட்டின் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளம் உள்ளடக்குகிறது. 72 ஏரிகள், 200 நீரூற்றுகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை கட்டமைப்புகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், 250-க்கும் அதிகமான பறவையினங்கள், குடைவரை கோவில்கள் என தனித்துவம் வாய்ந்த பகுதி அரிட்டாப்பட்டி. சுரங்க உரிமை வேதாந்தா துணை நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட பின் போராட்டம் தீவிரமான நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஏலம் விடும் அறிவிப்பு வெளியானது முதல் முடிவு வெளியாகும் வரை எந்தவித எதிர்ப்பையும், கவலையையும் தெரிவிக்கவில்லை. நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியின் பரப்பளவில் சுமார் 10 சதவிகிதம் (193.215 ஹெக்டேர்) பல்லுயிர் பெருக்கத் தலமாக உள்ளதைப் பற்றி மாநில அரசு தெரிவித்தாலும், தொகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பரிந்துரைக்கவில்லை என்றும் மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதன்பின்னர் எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்தன. ஆனால், சுரங்கத் துறையின் விளக்கம் தொடர்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை மூலமாக விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். டங்ஸ்டன் தொகுதியை ஏலம் விடுவதால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என மத்திய அமைச்சருக்குக் கடந்த 2023 அக்டோபர் மாதம் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, மேலூரில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான எல்லைகளை வரையறை செய்யுமாறு இந்திய புவியியல் துறைக்கு மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சுரங்கம் அமைவதற்கு மாநில அரசும் எதிர்ப்பைக் காட்டியுள்ளது. ஆனால், மதுரையில் போராட்டம் தொடர்வது ஏன்? களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். ஜனவரி 7 ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் பேரணி ஒன்றை நடத்தினர். அரிட்டாபட்டியில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரையிலான சுமார் 20 கி.மீ தூரத்துக்கு பேரணி நடைபெற்றது. முன்னதாக நடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டக்குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாகனத்தில் பேரணி செல்வதற்கு போலீஸ் அனுமதி அளித்தது. பின்னர், தமுக்கம் மைதானத்தில் கூடி விவசாயிகள், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த மண்ணை விட்டு ஒருபோதும் நகர மாட்டோம் என்கிறார், நரசிங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டி. மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவித்தால் மட்டுமே கனிம சுரங்கம் வருவது தடுக்கப்படும் என்கிறார், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன். மேலூர் தாலுகாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி, மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறுகிறார் மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான். டங்ஸ்டன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூரில் உள்ள 54 கிராமங்களும் பாலைவனமாக மாறிவிடும் என அப்பகுதி மக்கள் பிபிசி தமிழிடம் கவலையை வெளிப்படுத்தினர். இவர்களை பொறுத்தவரையில் அரிட்டாபட்டி மட்டுமல்ல, 48 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியை பாதுகாக்கப்ட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்; அதை தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே செய்ய வேண்டும் என்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த மக்கள் ஒரு தெளிவான செய்தியை சொல்கிறார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post