'என் வலியை நான்தான் சொல்ல முடியும்' - சென்னை புத்தகக் கண்காட்சியில் கவனம் ஈர்க்கும் திருநங்கை பிரெஸ்

post-img
"யார் வேண்டுமானாலும் திருநர் சமூகத்தினர் குறித்து எழுதலாம். மற்றவர்கள், எங்களிடம் இருந்து கேட்ட கதைகளைத்தான் எழுதுவார்கள். ஆனால், என் வரலாற்றை நான் எழுதுவதுதான் சிறப்பாக இருக்கும். என் வலியை நான்தான் மக்களுக்கு நேரடியாகக் கடத்த முடியும்" என தீர்க்கமாக நம்புகிறார் கிரேஸ் பானு. திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட திருநர் சமூகம் மற்றும் பால்புதுமையினர் (LGBTQ+) குறித்த புத்தகங்களுக்காக பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் 'திருநங்கை பிரெஸ்' எனும் பதிப்பகம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களை ஈர்த்து வருகிறது. அந்தப் பதிப்பகத்தின் நிறுவனரும் திருநர் உரிமைகள் சமூக செயற்பாட்டாளருமான கிரேஸ் பானு, ஏன் திருநர்களுக்கான பிரத்யேக பதிப்பகத்தைத் தொடங்க வேண்டியிருந்தது என்பது குறித்தும் இத்தகைய புத்தகங்களுக்கு பொதுச் சமூகம் அளிக்கும் வரவேற்பு குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு வாக்கில், தனது முதல் புத்தகமான 'கிரேஸ் பானுவின் சிந்தனைகள்' புத்தகத்தை வெளியிடுவதில் புறக்கணிப்புகளைச் சந்தித்ததாகக் கூறுகிறார் கிரேஸ் பானு. அந்த அனுபவங்கள்தான், தனது புத்தகங்களைத் தானே வெளியிடுவதற்கும் திருநர்களுக்கான பதிப்பகத்தைத் தொடங்குவதற்குமான ஊக்கத்தை அவருக்கு அளித்துள்ளது. "என் முதல் புத்தகத்தை வெளியிடுவதில் பல சிக்கல்களைச் சந்தித்தேன். முன்னணி பதிப்பகங்கள் என் புத்தகத்தை வெளியிட முன்வரவில்லை. சில பதிப்பகங்கள் நேரடியாகவே புத்தகத்தை வெளியிட மறுத்துவிடுவார்கள். சில பதிப்பகங்கள் பல மாதங்கள் அல்லது ஓர் ஆண்டுகூட பதிலே கூறாமல் காலத்தைக் கடத்துவார்கள். அதனால், நானே என் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தேன்." அதைத் தொடர்ந்து, கடந்த 2022இல் கிராமப்புற திருநங்கை ஒருவர் தன்னுடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுமாறு கேட்டபோது அதைச் செய்ததாகவும், பின்னர் படிப்படியாக, 'திருநங்கை பிரெஸ்' எனும் பதிப்பகத்தை 2022இல் தொடங்கியதாகவும் கூறுகிறார் கிரேஸ் பானு. "மற்றவர்களிடம் எங்கள் புத்தகத்தைக் கொண்டு சென்றால், அவர்களுக்கு ஏற்றார்போல் அதை 'எடிட்' செய்து வெளியிடுகின்றனர். அவர்களுக்குத் தகுந்தாற்போலவே அந்தப் புத்தகங்கள் பேசப்படுகின்றன. இதனால்தான் தனியே பதிப்பகம் தொடங்கினேன்" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் பதிப்பகம் நடத்தும் முதல் திருநங்கையாகக் கருதப்படும் கிரேஸ் பானு அடிப்படையில் ஒரு பொறியாளர். அவர் எழுத்து, சமூக செயல்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். இந்த ஆண்டு கிரேஸ் பானு எழுதிய 'கிரேஸ் பானுவின் சிந்தனைகள் - இரண்டாம் பாகம்', ' பாலத்தீனப் பறவை' ஆகிய புத்தகங்கள் வெளியாகியுள்ளன. 'பஸ்தி' எனும் அவருடைய சிறுகதைத் தொகுப்பு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுதவிர, திருநங்கை ஆல்கா ஆரோன் எழுதிய 'காலிடுக்கில் ஒப்பந்தங்கள்' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருநம்பி சோனேஷ் எழுதிய 'உன்னைக்கொடு', திருநம்பி ஸ்ரீகாந்த் எழுதிய 'அவளுக்கென' ஆகிய கவிதைத் தொகுப்புகள் உள்படப் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திருநர் சமூகத்தினரால் எழுதப்பட்ட புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறுகிறார், கிரேஸ். "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் புத்தகங்களை வாங்கிச் செல்வது எங்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. படித்துவிட்டு புத்தகம் குறித்த அவர்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்." திருநர் சமூகம் எதைப் பேச வேண்டும் என பொதுச் சமூகம் நினைப்பதில் மாற்றம் வர வேண்டும் எனக் கருதுகிறார் கிரேஸ். "எங்களை அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்' என்பதையே நாங்கள் எங்கள் எழுத்துகளில் கூற வேண்டும் என நினைக்கிறார்கள். இவற்றையே நாங்கள் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை. என்னைத் தாக்கிய விஷயங்களை மட்டும் பேசாமல் அதற்கான முடிவும் உரிமையும் வேண்டும் என்பதையே நாங்கள் எங்களின் எழுத்துகளில் பேசுகிறோம்." அவருடைய 'பாலஸ்தீனப் பறவை' புத்தகம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனுக்கு சென்றபோது நிகழ்ந்த அனுபவங்கள் குறித்துப் பேசுகிறது. இஸ்ரேல்-காஸா போர் சூழலுக்கு நடுவே, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகங்களில் பேசுவதற்கான வாய்ப்பு கிரேஸ் பானுவுக்கு கிடைத்தது. அப்போது, பாலத்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்த மாணவர்கள் பலரைச் சந்தித்து, அவர்களின் எண்ணங்கள் குறித்து அப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அவர். "இஸ்ரேலுக்காக வெடிமருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாலத்தீன திருநங்கை ஒருவரைச் சந்தித்தேன். அதற்கு தண்டனையாக, அவருடைய காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. அவர் எங்கு சென்றாலும் கண்காணிக்கப்படுவார்." "மனித சமூகத்திற்கு எதிரான கொடூரம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக நான் போராடினேன். அதற்குக் கிடைத்த பரிசாக ஜிபிஎஸ் பொருத்தியுள்ளனர்' என்று அவர் என்னிடம் தெரிவித்தார். அவருடைய அனுபவத்தையும் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன்" எனத் தெரிவித்தார் கிரேஸ் பானு. 'காலிடுக்கில் ஒப்பந்தங்கள்' எனும் கவிதை நூலை எழுதிய ஆல்காவிடம் பேசினோம். "இந்தக் கவிதைகள் அனைத்தையும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, பெண்ணியம் சார்ந்த பார்வையில் எழுதியுள்ளேன். குடும்பம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பல்வேறு தளங்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை இந்தப் புத்தகம் பேசுகிறது" என்றார் ஆல்கா. அவரைப் பொறுத்தவரை 'திருநங்கை' என்பது ஒரு வார்த்தைதான். "மற்றபடி, நாங்கள் பெண்களாகத்தான் வாழ்கிறோம். சமூகத்தில் இருந்து தனித்த ஒரு வாழ்க்கை வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் என் குடும்பத்துடன்தான் வாழ்கிறேன். அப்படியான நிலை திருநர் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் ஏற்பட வேண்டும்" எனக் கூறுகிறார் ஆல்கா. தலித் பெண்களின் பார்வையிலிருந்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார் அவர். "குறிப்பாக அதிகம் பேசப்படாத, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள் உள்ள பெண்களுக்கு அச்சமூகத்தில் உள்ள ஆண்களாலேயே நேரும் பாலினப் பாகுபாடுகள், வன்முறைகள் குறித்து அக்கவிதையில் கவனப்படுத்தியுள்ளேன்." திருநர் சமூகத்தில் குறிப்பாக திருநம்பிகள் எழுதுவதென்பது அரிதாகவே இருக்கிறது. அந்த வகையில், கோவையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் திருநம்பி சோனேஷ், 'உன்னைக்கொடு' எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். "திருநம்பி ஒருவருக்குக் காதல் ஏக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்த கவிதைகள்தான் இவை. எங்களைப் பொறுத்தவரை காதல் என்பது நிறைவேறாத கனவுதான். என்னுடைய காதல் ஏக்கங்களைத்தான் கவிதைகளாக அளித்திருக்கிறேன்" என்றார் பிபிசி தமிழிடம் பேசிய சோனேஷ். "எங்களையும் சிலர் காதலிப்பார்கள். ஆனால், அதுவொரு மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நீடிக்கும். யாரிடமும் சொல்ல முடியாத வலியை எழுத்து மூலமாக வெளிப்படுத்தும்போது ஆத்ம திருப்தி ஏற்படுகிறது, அது எங்களுக்கு நிதானத்தைத் தருகிறது" என்கிறார் அவர். திருநர் சமூகத்தின் உணர்வுகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்வதற்கு மொழிபெயர்ப்பாளரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்தகைய புத்தகங்களை மொழிபெயர்ப்பதில் குறிப்பிடத்தக்க சவால்களும் உள்ளன. கிரேஸ் பானுவின் 'பஸ்தி' புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஷாலினி செந்தில்நாதன் பேசுகையில், "கடை கேட்பது' என்ற வார்த்தை இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பொதுவாக 'begging', 'commercial begging' வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. அதனால் தமிழில் மட்டும் பயன்படுத்தப்படும் இத்தகைய வார்த்தைகளை அப்படியேதான் பயன்படுத்தியுள்ளேன். அதேபோன்று, பாலியல் தொழிலுக்காக திருநங்கைகள் மறைவிலிருந்து காத்திருப்பதை 'தந்தாமேடு' என்கின்றனர். அந்த வார்த்தையையும் அப்படியேதான் பயன்படுத்தினோம்" என்கிறார் அவர். தமிழ்நாட்டில், திருநங்கை சமூகத்தில் இருந்து முன்னோடிகள் பலர் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளனர். குறிப்பாக, அ.ரேவதி, பிரியா பாபு, கல்கி சுப்ரமணியம், லிவிங் ஸ்மைல் வித்யா உள்ளிட்டோர் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளனர். பாலின அசமத்துவம் நிறைந்திருக்கும் இலக்கிய உலகில், பால்புதுமையினர் எழுதுவது மிக அரிது. அப்படி எழுதும் வெகு சிலரில் அனைவருக்கும் முன்னோடியாக விளங்குபவர் அ.ரேவதி. இவர் எழுதிய முதல் புத்தகம் 'உணர்வும் உருவமும்'. இந்தியாவில் திருநங்கைகள் குறித்து திருநங்கை ஒருவரே எழுதிய முதல் புத்தகம் என்ற பெருமைக்குரியது. கடந்த 2019ஆம் ஆண்டு புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்லர் நூலகத்தின் முன்பு உலகப் புகழ்பெற்ற, பெரிதும் அறியப்படுகிற 8 பெண் எழுத்தாளர்களின் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தன. மாயா ஏஞ்சலோ, குளோரியா அன்சால்டுவா, டயானா சாங், சோரா நீல் ஹர்ஸ்டன், டோனி மாரிசன், லெஸ்லி மார்மன் சில்கோ, ஷாங்கே உள்ளிட்ட எழுத்தாளர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அ.ரேவதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த அளவுக்கு எழுத்துலகில் தனி முத்திரையைப் பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளராக திருநங்கை அ.ரேவதி திகழ்கிறார். "அமெரிக்காவில் கருப்பின திருநங்கைகள் பரவலாக எழுதுகின்றனர். அமெரிக்காவில் ரக்கெல் வில்லிஸ், மிஸ் மேஜர் கிரிஃபின்-கிரேசி உள்ளிட்டோர் புகழ்பெற்றவர்களாக உள்ளனர். அங்கு திருநர் சமூகம் எழுதுவதென்பது பரவலாக உள்ளது. தமிழ்நாட்டில் சமீப காலமாக திருநர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் எழுத ஆரம்பித்துள்ளனர். கவிதைகளைத் தாண்டி கட்டுரைகள், வரலாறு குறித்த கட்டுரைகள் வெளிவருகின்றன" எனக் கூறுகிறார் கிரேஸ் பானு. "எழுத்து என்பது உணர்வுகளையும் வலிகளையும் பேசக்கூடிய ஒரு விஷயம். அறிவுசார்ந்த பரப்புரையை மேற்கொள்வதற்கான ஆயுதம். திருநர் சமூக மக்களின் பிரச்னைகள், வாழ்வியல் சூழல்கள், அநீதிகள், அநீதிக்கு எதிரான மௌனங்களை நாங்கள் பேசுகிறோம். அதை எழுத்து மூலமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன். எழுத்து நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. நிறைய பேரை மனிதர்களாக மாற்றியுள்ளது" என்றார் கிரேஸ் பானு. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post