பாபி செம்மனூர்: கேரள நடிகையின் பாலியல் புகாரில் நகைக்கடை அதிபர் கைதான வழக்கின் பின்னணி என்ன?

post-img
தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் கேரள நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரின்பேரில் பிரபல நகைக்கடை தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் ரீதியாக ஒருவரைத் தொடுதல், அணுகுதல், சமூக ஊடகத்தில் பாலியல் கருத்துகளைப் பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தப் புகாரின் அடிப்படையில் மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை பாபி தரப்பு மறுத்துள்ளது. அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹனி ரோஸ் எடுத்துள்ள சட்டரீதியான நடவடிக்கையை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். மலையாள நடிகை ஹனிரோஸ் வர்கீஸ், கேரளாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவுள்ளார். சிங்கம்புலி, பட்டாம்பூச்சி, காந்தர்வன், மல்லுக்கட்டு போன்ற சில தமிழ்ப் படங்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட இவர், மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்ததில்லை என்றாலும் கேரளாவில் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவில் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் நடிப்பதோடு, திறப்பு விழா உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளிலும் ஹனிரோஸ் பங்கேற்று வருகிறார். இவர் கேரள காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் செம்மனூர் இன்டர்நேஷனல் ஜூவல்லரி உரிமையாளர் பாபி செம்மனுார் கைது செய்யப்பட்டுள்ளார். செம்மனூர் சர்வதேச நகைக்கடைக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. புதிய கிளைகளைத் திறப்பதற்கு, பிரபலமான நபர்களை, குறிப்பாக நடிகைகளை அழைத்து வருவதை இதன் உரிமையாளர் பாபி செம்மனூர் வழக்கமாக வைத்துள்ளார். கால்பந்துக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள கேரளாவில் கடந்த 2012ஆம் ஆண்டில் மாரடோனாவை அழைத்து வந்து பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டியதும் இவர்தான். இதேபோன்று கடந்த ஆகஸ்ட்டில் கேரள மாநிலம் கண்ணூரில் செம்மனூர் நகைக்கடை புதிய கிளை திறப்பு விழாவுக்கு இவருடைய நிறுவனம் சார்பில் நடிகை ஹனிரோஸ் அழைக்கப்பட்டுள்ளார். அந்த விழாவில் பங்கேற்ற சில மாதங்கள் கழித்து, ஹனிரோஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகப் பதிவிட்டிருந்தார். தன்னை உருவகேலி செய்வதாகவும், இரட்டை அர்த்தத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகப் பதிவிட்டு வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அதில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவருடைய சமூக ஊடகப் பதிவுகளுக்கு பலர் தங்களுடைய கமெண்ட்களை பதிவிட்டிருந்தனர். அதில் பலரும், அவரை மிகவும் ஆபாசமாகக் குறிப்பிட்டு கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். ஏற்கெனவே திறப்பு விழாவில் மகாபாரதத்தின் குந்தி தேவியுடன் நடிகை ஹனி ரோஸை ஒப்பிட்டுப் பேசிய பாபி செம்மனூர் தனது சமூக ஊடகப் பக்கத்திலும் அதைப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பிறகே, சமூக ஊடகங்களில் தன்னை ஆபாசமாகச் சித்தரித்து, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொழிலதிபர் பாபி செம்மனூர் என்று ஹனிரோஸ் வெளிப்படையாகத் தெரிவித்தார். அதோடு எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் இதுபற்றி புகார் கொடுத்தார். பின்னர் கேரள காவல்துறையினர் பாபி செம்மனூர் மீதும், ஹனிரோஸ் பற்றி சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பதிவிட்ட 30 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்தனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று, கோவை பெரியகடை வீதியில் புதுப்பிக்கப்பட்ட செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவுக்கு, நடிகை ஹன்சிகா மோத்வானி பங்கேற்பதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் பாபி செம்மனூரும் பங்கேற்பதாக இருந்தது. அதற்காக, வயநாட்டிலுள்ள அவரது தேயிலைத் தோட்டத்திலுள்ள பங்களாவில் அவர் தங்கியிருந்தார். ஜனவரி 8ஆம் தேதியன்று கோவைக்கு அவர் புறப்பட்டு வரும் வழியில் எர்ணாகுளம் காவல்துறையினர், அவரை வழிமறித்துக் கைது செய்து, கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எர்ணாகுளம் மாநகர காவல் துணை ஆணையர் அஸ்வதி, ''நடிகை ஹனிரோஸ் கொடுத்த புகாரின்பேரில், பாபி செம்மனூர் மீது பிஎன்எஸ் 75, 67 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைபோக, நடிகை குறித்து சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பதிவிட்ட 30 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதற்கும் பாபி செம்மனூர் மீதான வழக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்றார். ஜனவரி 8ஆம் தேதி வயநாட்டில் கைது செய்யப்பட்ட பாபி செம்மனூர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 75 (1) (i) (உடல் ரீதியான தொடர்பு மற்றும் விரும்பத்தகாத மற்றும் வெளிப்படையான பாலியல் வெளிப்பாடுகள்) மற்றும் 75 (1) (iv) (பாலியல் துன்புறுத்தலின் ஒரு வடிவமாக பாலியல் ரீதியான கருத்துகளை வெளியிடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 (மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல்) என்ற பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் வேறு ஏதேனும் பின்புலங்கள் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டதற்கு, இந்த வழக்கு குறித்து மேலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். நடிகையின் புகாரின் பேரில், பிரபல தொழிலதிபரை கேரள காவல்துறை கைது செய்திருப்பது, அம்மாநில ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் இதுகுறித்த விமர்சனங்களே ஆக்கிரமித்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கைக்கு கேரள திரைத்துறையில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பான டபிள்யு சிசி (Women in Cinema Collective) வரவேற்பு தெரிவித்துள்ளது. ஹனிரோஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அதன் உறுப்பினர்கள், தங்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவதோடு, காட்சி ஊடக விவாதங்களிலும் பேசி வருகின்றனர். டபிள்யு சிசி உறுப்பினரும், கேரள திரைத்துறையில் பணியாற்றி வரும் திரைக்கதை எழுத்தாளருமான சங்கீதா பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசுகையில், ''இது திரைத்துறையிலுள்ள பெண்களுக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஹனிரோஸ் எடுத்த முயற்சிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. இதுபற்றி திரைத்துறை பெண்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளோம்'' என்றார். டபிள்யு சிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆஷா ஜோசப், இந்தக் கைது நடவடிக்கை குறித்த தனது மகிழ்ச்சியை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். ஹனிரோஸுக்கு பக்கபலமாக அவருடன் இருப்போம் என்ற ஹேஷ்டேக்கை மலையாளம் (#avalkoppam) மற்றும் ஆங்கிலத்தில் (#withher) பெருமளவில் பலரும் பரப்பி வருவதாகவும், அதற்கு மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மலையாள திரைத்துறை ஆதரவு பற்றி அவர் கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். பாபி செம்மனூர் கைதுக்குப் பிறகு, கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஹனிரோஸ், ''முகநுால் வழியாக நான் எச்சரித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தாமல் அதிகளவில் ஆபாசமாகப் பதிவிட்டு வந்தனர். கடும் மன உளைச்சலுக்கு ஆளான பின்னரே, குடும்பத்தினருடன் பேசி இந்தப் புகாரை அளித்தேன். முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து விளக்கினேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். பாபிக்கு எதிரான நடவடிக்கை மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இனி யாரும் எதுவும் பேசலாம்; சமூக ஊடகங்களில் எதையும் பதிவிடலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நான் நிம்மதி அடைந்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை அனைவரும் மதிக்க வேண்டும்; மதிக்காமல் தொடர்ந்து தவறுகளைச் செய்தால் இதுபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஹனிரோஸ் கருத்துக்கு ஒருபுறம் ஆதரவு அதிகரித்து வந்தாலும், அவருக்கு எதிரான கருத்துகளும் மலையாள ஊடக விவாதங்களில் முன் வைக்கப்படுகின்றன. கேரளாவில் பிரபல பேச்சாளரும், மேல்சாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவருமான ராகுல் ஈஸ்வர், மலையாள சேனல் ஒன்றில் பேசுகையில், "பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது நடிகை ஹனிரோஸ் கண்ணியமாக ஆடைகளை அணிய வேண்டும்" என்று கூறியதோடு, மேலும் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு, ஹனிரோஸ் சமூக ஊடகத்திலேயே நேரடியாகப் பதில் வெளியிட்டதும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. ராகுல் ஈஸ்வரை குறிப்பிட்டு, ''விவாதங்களுக்கு ராகுல் பெரும் சொத்து. மொழியின் மீது உங்களுக்கு இருக்கும் திறன் அசாத்தியமானது. ஒரு பிரச்னைக்கு இருபக்க விவாதம் இருக்க வேண்டும். ஆனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை நீங்கள் நடுநிலையாக்கிவிடுவீர்கள். தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல், ஈஸ்வர் கோவிலில் பூசாரியாக இருந்திருந்தால், கோவிலுக்கு வரும் பெண்களுக்கு ஒரு ஆடைக் குறியீட்டை உருவாக்கியிருப்பார். பெண்களின் உடைகளைப் பார்க்கும்போது அவருக்கு மொழியின் மீது கட்டுப்பாடு இல்லை என்பதை உணர்ந்தேன்'' என்று ஹனிரோஸ் கூறியுள்ளார். ஹனிரோஸ் புகார் குறித்து பாபி செம்மனூர் வெளியிட்ட விளக்கத்தில், ''நான் யாரையும் வேண்டுமென்றே பேசவில்லை. சில நேரம் நகைச்சுவைக்காக சில கருத்துகளைப் பதிவிடுவது உண்டு. அது எனது தொழிலில் மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதி. கண்ணூரில் எனது நகைக்கடை திறப்பு விழாவில் ஹனிரோஸ் கலந்து கொண்டு, இரண்டு கடைகளைத் திறந்து வைத்தார். அப்போது நகைகளை அணிந்து மாடலிங் செய்து நடனமாடியது பற்றி சில கருத்துகளைப் பதிவிட்டேன். அது தவறாக இரட்டை அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி ஆபாசமாகப் பலரும் பதிவிட்டுள்ளனர்'' என்று கூறியிருந்தார். அதோடு, இதனால் நடிகைக்கு மன வேதனை ஏற்பட்டதைப் போலவே, தனக்கும் மன வருத்தம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கைக்குப் பின், அந்த நிறுவனம் தரப்பு விளக்கத்தை பிபிசி தமிழ் கேட்டபோது, அந்த நிறுவனத்துக்காக ஊடகங்களைக் கையாளும் பொறுப்பிலுள்ள விமல், ''நிறுவனத் தலைவர் சிறையில் இருந்து வந்த பிறகு விளக்கம் கொடுப்பார். நாங்கள் எதுவும் கூற முடியாது'' என்று தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post