புதுச்சேரி அருகே தனியார் மதுபான பாரில் அடித்தே கொல்லப்பட்ட கடலூர் இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்

post-img
புதுச்சேரி: கடலூர் வெள்ளப்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்த முத்து என்பவர் நண்பர்களுடன் புதுச்சேரியின் பாகூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுக்கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அங்கு மது குடித்துக் கொண்டிருந்த போது, இரு பிரிவாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனியாக சிக்கிய முத்துவை, எதிர்கோஷ்டியினர் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள் மதுக்கடை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது . கடலூர் வெள்ளப்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்த 32 வயதாகும் முத்து என்பவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். முத்து கடந்த 8-ந்தேதி அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுக்கடைக்கு மது குடிக்க சென்றிருக்கிறார். அங்கு எதிரே இருந்த டேபிளில் மது குடித்து கொண்டிருந்த இரண்டாயிரவிளாகம் என்ற கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜுக்கும், குருவிநத்தத்தைச் சேர்ந்த ரஞ்சித், ராஜேஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் 2 தரப்பினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். அப்போது மதுக்கடையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்களில் முத்து எதிர் கோஷ்டியிடம் வசமாக சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகராறில் ஆத்திரமடைந்த அவர்கள் முத்துவை கல்லாலும், பீர் பாட்டிலாலும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள. படுகாயம் அடைந்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து பாகூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ், ராஜேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்து உயிரிழந்தார். இதையடுத்து பாகூர் போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றினார்கள். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட முத்துவின் உறவினர்கள் மற்றும் வெள்ளப்பாக்கம் கிராம மக்ககள் 200-க்கும் மேற்பட்டோர் தனியார் பார் எதிரே ஒன்று திரண்டனர். இதனால் பயந்துபோன தனியார் மதுக்கடை ஊழியர்கள், மதுக்கடையை மூடிவிட்டு, உடனடியாக அங்கிருந்து சென்று விட்டனர். எனினும் மதுக்கடை முன்பு சாலையில் அமர்ந்து முத்துவின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாகூர் போலீசார் மற்றும் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர் கலைந்து சென்றனர். இளைஞரை சாதி அடிப்படையில் தாக்கியதாகவும், புதுச்சேரி எல்லைக்கு மது குடிக்க வரும் தமிழக இளைஞர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்றும் அந்த கிராம மக்கள் போலீசாரிடம் குற்றம்சாட்டினார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post