எழுதி கொடுத்த பஞ்ச் டயலாக்கை பேச இது என்ன சினிமாவா? விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!

post-img
சென்னை: “நீட் தேர்வு ரத்து - சினிமாவில் யாரோ எழுதும் பஞ்ச் டைலாக் பேசுவது போன்ற சூழல் கிடையாது” என தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. எப்போதுதான் நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுகதான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததாகவும், நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய முடியாது, மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும். இப்போதும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி” எனப் பதிலளித்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவை விமர்சித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனத் தெரிவித்தார் விஜய். விஜய் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் சிவசங்கர், “நீட் தேர்வு ரத்து ஒன்றும், சினிமாவில் யாரோ எழுதும் பஞ்ச் டைலாக் பேசுவது போன்ற சூழல் கிடையாது” என பேசியுள்ளார். அமைச்சர் சிவசங்கர், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விஜய் வைத்த விமர்சனம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், “நீட் தேர்வு என்பது இன்று புதிதாக வந்த விஷயம் இல்லை. நீட் என்பது மிகப்பெரிய போராட்டம். நீட் தேர்வு வந்தபோதே கலைஞர் அதனை தடுத்தி நிறுத்தினார். கலைஞருக்கு பிறகு மறைந்த அம்மையார் ஜெயலலிதாவும் தடுத்து நிறுத்தினார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த நீட் தேர்வானது நடைமுறைக்கு வந்தது. எனவே, அதில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தொடர்ச்சியாக திமுக போராடி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவர் வரை கொண்டு சென்று இருக்கிறார். இது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டம். மத்திய அரசால் தான் இதனை ரத்து செய்யமுடியும். சட்டம் புரிந்தால் மட்டும் தான், நாட்டு நடைமுறை, ஆட்சி நடைமுறை புரிந்தால் தான், பேசவே முடியும். இது சினிமாவில் யாரோ எழுதி கொடுக்கும் வசனங்களை வாய்க்கு வந்தபடி பேசும் விஷயம் கிடையாது. திராவிட இயக்கத்தை குறித்து மற்றவர்கள் கிண்டல் செய்வதற்கு யோக்கியதை கிடையாது. இன்றைக்கு வந்துவிட்டு நினைத்தையெல்லாம் பேசிவிட்டு போக இது ஒன்றும் திரைப்படம் இல்லை. இது அரசியல். மக்களுக்காக போராடியும், ரத்தம் சிந்திய காரணத்தால் ஆட்சியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post