அநுர குமார திஸாநாயக்க: இந்தியாவை தாண்டி சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணுவாரா?

post-img
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வ விஜயமாக இன்று சீனா சென்றுள்ளார். வரும்17-ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்திருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் கூறுகிறது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவான பிறகு அநுர குமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு கடந்த மாதம் 15-ஆம் தேதி மேற்கொண்டிருந்தார். இந்திய விஜயம் முடிவுற்று ஒரு மாத காலத்தில் அவர் சீனாவுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. 1,500 இலங்கை அரச சேவையாளர்களுக்கு இந்தியாவினால் பயிற்சி பாடநெறி வேலைத்திட்டம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வரி நடைமுறைகளில் இரு தரப்பு வரிகளை இல்லாது செய்யும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற இரண்டு உடன்படிக்கைகள் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்டன. அத்துடன், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்கா உடன்படிக்கையை கையெழுத்திடுவது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி எட்காவுக்கு கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே சீனாவிற்கான விஜயத்தை அநுர குமார திஸாநாயக்க மேற்கொள்கின்றார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தை இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் அவதானிக்கும் என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார். ''சீனாவுக்கு அவர் பயணம் செய்வது என்பது வழமையானது. இலங்கையை பொருத்தவரை எந்தவொரு ஜனாதிபதியும் பதவியேற்றவுடன், அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணிப்பார்கள். முதலில் இந்தியாவுக்குதான் பயணிப்பார்கள். அதன் பின்னர் சீனாவுக்கு செல்வார்கள்." என்கிறார். "இலங்கைக்கு எப்போதும் சீனாவுடன் உறவு இருக்கின்றது. ஆனால், இலங்கையில் இந்தியாவை மீறி சீனாவினால் எதுவும் செய்ய முடியாது. இந்த பயணத்தின் போது முதலீடுகள் மற்றும் பொருளாதார உதவிகளை பற்றிதான் பேச போகின்றார்கள்." என்றும் அவர் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், "நிச்சயமாக இந்த பயணத்தில் இந்தியாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு எதிரான, விடயங்களை பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை." "ஆனால், அந்த விடயங்களில் சீனா அழுத்தங்களை கொடுத்தாலும், ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா போன்றோர் இந்த விடயத்தில் எவ்வாறான முறையை கையாண்டார்களோ அதே முறையைதான் அநுர குமார திஸாநாயக்கவும் கையாள்வார். இந்த பயணம் பெரிய தாக்கத்தை செலுத்தாது. குறிப்பாக இலங்கைக்கான உதவிகளைதான் கொண்டு வரும்" என்று கூறுகிறார். ஆனால், இந்தோ-பசிபிக் போட்டியால் இந்தியா, இந்த பயணத்தை மிகவும் எச்சரிக்கையும் பார்ப்பதாக சிங்கள ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன. ''இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கும். எனினும், அளவுக்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருக்கும் என சொல்ல முடியாது'' என்று அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார். இந்தியாவை தாண்டி, சீனாவுடன் அநுர குமார திஸாநாயக்க நெருங்கிய உறவை பேணுவாரா என்ற கேள்விக்கும் அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் பதிலளித்தார். ''இலங்கையில் சீனாவின் முதலீடுகள் என்பது இந்தியாவுக்கு பாதகமாக இருக்கக்கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீனாவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்பது எதிர்பார்ப்பாகும்." என்கிறார் அவர். அடுத்தது சீனாவின் ராணுவ ரீதியான செயற்பாடுகளுக்கு இலங்கையில் எந்தவொரு இடமும் தளமாக அமையக்கூடாது என்பது இந்தியாவின் முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் நிக்சன், "அதேவேளை, சீனாவும் அதே கோரிக்கையை முன்வைக்கின்றது. இந்தியாவுக்கு இலங்கை வழங்கப் போகின்ற ராணுவ தளங்கள் தொடர்பான விடயங்களை சீனா எப்போதும் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. அந்த விடயத்தில் இலங்கை சமாந்திர போக்கை கையாள்கின்றது. இந்த இரண்டு நாடுகளின் அழுத்தங்களை எதிர்கொண்டாலும், இந்தியாவின் அழுத்தங்களை மீறி, இலங்கையினால் செயற்பட முடியாது." என்று கூறுகிறார். அதற்கான காரணத்தை விளக்கும் நிக்சன், "ஏனென்றால், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா செய்த உதவி என்பது சீனாவை விட அதிகமானது. அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வித்தியாசமானது. சீனாவுடன் நெருக்கமான உறவை பேணலாம் என்ற எதிர்வு கூறல் சிங்கள ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றது. அது எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது." "ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிகா போன்றோர் வகுத்த அந்த திட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் வெளியுறவு கொள்கை இருக்கின்றது. அதை விட புதிய திட்டத்தை அநுர குமார திஸாநாயக்க செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை." என கூறுகின்றார். ''இந்தியாவை மீறி இலங்கையால் செயற்படுவது என்பது மிகவும் கடினமான விடயம். எட்கா உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய தேவை இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இருந்த 2016ம்ஆண்டு காலப் பகுதியில் கொண்டு வரப்பட்ட உடன்படிக்கை இது. அந்த சந்தர்ப்பத்தில் அநுர குமார திஸாநாயக்க எதிர்கட்சியிலிருந்து இதனை கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால், இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவின் எட்காவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சென்றிருக்கின்றார்." என்று கூறினார் நிக்சன். உடன்படிக்கையில் மாற்றங்கள், திருத்தங்கள் என்று சொன்னாலும் கூட அந்த உடன்படிக்கையை கையெழுத்திட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இலங்கை வந்துள்ளது என்று நிக்சன் கூறுகிறார். ''இந்திய விஜயத்தை விடவும் மிகவும் ஒரு எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் அநுர குமார சீனாவுக்கு போகின்றார். இந்திய விஜயத்தை விடவும் அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும் என்பது அநுர குமாரவின் நம்பிக்கையாக காணப்படுகின்றது." என கூறுகிறார் மூத்த செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆர்.சிவராஜா. தொடர்ந்து பேசிய அவர், "ஏனென்றால், சீனாவுடன் இவர்கள் மிக நீண்ட காலமாக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றார்கள். இந்த விஜயத்துக்கு பிறகு நிறைய உதவிகளை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வார்கள். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த விஜயத்துக்கு பிறகு அவர் பிராந்திய ரீதியான சில ராஜதந்திர சவால்களை நிச்சயம் எதிர்கொள்வார்." "ஏனென்றால், அவர் இப்போது சீனாவுக்கு சென்று அவர் கொடுக்கப் போகின்ற வாக்குறுதிகள், பிராந்திய ரீதியான சில எதிர்வினைகளை ஏற்படுத்தப் போகின்றது. குறிப்பாக சீன கப்பல்கள் இலங்கைக்கு வருவதில் கடந்த காலங்களில் இருந்த பிரச்னை, இந்த விஜயத்தின் பின்னர் அந்த ஆராய்ச்சி கப்பல்கள் இங்கு வருவதற்கு சீனாவுக்கு வசதியான வகையில் அமைந்து விடும் என்பதுதான் மிக முக்கியமான கருத்தாக இருக்கின்றது." என்கிறார். இந்தியாவின் முதலீடுகள் இலங்கையில் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று கூறும் அவர், "அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சீனா தற்போது அதேபோன்ற சில வலுசக்தி ஒப்பந்தங்களையும் செய்வதற்கு காத்திருக்கின்றது. இந்தியாவின் ஒப்பந்தங்களை ஒத்ததான விடயங்களை சீனாவுக்கு வழங்குவதாக உறுதி வழங்கி விட்டால், நிச்சயமாக பிராந்திய ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்தும்." என்கிறார் இலங்கை ஜனாதிபதி, தம்முடன் நெருங்கி பழகுகின்றார் என்ற தோற்றப்பாட்டை உலகத்துக்கு வெளிப்படுத்த சீனா முயற்சித்து வருவதாகவும் மூத்த செய்தியாளர் ஆர்.சிவராஜா கூறுகின்றார். ''எனவே இந்த விஜயத்தை அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் கூர்மையாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன." என ஆர்.சிவராஜா கூறுகின்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post