இதுதான் உண்மையான லக்.. கனவில் வந்த லாட்டரி நம்பரை வாங்கியவருக்கு அடித்த யோகம்.. லட்சாதிபதியான நபர்

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவில் இது தான் உண்மையான லக் என்று சொல்லும் வகையில், பெண் ஒருவருக்கு லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. அவரது கனவில் தோன்றிய லாட்டரி நம்பரை வாங்கியதில் அவருக்கு ரூபாய் 40 லட்சம் பரிசாக அடித்துள்ளது. அதிர்ஷடம் யாருக்கு எப்போது அடிக்கும் என்று தெரியாது என சொல்வார்கள். சினிமாவில் வருவது போல ஒரே பாட்டில் கார், பங்களா என வாங்கி லைஃப்பில் செட்டில் ஆக வேண்டும் என்றால் லாட்டரியில் பணம் அடித்தால்தான் உண்டு என பலரும் சொல்வதை கேட்டு இருப்போம்.. லாட்டரி டிக்கெட்டுகளில் பரிசு வென்றவர்களை விட பணத்தை இழந்தவர்களே அதிகம். ஆனாலும், என்றாவது ஒரு நாள் நமக்கும் லக் அடித்து விடாதா என்ற ஆசையில் பலரும் லாட்டரி அனுமதி உள்ள இடங்களில் லாட்டரி வாங்கும் பழக்கம் லாட்டரி பிரியர்களுக்கு உள்ளது. லாட்டரியை வாங்கிவிட்டு பரிசுத்தொகை அடிக்காதவர்கள்.. வெற்றி பெற்ற எண்ணை வைத்துக்கொண்டு இந்த எண் நமக்கு முன்பே தெரிந்து இருந்தால் வாங்கியிருக்கலாமே என பகல் கனவு காண்பார்கள். இன்னும் சிலரோ.. கனவில் முந்தைய நாளே அதிர்ஷ்ட தேவதை வந்து பரிசு அடிக்க போகும் எண்ணை சொல்லிவிட்டு சென்றால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்து இருப்பார்கள்.. இந்த சம்பவம் கிட்டதட்ட உண்மையாகி அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு பரிசு அடித்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.. அமெரிக்காவின் மேரிலாண்ட் மகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். தனக்கு விழுந்த டிக்கெட்டில் இதுவரை பெரிதாக பரிசுத்தொகை அடிக்காவிட்டாலும் என்றாவது ஒருநாள் பரிசுத்தொகை விழும் என அதீத நம்பிக்கையில் வாங்கி வந்து இருக்கிறார். இவரது கனவில் திடீரென்று 9-9-0-0-0, என்ற எண்ணுக்கு பரிசு விழப்போகுது என்று தோன்றியிருக்கிறது . காலையில் விழித்த பிறகும் கனவில் வந்த அந்த எண் அவரது மனதுக்குள் ஒடிக்கொண்டே இருந்துள்ளது. சரி அதே எண்ணை வாங்கித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் பிக்5 டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். ஆக்சான் ஹில் பகுதியில் உள்ள ஜிப் மார்ட் ஒன்றில் இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் அந்த பெண் வாங்கிய லாட்டரிக்கு 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம்) பரிசாக அடித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அந்த பெண், லாட்டரியில் பரிசு விழுந்தது பற்றி தனது கணவரிடம் சொல்லி சந்தோஷத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை எல்லாம் கொண்டாடி முடித்துவிட்டதால் இந்த பணத்தை வேறு வகையில் செலவிடலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம். லாட்டரியில் பரிசு அடித்த பெண்ணின் கணவர் கூறுகையில், "எனது மனைவி முதலில் டிக்கெட்டை காட்டும் போது நம்பவில்லை. மிடாஸ் டச் என்று சொல்வார்களே அதுபோல தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post