மதுரை சிறை விவகாரம்.. கடலூர் சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

post-img
மதுரை: மதுரை மத்திய சிறையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கைதிகள் பல்வேறு பொருட்களை தயாரித்ததிலும், விற்பனை செய்ததிலும், கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த வழக்கில் மதுரை சிறை முன்னாள் எஸ்பி ஊர்மிளா, ஜெயிலர் வசந்த கண்ணன், சங்கரசுப்பு, சாந்தி உள்பட 11 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிறை எஸ்பி ஊர்மிளாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கைதிகள் பல்வேறு பொருட்களை தயாரித்து வந்தார்கள். இதற்கான மூலப்பொருட்களை கொள்முதல் செய்ததிலும், சிறையில் தயாரான பொருட்களை விற்பனை செய்ததிலும் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார். இதில் ரூ.1 கோடியே 63 லட்சம் முறைகேடு நடந்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதுரை சிறை முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயிலர் வசந்த கண்ணன், சங்கரசுப்பு, சாந்தி உள்பட 11 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ஊர்மிளா, தற்போது கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக உள்ளார். இந்தநிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய சங்கரசுப்பு, சீனிவாசன், சாந்தி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரை மட்டுமல்ல சென்னை புழல், கடலூர் உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிறைகளில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், மதுரை சிறை மோசடி தொடர்பாக மட்டும் வழக்குபதிவு செய்தது ஏற்புடையதல்ல என ஓய்வு பெற்ற சிறை ஊழியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதத்தையும் பதிவு செய்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று பிறப்பித்தார். அதில், சிறையில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்தது, மூலப்பொருட்களை கொள்முதல் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மனுதாரர்கள் முன்ஜாமீன் கோருவது ஏற்புடையதல்ல. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், புதுச்சேரியை சேர்ந்த கோகிலா என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், "என் கணவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் உள்ளார். சிறையில் அவர் வேலை செய்வதற்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 4 மாதங்களாக வழங்கவில்லை என்று கூறியிருந்தார். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தமிழின் முன்னாளி நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தை குறிப்பிட்டும் வக்கீல் புகழேந்தி வாதம் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறை முறைகேடு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "சிறை கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நியாயமான விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கூறும் போது, "தவறு செய்தவர்கள் திருத்துவதற்காகத்தான் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் . ஆனால் அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவேண்டிய சிறைத்துறை அதிகாரிகளே குற்ற செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது? இந்த விவகாரத்தில் தவறு செய்த சிறை உயர் அதிகாரிகள் உள்பட அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, உடனடியாக இடைநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post