அஜித் குமார்: துபாய் ஹெச்24 கார் பந்தயத்தில் பெற்ற வெற்றி என்ன? பிரபலங்கள் கூறுவது என்ன?

post-img
துபாயில் நடைபெற்று வரும் 24 மணிநேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், அஜித் குமார் 414ஆம் எண் கொண்ட காரின் ஓட்டுநராக கலந்துகொண்டார். அவருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியை அஜித் குமாரின் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அஜித் குமாரின் அணி பங்கெடுத்த பந்தயங்கள் என்ன? அவரது அணி வெற்றி பெற்றுள்ள பந்தயத்தின் விவரங்கள் யாவை? நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதைக் கடந்து இளமைக் காலம் முதலே கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். அஜித்குமார், சமீப காலமாக படப்பிடிப்பு முடிந்த காலகட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்துகொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். திரைக்கு வரவுள்ள விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவர் கார் பந்தயத்தில் பங்கெடுக்க துபாய் சென்றார். அஜித் குமார், தான் மட்டுமின்றி ஆர்வமுள்ள இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக ஓர் அணியை உருவாக்கியுள்ளார். இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ள போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் பிரத்யேகமாகத் தயார் செய்தார் அஜித். இதன் முன்புறத்தில் அஜித்குமார் ரேசிங் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பயிற்சியின்போது பிரேக் ஃபெயிலியர் ஆனதால் அவரது கார் விபத்துக்கு உள்ளானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்துத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில், அஜித்குமார் குறிப்பிட்ட ரேஸில் மட்டுமே கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் அணி போர்ஷே 992 கப் கார் (எண் 901) ரேஸ், போர்ஷே கேமன் GT4 (எண் 414) ரேஸ் என இரண்டு பிரிவுகளில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் GT4 ரேஸில் மட்டும் அஜித் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு கார் பந்தயங்களின் முடிவில் அஜித்குமார் அணியானது போர்ஷே 992 கப் கார் ரேஸ் பிரிவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது அதோடு, எண் 414 பிரிவில் பந்தயத்தில் கலந்துகொண்ட அஜித்குமாருக்கு 'ஸ்ப்ரிட் ஆஃப் தி ரேஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. முதல்முறையாக ஒரு சர்வதேச ரேஸில் பங்கேற்ற அஜித்குமார் அணி, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அஜித்குமார் தனது அணியுடன் கொண்டாடினார். இந்திய தேசியக் கொடியோடு உற்சாகத்துடன் வெளியில் ஓடி வந்த அஜித்குமார், ரசிகர்களிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். GT4 பிரிவில் அஜித் தன்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்ததாகவும், பிரேக் ஃபெய்லியரால் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு அவர் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அஜித்குமார் ரேஸிங் அணி தெரிவித்துள்ளது. 992 பிரிவில் 3வது இடம்பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி, ஒட்டுமொத்தமாக 23வது இடத்தைப் பிடித்துள்ளது. அஜித் குமாரின் ரேஸிங் அணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் மற்றும் அவரது அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கும் அவரது அணியினரின் சாதனைக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நடிகர் அஜித் குமார் அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது, இந்தியாவுக்கு பெருமையான தருணமாக உள்ளது. அஜித் குமார்தான் பங்கேற்கும் துறைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார். அவர் தனது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் மூலம் பலரையும் ஊக்குவித்து வருகிறார்," என்று கூறியுள்ளார். இந்த கார் பந்தயத்தை நேரில் பார்வையிட்ட நடிகர் மாதவன், தனது சமூக ஊடக பக்கத்தில் அஜித்துடன் இணைந்திருக்கும் ஒரு படத்தைப் பதிவிட்டு, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, "மிகவும் பெருமையாக உள்ளது. என்னவொரு மனிதர், அஜித் குமார்," என்று கூறியுள்ளார். குட் பேக் அக்லி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் இந்திய தேசியக் கொடியை அசைத்து தனது மகனுடன் கோப்பையைத் தூக்கும் வீடியோவை வெளியிட்டு, "நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் அனைவரும் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்," என்று வாழ்த்தியுள்ளார். இயக்குநர் சிவா தனது எக்ஸ் பக்கத்தில், "அன்புள்ள அஜித் சார், உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வெற்றி பெறுங்கள், எப்போதும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு மிகுந்த மரியாதையையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். - பிபிசி தமிழுக்காக துபாயில் இருந்து சுபாஷ் அனுப்பிய தகவல்களுடன் Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post