கோவை: மாட்டிறைச்சி கடை போட்ட முஸ்லிம் தம்பதியை பாஜக நிர்வாகி மிரட்டினாரா? என்ன நடந்தது?

post-img
கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சி கடை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தம்பதியரை மிரட்டிய பாரதிய ஜனதா நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள உடையாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி–ஆபிதா தம்பதியினர், சர்க்கார்சாமக்குளம் நடுநிலைப் பள்ளி அருகில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணிக் கடை வைத்துள்ளனர். இந்தக் கடைக்கு, உணவு பாதுகாப்புத்துறையிடம் சாலையோர உணவுக் கடை என்று முறைப்படி பதிவு செய்து அதற்கான சான்றிதழ் பெற்று நடத்தி வந்துள்ளனர். இந்தக் கடையை நடத்துவதற்கு, மாநகராட்சியிடமும் முறைப்படி உரிமம் பெற்றுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ரவி. இதே பகுதியில் தள்ளுவண்டிகளில் வேறு சில அசைவ உணவகங்களும் நடத்தப்படுகின்றன. கடந்த டிசம்பர் 25ஆம் தேதியன்று, ரவி–ஆபிதா கடைக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாஜக இதர பிற்படுத்தப்பட்ட அணியின் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் சிலர், மாட்டிறைச்சிக் கடை நடத்தக்கூடாது என்று மிரட்டியதாக ஆபிதா பெயரில் மாநகர காவல் ஆணையரிடம் தரப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய ஆபிதா, ''எங்களை அவர் மிரட்டியபோது, பக்கத்தில் மீன் கடை, சிக்கன் கடை இருக்கும்போது, எங்களை மட்டும் ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு மாட்டிறைச்சிக் கடை போடக்கூடாது என்று அவரும், அவருடன் வந்த 6 பேரும் மிரட்டினார்கள். அன்று கடை போட முடியாமல் எல்லாமே வீணாகிவிட்டது. அதற்குப் பிறகு மீண்டும் கடையைத் திறந்தோம். பின்பு, ஜனவரி 5ஆம் தேதியன்று மீண்டும் வந்து எங்களை மிரட்டினார்'' என்று தெரிவித்தார். காவல்துறையில் இவர்கள் புகார் தெரிவிப்பதற்கு முன்பே, இவர்களுடைய கடையில் சுப்பிரமணி பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதில் கடையை எடுக்கச் சொல்லும் சுப்பிரமணியிடம், மீன் கடை, சிக்கன் கடை இருக்கும்போது, மாட்டிறைச்சிக் கடை மட்டும் ஏன் போடக்கூடாது என்று ஆபிதா பலமுறை கேள்வி எழுப்புகிறார். அதற்கு சுப்பிரமணி, 'ஊர்க்கட்டுப்பாடு. மாட்டிறைச்சிக் கடை போடக் கூடாது' என்கிறார். இவர்களின் வாக்குவாதத்தில், ஊர்த்தலைவர், கவுன்சிலர் பெயர்களும் இடம் பெறுகின்றன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், அதை வைத்துப் பலரும், ''உத்தர பிரதேசம் போல கோவையில் ஊர்க்கட்டுப்பாடு; மாட்டிறைச்சிக் கடை நடத்தத் தடை'' என்று கருத்துகளைப் பதிவிட்டனர். அதன்பின், சுப்பிரமணி தரப்பில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், ''10 நாட்களுக்கு முன்பே அவர்கள் மாட்டிறைச்சிக் கடை போட்டபோது, ஊர்க் கட்டுப்பாட்டின்படி, இங்கு மாட்டிறைச்சிக் கடை போடக் கூடாது, இன்று மட்டும் போட்டுக் கொள்ளுங்கள், இனிமேல் போடக் கூடாது என்று சொன்னோம். கவுன்சிலரிடம் சொல்லி விட்டதாகக் கூறி மீண்டும் கடை போட்டனர். பக்கத்தில் கோவில் இருப்பதால் எந்த அசைவ உணவுக் கடையும் இங்கு போட வேண்டாமென்றுதான் சொன்னேன். மது அருந்திவிட்டு, இங்கு வந்து இறைச்சி சாப்பிடுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது'' என்று பேசியுள்ளார் சுப்பிரமணி. அந்தப் பகுதியிலுள்ள அசைவக் கடைகள் அனைத்தையும்தான் எடுக்கச் சொன்னதாக அந்த வீடியோவில் விளக்கம் அளிக்கும் சுப்பிரமணி, வாடகைக் கடையில் வைத்து வியாபாரம் செய்தால் கேட்க முடியாது என்றும், பொது இடம் என்பதால்தான் கேட்கிறோம் என்றும் சொல்கிறார். மேலும், இட்லி, தோசை என எந்த சைவ உணவையும் விற்றுக் கொள்ளலாம் என்று மட்டுமே தெரிவித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மாட்டிறைச்சிக் கடையை எடுக்குமாறு சுப்பிரமணி பேசிய வீடியோ வெளியானதும், காட்சி ஊடகங்கள் சார்பில், ரவி–ஆபிதா தம்பதியரிடம் கருத்து கேட்டபோது, சாதியரீதியாகத் தங்களை மிரட்டுவதாக புகார் தெரிவித்து இருந்தனர். அதற்கும் தனது பதில் வீடியோவில் சுப்பிரமணி விளக்கம் அளித்திருந்தார். ''இந்தப் பகுதியில் இறைச்சிக் கடை வைக்கக்கூடாது என்பது ஊரின் கட்டுப்பாடு. இங்கே எனக்கு அருகில் இருப்பவர்கள் எல்லோரும் வேறு வேறு சாதியினர்தான். நான் பாரதிய ஜனதாவில் இருக்கிறேன். ஊர்த் தலைவர் திமுகவை சேர்ந்தவர். கவுன்சிலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். ஊர் ஒற்றுமைக்காகத்தான் இதைச் சொன்னேன்'' என்றும் சுப்பிரமணி அதில் தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக, இரு தரப்பிலும் காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இன்று (ஜனவரி 9) காலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. பிபிசி தமிழிடம் பேசிய தமுமுக மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ''இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அவரவர் விரும்பும் உணவை உண்ணும் அதிகாரம் உள்ளது. ஆனால் இங்கே ஊர்க் கட்டுப்பாடு என்று கூறி, மாட்டிறைச்சிக் கடை போடக்கூடாது எனச் சொல்வது சட்டத்தைக் கையில் எடுக்கும் செயல் இதை இப்போதே கிள்ளியெறிய வேண்டும். பொதுவெளியில் ஆபிதாவை மிரட்டிய சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையரும் உறுதியளித்துள்ளார்'' என்றார். இவர்களைத் தொடர்ந்து, ரவி–ஆபிதா தம்பதியரும், காவல் ஆணையரிடம் வந்து ஒரு புகார் கொடுத்தனர். ஆபிதா பெயரில் தரப்பட்ட அந்தப் புகாரில், மாட்டிறைச்சிக் கடை போடக்கூடாது என்று தங்களை மிரட்டிய சுப்பிரமணி மற்றும் அவருடன் சேர்ந்து தங்களை மிரட்டிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக வேறு சில அமைப்பினரும் உடன் வந்திருந்தனர். சாதியரீதியாக மிரட்டிய குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆபிதா, ''எனது கணவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவர் மதம் மாறித்தான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். வருவாய்க்கு போதிய வழியின்றி, 15 நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடையைப் போட்டோம். அந்தப் பகுதியில் மீன் கடை, சிக்கன் கடை எல்லாம் இருப்பதால் நாங்கள் எங்களுக்குத் தெரிந்த மாட்டிறைச்சிக் கடையை வைத்தோம்'' என்றார். மேற்கொண்டு பேசிய இருவரும், நாங்கள் சிலருக்கு அனுப்பிய வீடியோவை சமூக ஊடகங்களில் மற்றவர்கள் பகிர்ந்ததற்காக போலீசார் தங்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தனர். தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், போலீசார் தங்கள் உயிருக்கும், தொழில் செய்யவும் பாதுகாப்பு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது பல தரப்பினரும் புகார் கொடுத்து வரும் நிலையில், "மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ரவி–ஆபிதா தம்பதி மீது நடவடிக்கை எடுக்குமாறு" துடியலுார் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதுபற்றி கருத்துக் கேட்பதற்காக பாரதிய ஜனதா நிர்வாகி சுப்பிரமணியை தொடர்பு கொண்டபோது, அவருடைய அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் தரப்பு பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ''அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் எந்த அசைவக் கடையும் வைக்கக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு என்றுதான் சுப்பிரமணி கூறியுள்ளார். அவருக்குத் தெரியாமல் அதை வீடியோ எடுத்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட்டனர். மற்ற அசைவக் கடைகள் வேறு பகுதியில்தான் இருக்கின்றன'' என்றார். ஊர்க் கட்டுப்பாடு என்பதற்கு யார் அதிகாரம் அளித்தது என்று அவரிடம் கேட்டபோது, ''அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலை வைத்து எல்லா மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதற்குப் பெயர்தான் ஊர்க்கட்டுப்பாடு'' என்றார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ராமமூர்த்தியின் பெயரும் அடிபடுவதால், அக்கட்சி சார்பில் காவல்துறையிடம் விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் பத்மநாபன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும், தங்கள் கட்சி கவுன்சிலரின் பெயரை பாஜக நிர்வாகி தவறாகப் பயன்படுத்தி விட்டதாகவும், கவுன்சிலர் சொல்லித்தான் கடையை எடுக்கச் சொல்வதாக அவர் கூறியது உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் பிபிசி தமிழிடம் பேசிய கவுன்சிலர் ராமமூர்த்தி, ''கோவிலுக்கு அருகில் அந்தப் பெண் கடை வைத்ததுதான் பிரச்னையாக ஆக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் சற்று தள்ளித்தான் வைக்கப்பட்டுள்ளன. ஊர்க் கட்டுப்பாடு என்பது எதுவும் கிடையாது. இப்போது ஒட்டு மொத்தமாக எல்லா கடைகளும் அகற்றப்பட்டுவிட்டன. வேறு எந்தப் பிரச்னையும் அங்கு எழுவதற்கு வாய்ப்பில்லை'' என்றார். இரு தரப்பு சார்பிலும் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, இரு தரப்பு புகார்கள் குறித்தும் சட்டப்பூர்வமான ஆலோசனைகளைக் கேட்டு, அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாட்டிறைச்சிக் கடை போடக்கூடாது என்று சொன்ன சுப்பிரமணியின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்க் கட்டுப்பாடு என்பதற்கு சட்டப்பூர்வமாக எந்த அதிகாரமும் கிடையாது. அதை அனுமதிக்கவும் முடியாது'' என்றார். இதற்கிடையில், இன்று பிற்பகல் கோவைக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு சமுதாயத்தினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டே, பாஜக நிர்வாகி பேசியதை முன்னும் பின்னுமாக எடிட் செய்து, ஒரு நிமிட வீடியோ மட்டும் வெளியிடப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ''அவர் கோவிலுக்குப் பக்கத்தில் மாட்டிறைச்சி பிரியாணிக் கடையும் வேண்டாம்; மீன் பிரியாணிக் கடையும் வேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இரு சமுதாயத்துக்கு இடையே பிரச்னையை ஏற்படுத்தப் பார்த்ததற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்கள் தரப்பில் புகார் கொடுத்துள்ளோம். பாஜக நிர்வாகி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம்'' என்று அண்ணாமலை தெரிவித்தார். ஆபிதா புகாரின்பேரில், பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது, பிஎன்எஸ் 126 (2), 182, 196 மற்றும் 251/2 என நான்கு பிரிவுகளில் வழக்குத் தொடுத்திருப்பதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கோவை மாநகர போலீசார் தெரிவித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் பரவிய நிலையில், இரவு 8 மணியளவில் உடையாம்பாளையம் சந்திப்புப் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோவை மாநகர துணை ஆணையர் தேவநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "சுப்பிரமணி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், மாட்டிறைச்சி கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டு இரு சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்திய ரவி–ஆபிதா மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஆனால் புகார் கொடுத்தவர்கள் புகாரை வாபஸ் பெறாமல் வழக்கைத் திரும்பப் பெற முடியாது என்று கூறிய போலீசார், பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் முக்கால் மணிநேரத்துக்கும் மேலாக அங்கு போக்குவரத்து தடைபட்டது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post