'9 ஆண்டுகள், 3 முறை ஐ.வி.எஃப், 2 கருக்கலைப்புகள்' - சிகிச்சை தரும் உடல், மன வலியை பகிரும் பிபிசி செய்தியாளர்

post-img
"கருவை உள்ளே வைப்பதற்கு உங்களின் கருப்பை தயாராகிவிட்டது," என மருத்துவர் டியஸ் என்னிடம் கூறினார். அப்போது அவர், ஐ.வி.எஃப் சிகிச்சையின் ஒருபகுதியாக என் கருப்பையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்துக்கொண்டிருந்தார். நான்காவது முறையாக இந்த சிகிச்சையை நான் மேற்கொள்கிறேன். ஒன்பது ஆண்டுகளாக கர்ப்பமடைவதற்காக நான் முயற்சித்து வரும் நிலையில், இந்த செய்தி என்னை உற்சாகமடைய செய்தது. ஆனால், முன்பு நடந்தது போன்றே இம்முறையும் நடந்துவிடுமோ என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது. முன்பும் இந்த சிகிச்சையின்போது எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, நான் ஆவலுடன் இருந்தேன். ஆனால், அதன்பின் கருக்கலைந்து நான் ஏமாற்றம் அடைந்தேன். அதுகுறித்து நினைத்தாலே பெரும் அச்சம் ஏற்படுகிறது. 2016ல் நாங்கள் ஜப்பானில் வசித்து வந்தபோது, தனியார் மருத்துவமனை ஒன்றில்தான், எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நானும் என் கணவரும் அறிந்தோம். அப்போது எனக்கு 33 வயது, செபாஸ்டியனுக்கு (கணவர்) 36 வயது. எனக்கு ஹார்மோனில் சமநிலையற்ற தன்மை இருப்பதும், என் கணவரின் விந்தணுக்கள் நகரும் தன்மையில் சிக்கல் உள்ளதையும் குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர் கூறினார். இப்போது என்னுடைய வயதும் ஒரு பிரச்னையாக உள்ளது, ஏனெனில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களுடைய கருமுட்டைகளின் தரம் குறைகிறது. கர்ப்பமடைய முயற்சித்து ஓராண்டாகியும் கர்ப்பமடைய முடியாத தம்பதிகள், குழந்தை பெற முடியாதவர்களாகக் கருதப்படுகின்றனர். உலகளவில் கர்ப்பமடையும் வயதிலுள்ள ஐந்தில் ஒருவர் இவ்வாறு உள்ளதாக, உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ஐ.வி.எஃப். சிகிச்சை (பரவலாக செயற்கை கருத்தரிப்பு என அறியப்படுகிறது) மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தபோது, நாங்கள் முன்பு அறிந்திராத ஒரு புதிய உலகம் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டமிடப்படாத கருத்தரிப்பை தவிர்ப்பது எப்படி என்ற விழிப்புணர்வு நமக்கு இருக்கும் நிலையில், குழந்தை பெற முடியாததை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கூறப்படவில்லை. நாங்கள் மிகவும் அப்பாவியாக இருந்தோம். எங்களுக்குக் குழந்தை பிறந்தால், அது காதல் இன்பத்தின் விளைவாக இருக்காது என்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்து, எங்களிடம் ஒரு தீர்வு இருப்பதாக நினைத்தோம்: அதுதான் ஐ.வி.எஃப். இப்படிதான் திடீர் திருப்பங்களுடன் கூடிய இந்த பயணத்தைத் தொடங்கினோம். ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன, மூன்று முறை ஐ.வி.எஃப் சிகிச்சை தோல்வியடைந்துவிட்டது, அதில் இரண்டு முறை கருக்கலைப்பு ஏற்பட்டது. என்னால் கருத்தரிக்க முடியாது என்பது குறித்து சில காலமாக நான் அவமானகரமாகவும் அமைதியாகவும் இருந்தேன். தாங்கள் எப்படி கருவுற்றோம் என்பது குறித்துப் பலரும் பேசமாட்டார்கள், ஆனால் அந்த அமைதி பிரச்னையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தேன். அதுகுறித்துப் பேசுவது லட்சக்கணக்கானோர் அதற்கான சிகிச்சைகள் கிடைக்கப் பெறுவதற்கும் அல்லது அவர்கள் அதுகுறித்துப் பேசுவதற்கு மிகவும் சௌகரியமாகவும் உணரச்செய்யும் என நம்புகிறேன். ஐ.வி.எஃப் சிகிச்சையில் பெண்ணின் கருப்பையிலிருந்து கருமுட்டைகள் அகற்றப்பட்டு, ஆய்வகத்தில் வைத்து விந்தணுக்கள் செலுத்தப்பட்டு கருவூட்டப்படும். 'எம்ப்ரியோ' என அழைக்கப்படும் இந்த கருவூட்டப்பட்ட முட்டை, பெண்ணின் கருப்பைக்குள் உட்செலுத்தப்படும். நாங்கள் தற்போது வசித்துவரும் லண்டனில் உள்ள தனியார் கிளீனிக் ஒன்றில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்வதற்கு முன்பு, என் கருப்பையில் அதிகளவிலான முட்டைகள் உருவாகும்பொருட்டு, 10 நாட்கள் அதிக டோஸ் கொண்ட ஹார்மோன் ஊசிகளை செலுத்தியிருந்தேன். கருவுறுவதற்கு ஏற்ப, கூடுமானவரை அதிகளவிலான கருமுட்டைகளை உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இம்முறை 26 கருமுட்டைகள் இருந்தன. இது ஒரு முழுமையான வெற்றி என, கிளீனிக்கில் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், ஐந்து நாட்கள் காத்திருப்புக்குப் பின் அந்த கருமுட்டைகள் எந்தளவுக்கு வளர்ந்துள்ளன என்பதை பார்த்தபோது, அதில் ஆறு மட்டும் தப்பிப்பிழைத்தன. மரபியல் பரிசோதனையில், அந்த ஆறு முட்டைகளில் ஒரு முட்டைதான் நல்ல நிலையிலிருந்தது, அதைதான் என் கருப்பைக்குள் வைக்க வேண்டியிருக்கும். மருத்துவர் டியஸின் வார்த்தைகள் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்வதற்கான சமிக்ஞையை கொடுத்தது, அந்த தருணம் எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. நான் எப்போதும் நேர்மறையான எண்ணத்தை உடையவள், இம்முறை நிச்சயம் இது வேலை செய்யும். இன்னும் ஐந்து நாட்களில் கருமுட்டை கருப்பைக்குள் செலுத்தப்படும் எனவும் அந்த சிகிச்சை வலிமிகுந்தது அல்ல என்றும் மருத்துவர் கூறினார். அந்த நாள் வந்தபோது, நாங்கள் கிளீனிக்குக்கு சென்றோம். என்னைப் போன்றே செபாஸ்டியனும் பதற்றமாக இருந்தார். அந்த நாளில் எந்தவொரு வாசனை திரவியத்தையும் பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் எச்சரிக்கப்பட்டிருந்தோம், ஏனெனில் அது இந்த சிகிச்சையில் இடையூறை ஏற்படுத்தும். எங்கள் இருவருக்கும் அறுவை சிகிச்சைக்கான ஆடை அணிவிக்கப்பட்டது. இந்த சிறிய கருமுட்டை நாங்கள் இதுவரை ஏங்கிக்கொண்டிருக்கும் குழந்தையாக வளரும் என செபாஸ்டியன் ஆர்வமாக உள்ளார். இந்த நடைமுறை முழுவதும் அவர் என் கையை பற்றிக்கொண்டு இருந்தார், அது என்னை லேசாக உணரவைத்தது. எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கையின் பரிசாக கருதப்படும் ஒன்றுக்காக நாங்கள் இங்கே மீண்டும் முயற்சிக்கிறோம். எல்லாம் சரியாக நடந்து, கருமுட்டை எனக்குள் உட்செலுத்தப்பட்டால் எனக்கு ஹெச்.ஜி.சி எனும் கர்ப்பகால ஹார்மோன் சுரக்கும், இந்த சிகிச்சையையடுத்து 10 நாட்களில் வீட்டிலிருந்தே அந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதனிடையே, நான் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தினசரி மூன்று வேளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக, என்னுடைய மொபைலில் நான் அலாரம் வைத்துள்ளேன், அதன்படி காலை 08:00 மணிக்கு 2 எம்ஜி ஓயெஸ்டிராடியல் (oestradiol), 10:00 மணிக்கு 400 எம்ஜி புரோஜெஸ்டீரோன் (progesterone) எடுக்க வேண்டும். இந்த இரு ஹார்மோன்களும் கர்ப்பத்திற்கு ஊக்கமளிக்கும் ஹார்மோன்கள். மேலும், இரவு 9:00 மணிக்கு கிலெக்ஸேன் (clexane) ஊசியை எடுக்க வேண்டும், இது ரத்த உறைதலை தடுப்பதற்கானது. வீட்டில் நான் கர்ப்பமானது போன்ற காட்சிகளை கற்பனையாக நினைத்துக்கொள்வேன் : என் கணவர், என் பெற்றோர், குடும்பம் மற்றும் நண்பர்களின் மகிழ்ச்சி குறித்து நினைப்பேன். என்னுடைய வயிறு வளர்வது போன்று எண்ணிப் பார்ப்பேன். இந்த நீண்ட நெடிய பயணத்தின் முடிவு அது. இதேபோன்ற தருணத்தில் நாங்கள் இருந்தது இப்போது மட்டுமல்ல என்பதை நான் நினைவில் வைத்துள்ளேன். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கு இடையே மோசமான நினைவுகளும் வந்துசெல்லும். தோல்வியடைந்த சிகிச்சையால் ஏற்படும் ஏமாற்றம் குறித்த பயம் அல்லது கருமுட்டை உட்செலுத்துவதில் தோல்வி ஏற்படுவது, கருக்கலைவது குறித்த பயம் ஏற்படும். "இல்லை, இந்தமுறை நிலைமை நிச்சயம் மாறும்" என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். கருத்தரிக்க முடியாதது இன்னும் சமூக அவலமாக பார்க்கப்படுகிறது. ஆனால், என்னுடைய இந்த பயணத்தில் வித்தியாசமாக எனக்கு லாரா போன்ற அழகான பரிசுகள் கிடைத்தன. அவர் இந்த பயணத்தில் எனக்கு ஆதரவான தோழி. அவர் என்னுடைய நெருக்கமான நண்பர்களுள் ஒருவர். அவர், பியூனோஸ் ஏரெஸில் வசிக்கிறார். நான் அனுபவிக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ளும் ஒருவரிடம் பேசுவதோ அவரிடம் அழுவதோ அல்லது சிரிப்பதோ ஒரு தெரபி போன்றது. ஒவ்வொரு சிகிச்சை குறித்தும் தோல்வி மற்றும் மகிழ்ச்சி குறித்தும் நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வோம்: 8 ஆண்டுகால சிகிச்சைக்குப் பின் லாராவுக்கு நடாலி என்ற மகள் சமீபத்தில்தான் பிறந்தார். "அது மிகவும் கடினமான பயணம், மற்றவர்கள் முன்பு மகிழ்ச்சியாக இல்லாதது குறித்து நீங்கள் குற்ற உணர்வு கொள்வீர்கள்," என தன் நண்பர்களுக்குக் குழந்தைகள் இருப்பது குறித்து தான் என்ன நினைக்கிறேன் என்பதை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். "உங்களின் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை ஆகிய நல்ல விஷயங்களை இழப்பதுபோன்று உணர்வீர்கள். எங்கேயோ ஓரிடத்தில் சிக்கிக்கொண்டு, அமைதியான வாழ்க்கையை வாழமுடியாதது போன்று இருக்கும்," என தாயானதற்கான தன்னுடைய கடினமான பயணம் குறித்து அவர் கூறினார். உலகிலேயே கருத்தரிப்பு சிகிச்சைகள் சிறப்பாக கிடைக்கும் நாடாக அர்ஜெண்டினா உள்ளது. ஆண்டுக்கு மூன்று முறை முழுமையான நிதியுடன் கூடிய சிகிச்சைகளை ஒருவர் பெறமுடியும். இது நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தரிப்பு என்பது முழுமையாக ஆய்வு செய்யப்படாத ஒன்று என்றும் அதற்கான சிகிச்சைகளுக்கு நிதி போதாமை நிலவுவதாகவும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளால் அந்த சிகிச்சைகளை அணுக முடிவதில்லை என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்தது. கருத்தரிப்பு சிகிச்சை தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என அது உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், சிகிச்சை வெற்றி பெறும் விகிதம் குறைவாக இருந்தபோதிலும், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த பணத்திலிருந்து பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது, இந்த சிகிச்சை வெற்றி பெறும் விகிதம் 22% ஆக இருப்பதாக, சர்வதேச இனப்பெருக்க உதவி தொழில்நுட்பம் கண்காணிப்புக்கான ஆணையம் கூறுகிறது. இந்த அமைப்பு உலக சுகாதார மையத்துடன் இணைந்து பணிபுரியும் லாப நோக்கற்ற அமைப்பாகும். ஸ்பெயின், நார்வே, பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஐ.வி.எஃப் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஒரு முறை அந்த சிகிச்சையை மேற்கொண்டு, குழந்தை பிறப்பதற்கு 4,230 முதல் 12,680 டாலர் செலவாகிறது. அதாவது, இந்திய மதிப்பில் 3.66 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஒருமுறைக்கு மேல் இதை முயற்சி செய்ததற்கு என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். மேலும், இந்த சிகிச்சை பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், நாம் கடன்களை வாங்க வேண்டியிருக்கும். என்னுடைய முதல் சிகிச்சையின் செலவை என்.ஹெச்.எஸ் (தேசிய சுகாதார சேவை) மேற்கொண்டது. எத்தனை முறை வரை சிகிச்சைக்கு என்.ஹெச்.எஸ். பணம் செலுத்தும் என்பது, நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், வயது உள்ளிட்ட காரணங்களை பொறுத்து மாறுபடும். நான் பிறந்த எக்வடார் நாட்டில் இதற்கென இலவச சிகிச்சை இல்லை. எம்ப்ரியோ கருப்பைக்குள் செலுத்தப்பட்ட பின்னர் வரும் 10 நாட்கள் மெதுவான, வலிமிகுந்த நாட்களாகும். என்னுடைய உணர்வுகள் மற்றும் உடல்ரீதியான அறிகுறிகள் குறித்து நாட்குறிப்பில் எழுதுமாறு என்னுடைய மனநல ஆலோசகர் தெரிவித்தார். முதல் நாள்: நம்பிக்கையாக இருந்தது. நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன், இது என் நேரம் என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இரண்டாம் நாள்: மார்பகத்தில் வலி ஏற்பட்டது, ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். உணர்வுகள் மாறிக்கொண்டே இருந்தன. இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. உண்மையில் அவை ஏழு ஆண்டுகள் போன்று இருந்தது. ஐந்தாம் நாள்: எக்வடாரில் அன்னையர் தினம் இன்று. அச்சமாக இருந்தது. கடந்தாண்டு, இரண்டாவது முறையாக கருக்கலைந்து, என் தாயிடம் அதைக் கூற வேண்டாம் என முடிவெடுத்ததை நினைவூட்டியது. வேதனையாக இருந்தது, நாள் முழுதும் அழுதுகொண்டிருந்தேன். ஒன்பதாம் நாள்: கர்ப்பப் பரிசோதனைக்கான நாள் வந்துவிட்டது, அது எனக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை ஆண்டு காலத்தில் பல எதிர்மறையான முடிவுகளை நான் பார்த்துள்ளேன், அதனாலேயே எனக்குப் பரிசோதனை என்றாலே பயம் ஏற்பட்டிருந்தது. பத்தாம் நாள்: கர்ப்பப் பரிசோதனை: ஒரேயொரு வெள்ளை கோடுதான் வந்தது, இரண்டாவது கோடு வரவில்லை. பரிசோதனை தோல்வியில் முடிந்தது. இன்னுமொருமுறை கர்ப்பப் பரிசோதனை தோல்வியடைந்தது. அனைத்தும் முறிந்துவிட்டது போன்ற உணர்வு. அனைத்து நம்பிக்கையும் போய்விட்டது, இது என்னுடைய நிரந்தரமான உணர்வு என்பதுபோன்று இருந்தது. சில நாட்கள் என் கணவருடன் இருட்டான அறையில் இருக்க வேண்டும், யாருடனும் பேச வேண்டாம் என தோன்றியது. ஒவ்வொருமுறை தோல்வியடையும்போதும் வருத்தமான ஒன்றாக இருக்கும்: மறுப்பு, கோபம், மன அழுத்தம், அதைத்தொடர்ந்து அந்த நிலைமையை ஏற்றுக்கொள்ளுதல் என இந்த நடைமுறை தொடரும். உங்களை நேசிப்பவர்கள் மீண்டும் உங்களை ஆதரிப்பார்கள். ஃபாலிக்கிள்ஸ், எம்ப்ரியோ கல்ச்சர், விட்ரிஃபிகேஷன் என பல வார்த்தைகளை நான் இந்த பயணத்தில் கற்றுக்கொண்டேன். இந்த பயணத்தில் வெவ்வேறு உணர்வுகளை கடந்து வந்துள்ளேன். கீழே விழுந்து மீண்டும் எழுந்துள்ளேன். எவ்வளவு காலம் நான் இதை முயற்சிப்பேன் என எனக்குத் தெரியவில்லை. தாயாக ஆவதற்கு வேறு வழிகளும் உள்ளன என்பதை நான் அறிவேன். குழந்தையை தத்தெடுப்பது குறித்தும் பரிசீலனை செய்கிறேன், அதுவும் மிக நீளமான, நிச்சயமற்ற பயணம் ஆகும். என்னால் ஒருபோதும் தாயாகவே முடியாது என்ற எண்ணமும் எனக்கு உள்ளது. இந்த கதை எப்படி முடியும் என்பது தெரியவில்லை. கருத்தரிக்க முடியாதது என்பது என் வாழ்க்கையின் மற்றொரு அத்தியாயம். எனக்குள் அது தடயங்களை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் அது நான் யார் என்பதை விவரிக்காது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post