கோவைக்கு அடித்த ஜாக்பாட்.. ஈவி வாகனங்களுக்கான சோதனை வளாகம் அமையப் போகுது

post-img
கோவை: கோவையில் இருசக்கர மின்சார வாகனங்களுக்குத் தேவையான பாகங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், முக்கியமான பாகங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில் நவீன பொது சோதனை வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டம் ஐடி துறை, இயந்திரங்கள் தயாரிப்பு, உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னணி நிறுவனத்தினர் பலரும் கோவையில் தங்களது நிறுவனங்களைத் தொடங்க போட்டி போடும் அளவுக்கு இந்தியாவில் கோவை பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். கோவை மாட்டத்தில் மோட்டார், பம்ப்செட், மிக்ஸி, கிரைண்டர் என பல்வேறு வகையிலான இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு சக்கர மின்சார வாகனங்களுக்குத் தேவையான பாகங்கள் தயாரிப்பிலும் இம்மாவட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை ஆகிய பிரிவுகளில் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள கோவை, தற்போது வளர்ந்து வரும் புது வாகன தொழில்நுட்ப துறையான மின்சார வாகன உற்பத்திக்குயிலும் ஒரு முக்கிய பகுதியாக உருவெடுத்து வருகிறது. கோவையில் இரண்டு சக்கர மின்சார வாகனங்களுக்கான பாகங்களை 70 நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்ளுக்கு மின் மோட்டார் மற்றும் கண்டிரோலர்கள் ஆகியவை முக்கிய உதிரி பாகங்களாக உள்ளன. இந்நிலையில், இந்த பாகங்களை சோதனை செய்து பார்க்கும் வகையில் ஒரு நவீன பொது சோதனை வளாகம் அவசியமாக உள்ளது. பல்வேறு தரப்பினரும் சோதனை வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இதனை அறிந்து கொண்ட 'அறிவியல் மற்றும் தொழில் துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்' (சிட்டார்க்) எனும் தொழில்துறை அமைப்பு கோவை குறிச்சி சிட்கோவில் ரூ. 9.97 கோடி மதிப்பில் 'சிட்டார்க் ஈ.வி. அறக்கட்டளை' எனும் வளாகத்தை அமைக்கவுள்ளது. இந்த வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்களும் இங்கு சோதனை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் கோவை மாவட்டம் எலக்ட்ரிக் வாகன பாகங்கள் தயாரிப்பில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன பரிசோதனை வளாகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது அரசு மற்றும் தனியாரின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படவுள்ளது. இந்த வளாகம் அமைப்பதற்காக 90 சதீதம் நிதி தமிழக அரசு சார்பிலும், 10 சதவீதம் நிதி தனியார் நிறுவனங்கள் சார்பிலும் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உருவாகவுள்ள இந்த மையத்தில் அதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஒரு 6 மாத காலத்திற்குள் இந்நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை வளாகம் அமைவதால் மின்சார வாகன பாகங்கள் உற்பத்தியை மேற்கொண்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்று தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post