'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?

post-img
துபையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தொடரில் (24H series) 911 போர்ஷே கார் பிரிவில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெகு நாட்களாகவே ஊடகங்களிடம் பேசுவதைத் தவிர்த்துவந்த நடிகர் அஜித் குமார், இந்த கார் பந்தய நிகழ்வின் போது ஊடகங்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். துபையில் அவர் அளித்த ஒரு சமீபத்திய நேர்காணலில், "படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?" என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் அஜித் பேசும் அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் குறித்து மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு, பாதுகாப்பாக இரு சக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசியுள்ளார். துபை 24 மணிநேர கார் பந்தயத் தொடரில் தனது அணி பெற்ற வெற்றிக்காக வாழ்த்திய மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித். அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் பக்கத்தில் இந்த அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே துபையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் அஜித் அளித்த பேட்டியில், "விளையாட்டு மற்றும் பயணங்களை நான் மிகவும் விரும்புகிறேன். என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், உற்சாகத்துடன் வேலைக்கு (சினிமா) திரும்பவும் உதவுவது அவை தான். எனது பிள்ளைகளுக்கும் அதை கற்றுக் கொடுக்கிறேன்" என்று கூறினார். பல வருடங்களுக்கு பிறகு ஊடகத்திற்கு அவர் அளிக்கும் ஒரு முழு நேர்காணல் இது. சில மாதங்களுக்கு முன்பாக மதங்கள் மனிதர்களை எப்படி மாற்றும் என்பது குறித்து அவர் தெரிவித்த கருத்தை, இந்த நேர்காணலில் மீண்டும் சுட்டிக்காட்டினார். "மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்கள் மீது கூட வெறுப்பைத் தூண்டும் என்று ஒரு வாசகம் உள்ளது. அது உண்மை தான். மதம், சாதி எதுவாக இருந்தாலும் சரி. மனிதர்களை சந்திக்கும் முன்பே அவர்கள் மீதான தவறான மதிப்பீடுகளை செய்து விடுகிறோம்." "நீங்கள் பயணங்கள் மேற்கொண்டால் வெவ்வேறு தேசம், மதம், கலாசாரத்தைச் சேர்ந்த மக்களை காண்பீர்கள். இதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும். பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும்" என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான ஒரு காணொளியில் அவர் பேசியிருந்தார். அஜித்தின் அந்தக் கருத்து, அவரது ரசிகர்களால் மட்டுமின்றி பலராலும் அப்போது பாராட்டப்பட்டது. துபையில் அவர் அளித்த நேர்காணலில் கார் பந்தயத்தில் இருக்கும் சவால்கள் குறித்தும் பேசினார். "ஒருமுறை காருக்குள் அமர்ந்துவிட்டால், பிரேக் மீதும் ரேஸ் டிராக் மீதும் மட்டும் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். இது சினிமா அல்ல, இங்கு உங்களுக்கு ரீடேக் (Retake) கிடையாது. ஒரு நொடி கவனம் சிதறினால், அது படுகாயங்களை ஏற்படுத்தும் அல்லது உயிரைப் பறித்துவிடும்" என்றார். இந்த பந்தயங்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், விதிமுறைகளுடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வேகமாக வாகனங்களை இயக்குவது உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நிலவும் வெறுப்பு குறித்து பேசிய அவர், "அது பிரபலங்களை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கிறது. உடல்நலமும் மனநலமும் முக்கியம். என் ரசிகர்களுக்கு நான் சொல்வது, வாழ்க்கை மிகச் சிறியது, அப்படியிருக்க ஏன் வெறுப்பைப் பரப்ப வேண்டும்? உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறினார். அந்த நேர்காணலின் இறுதியில், "திரைப்படங்களை பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரிதான். அஜித் வாழ்க அல்லது விஜய் வாழ்க என்று சொல்கிறீர்கள். நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் இந்த பேரன்பிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்." "நீங்கள், என்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் மீதும், பிற மனிதர்கள் மீதும் அன்பு செலுத்தி, நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால் மிகவும் மகிழ்வேன். வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே அதை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்" என்று அஜித் தெரிவித்தார். அஜித்தின் இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துகளை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். "நான் விஜய் ரசிகன், ஆனாலும் நீங்கள் சொன்னதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நீங்கள் சிறந்த மனிதர்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். "அஜித்தின் முந்தைய நேர்காணல்களிலும் கூட மனிதர்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பும் மரியாதையும் வெளிப்படும். அவர் எப்போதும் ஒரே மாதிரியான மனிதராகவே இருக்கிறார், சினிமாவில் அறிமுகமானபோதும் இப்போது உச்சத்தில் இருக்கும் போதும்" என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "அஜித் என்றால் தனி பிராண்ட். தன்னுடைய சுயநலத்துக்காக ரசிகரை வழிநடத்தாமல் நேரான பாதையில் கொண்டு செல்லும் அஜித்குமாருக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போலவே உங்கள் ரசிகனும் நல்வழியில் செல்வான் என்ற நம்பிக்கை நீங்கள் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று சொல்லும்போதே வந்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார். "நடிப்பு என்பது தொழில் என்பதில் நடிகர்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நிழலை நிஜம் என்று நம்பும் ரசிகர்கள் தான் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். அவர்களை தான் இவர் கூறுகிறார்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு 'உங்கள் வாழ்க்கையை பாருங்கள்' என்ற ரீதியில் வேண்டுகோள் விடுப்பதோ அல்லது திரைப்படங்களைக் கடந்து தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்துவதோ இது முதல் முறையல்ல. நடிகர் அஜித் குமார், கடந்த 2011ஆம் ஆண்டு தனது ரசிகர் நற்பணி மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். "கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள், என் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை." "சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறேன். நலத் திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம், நல் உள்ளமும் எண்ணமும் போதும் என்பதே என் கருத்து." என்று அப்போது அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பாக, சமூக வலைத்தளங்களில் அஜித்தின் பெயரைப் பயன்படுத்தி 'கடவுளே, அஜித்தே' என்ற வாசகம் வைரலானது. அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், "சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க… அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது." "எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியளவும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்." என்று தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டில், தன்னை இனிமேல் 'தல' என்று அழைக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களிடம் நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்து, மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post