இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை

post-img
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய, இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவியான கலகொடாத்தே ஞானசாரவுக்கு ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதால் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார, ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் முக்கிய நபர். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தெரிவித்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையில் பௌத்த துறவிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஆனால் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்திற்கு எதிராக வெறுப்பைப் பரப்பும் கருத்துகளைப் பேசி வந்த ஞானசாரவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இது இரண்டாவது முறை. கடந்த 2018ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல்ரீதியாக கார்ட்டூன் வரையும் கலைஞர் ஒருவரின் மனைவியை மிரட்டிய விவகாரத்தில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு அந்த சிறைத் தண்டனைக்கு எதிராக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போதைய வழக்கை விசாரித்த கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை, ஜனவரி 9ஆம் தேதியன்று, தீர்ப்பளித்த நீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின்படி எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை சுதந்திரமாகப் பின்பற்ற உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவருக்கு 1500 இலங்கை ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. அதைச் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார மேல்முறையீடு செய்துள்ளார். கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் ஒருவராக ஞானசார அறியப்படுகிறார். 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். கோட்டாபயவின் ஆட்சிக் காலத்தில் சிங்கள பௌத்த தேசிய குழுவை வழி நடத்தினார் ஞானசார. மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பணிக் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரதீக் எக்னெலிகொட அரசியல் கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். ஆளும் சிங்கள அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வந்த அவரை 2010ஆம் ஆண்டு முதல் காணவில்லை. இந்நிலையில், அவருடைய மனைவி சந்தியா எக்னெலிகொடவை மிரட்டியதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் 2018ஆம் ஆண்டு அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்கள் கழித்து, அன்றைய ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்ரிபால சிறிசேன அவருக்கு பொது மன்னிப்பை வழங்கினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post