அழியும் ஆபத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் நன்னீர் மீன்கள்: தமிழ்நாட்டு மீன்கள் எவை - விளைவுகள் என்ன?

post-img
ஆசியாவில் மிகவும் அழிந்து வரக்கூடிய நன்னீர் மீன் இனங்களைக் கொண்ட உலகின் முதல் மூன்று நாடுகள் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகி வரும் நன்னீர் மீன் இனங்கள் இருப்பதாக சர்வதேச அறிவியல் ஆய்விதழான நேச்சரில் வெளியான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. அதன்படி, இந்தோனீசியா, இந்தியா, தான்சானியா ஆகிய மூன்று நாடுகளில் உள்ள நன்னீர் பல்லுயிர் வளத்தில் நான்கில் ஒரு பங்கு "அழியும் ஆபத்தில்" இருக்கின்றன. தென்னிந்தியாவில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அதிக எண்ணிக்கையிலான அருகி வரும் நன்னீர் மீன் இனங்கள் காணப்படுகின்றன. அமேசான் படுகை, விக்டோரியா ஏரி (கென்யா, தான்சானியா, உகாண்டா), டிடிகாகா ஏரி (பொலிவியா, பெரு) மற்றும் இலங்கையின் ஈர மண்டலம் போன்ற பகுதிகளைப் போலவே மேற்குத்தொடர்ச்சி மலையும் அதிகளவிலான 'அழிந்து வரும் நன்னீர் மீன் இனங்களை' கொண்டுள்ளது. இந்த அறிக்கைப்படி, டிடிகாகா ஏரி, சிலியின் பயோபியோ பகுதி, அசோர்ஸ் (போர்ச்சுகல்) ஆகிய இடங்களிலும் "அழியும் அபாயத்தில் உள்ள" மீன் இனங்கள் வாழ்கின்றன. 'உலகளாவிய நன்னீர் உயிரினங்களுக்கான பல்வகைப்பட்டியல்' மதிப்பீட்டை சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (ஐ.யு.சி.என்) செய்துள்ளது. இந்த அறிக்கை 'தி நேச்சர்' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட பணியின் விளைவாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ராஜீவ் ராகவன், கேரள மீன்வளம் மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், ஐ.யு.சி.என். நன்னீர் மீன் வல்லுநர் குழுவின் தெற்காசிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "காட்டுயிர்கள் தொடர்பான பெரும்பான்மை திட்டங்கள், புலிகள், யானைகள், காண்டாமிருகங்கள், பறவைகள் போன்ற பாலூட்டிகளின் மீது மட்டும் கவனம் செலுத்துவதே இந்தியாவில் இருக்கும் அடிப்படைப் பிரச்னை" என்றார். "இதனால், இவற்றுக்கே அதிக கவனமும் பணமும், வளங்களும் செல்கின்றன. இந்தியாவில் எந்த மீனுக்கும் அத்தகைய பாதுகாப்புத் திட்டம் எதுவும் இல்லை," என்கிறார் அவர். பல்வேறு மாநிலங்களில் அழிவின் விளிம்பில் உள்ள சில முக்கிய நன்னீர் மீன் இனங்களின் பெயர்கள் யாவை? மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகின் மிகவும் பிரபலமான நன்னீர் மீன் இனங்களின் தாயகமாக அறியப்படுகிறது. அதற்குச் சான்றாக கூம்பு முதுகுக் கெண்டையைச் சொல்லலாம். அளவில் பெரிதாக, 60 கிலோ எடை வரை இருக்கும். இது ஐ.யு.சி.என். சிவப்புப் பட்டியலில் "மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினமாக" வகைப்படுத்தப்பட்டுள்ளது. "இந்த மீன்கள் வாழும் பகுதிகள் நதிசார்ந்த திட்டங்கள், மணல் சுரங்கம், இதைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவது, அயல்நாட்டு ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பரவுவது ஆகியவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. எனவே, இந்த மீனின் இருப்பைப் பாதுகாக்க கூம்பு முதுகு கெண்டை வாழும் நதி மற்றும் துணை நதிகளைப் பாதுகாப்பது அவசியம்," என்று ராகவன் கூறினார். "மீன்பிடி விதிமுறைகளோடு கூடுதலாக, அயல் உயிரினங்களை அவற்றின் வாழ்விடங்களில் அறிமுகப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்துகிறார் அவர். ராகவனின் கூற்றுப்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கெண்டை போன்ற 30 முதல் 40 வகையான உயிரினங்கள் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளன. மேற்கு மலைத்தொடரில் 300க்கும் மேற்பட்ட நன்னீர் மீன் வகைகள் உள்ளன. நிலத்தடி நீரிலும், நிலத்தடியில் காணப்படும் நீர்நிலைகளிலும் வாழும் இருவேறு உயிரியல் குடும்பங்களைச் சேர்ந்த நன்னீர் மீன் இனங்கள் ஆசியாவிலேயே மேற்கு மலைத்தொடரில் மட்டும்தான் வாழ்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ் மீன் வகைகளும் சரி, அழிந்து வரும் அபாயத்தில் உள்ள நன்னீர் மீன் இனங்கள் பலவும் சரி, மிகச் சில இடங்களிலேயே காணப்படுகின்றன. சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நதியில் மட்டுமே வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் சிவப்புப் பட்டியலில் உள்ள 23,496 அழிந்து வரும் உயிரினங்கள் இங்கு உள்ளன. அவற்றில் இறால், நண்டு போன்ற ஓட்டுமீன் வகைகளும், தும்பி, ஊசித்தும்பி போன்ற உயிரின வகைகளும் அடக்கம். மாசுபாடுகள், அணை மற்றும் வடிகால் கட்டமைப்புகள், விவசாயத்தில் அதிகப்படியான அறுவடை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றால், இந்த உயிரினங்கள் முற்றிலுமாக அழியும் அபாயத்தில் இருப்பதாகச் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. "வாழ்விடங்கள் சீரழிவது அல்லது குறைவதுதான்" மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறுகிறார் ராகவன். "நதியின் மேல் தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள் போன்றவை உள்ளன. அங்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், நதியின் நீரோட்டத்தில் அடித்து வரப்படும் மாசுபாடுகள் இதற்கு ஒரு காரணம்," என்கிறார் அவர். "நீர்நிலைகளின் தொடக்கத்தில் இருந்து கடலை அடையும் வரை, விவசாயம், தொழிற்சாலைகள், மனித நடவடிக்கைகள் ஆகியவற்றால் மாசு ஏற்படுத்தும் பல கூறுகள் ஆற்றில் கலக்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் காரணங்களால், உலகளவில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைந்து வருவதாகவும் குறிப்பாக நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதிக்கப்படுவதாகவும் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. அதன்படி, இயற்கையான நில அமைப்புகளான சதுப்பு நிலம், ஏரி, ஆறு, குளம் போன்ற பகுதிகள் கண்காணிக்கப்பட்டதில், 1970 மற்றும் 2015க்கு இடையில் 35 சதவீத நிலப்பகுதிகள் மறைந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது. இந்த அறிக்கைப்படி, இந்தச் சீரழிவு, காடுகளின் பரப்பளவு குறைந்ததைவிட மூன்று மடங்கு வேகமாக நிகழ்ந்துள்ளது. அதோடு, "தற்போது எஞ்சியுள்ள அனைத்து ஈரநில வாழ்விடங்களிலும், 65% சராசரி அச்சுறுத்தல் முதல் அதிதீவிர அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இதுதவிர, 37% ஆறுகள் முழுமையாக சுதந்திரமாகக் கடலை நோக்கிப் பாயவில்லை." இந்தப் பாதிப்பிற்கு இரண்டாவது காரணமாக ஆறுகள் மீது பாலங்களை, அணைகளை, கால்வாய்களைக் கட்டுவது போன்ற நேரடிக் கட்டுமானங்களைக் குறிப்பிடுகிறார் ராகவன். "நீங்கள் அணைக்குக் கீழே பார்த்தால், அணைகளால் தண்ணீர் தக்கவைக்கப்படுவதால், பெரும்பாலான பகுதி வறண்டு இருப்பதைக் காண முடியும்," என்கிறார் அவர். இதனால், ஆற்று நீரோட்டத்தின் கீழ்நிலையில் இருக்கும் மக்களும் அங்குள்ள பல்லுயிர் வளமும் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அங்குள்ள நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் குறைக்கப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் அவர். சுருக்கமாக, மனிதத் தலையீடுகள் அனைத்துமே நன்னீர் பல்லுயிரியலைப் பெரியளவில் பாதிக்கின்றன. இதன் விளைவு, விவசாய சமூகங்களை மட்டுமல்ல, நகர்ப்புற மனிதக் குடியிருப்புகளையும் பாதிக்கிறது என்கிறார் ராகவன். "புலி, யானை போன்ற உயிரினங்கள் எந்த மனித தேவைகளையும் பூர்த்தி செய்வதில்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால், மீன்களையோ பிற நீர்வாழ் உயிரினங்களையோ அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அவை சமூகத்திற்குப் பங்களிக்கின்றன," என்கிறார் ராகவன். அவரது கூற்றுப்படி, இது ஏழை மக்களுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. "இதில் சமநிலையைப் பராமரிப்பது மிகவும் கடினம். ஆகவே, பெரும்பாலான மக்கள் சமூகக் கண்ணோட்டத்தில் இதைச் சிந்திப்பது, நன்னீர் மீன்களின் பாதுகாப்பு மீதான கவனம் செலுத்துவதைச் சவாலாக்குகிறது." உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தில் மீன் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதோடு, அவை ஊட்டச்சத்துகளையும் மறுசுழற்சி செய்வதாகக் கூறுகிறார் ராகவன். அவற்றின் பங்கு, சுற்றுச்சூழல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும், மனித தேவைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன. "எனவே, அவற்றின் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்த விவாதத்திற்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. சமூகங்கள் தங்கள் புரதத் தேவைகளுக்காக இந்த மீன்களைச் சார்ந்திருக்கும் பகுதிகளில் நன்னீர் மீன்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இல்லையெனில் உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பொருளாதாரம் அனைத்துமே பாதிக்கப்படும்," என்று ஐ.யு.சி.என் அறிக்கை கூறுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post