கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்

post-img
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பொருளாதார புரட்சி என்றே கிரெடிட் கார்டுகளை அழைக்கலாம். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு உண்மையில் ஒரு கத்தியைப் போன்றது. சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் கையை கிழித்துக் கொள்ள நேரிடும். கார்டுகளை பெறுவதைப் போன்றே, அதனை பயன்படுத்துவதும் முக்கியமானது என்று கூறுவது இதனால் தான். முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்கள் மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் இந்த கார்டை பயன்படுத்தும் விதம் மற்றும் பணத்தை திருப்பி செலுத்தும் விதம் முறையாக கண்காணிக்கப்படும். இந்த அடிப்படையிலேயே உங்களுக்கு வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும். இதனால் தான் முதன்முறையாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதே கவனத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் உங்களால் எதிர்காலத்தில் எந்த விதமான கடனும் வாங்க இயலாது. கிரெடிட் கார்டு உங்களை சிக்க வைக்கும் பொறியல்ல. நம்மில் பலரும் கடனை பெரிய அச்சுறுத்தலாக பார்க்கின்றோம். வாழ்வதற்காக கடன் வாங்குவதா என்று பலரும் கேட்கின்றனர். ஆனால் தற்போது கடன் இல்லாமல் உலகம் இயங்காது. இருப்பினும், எது தேவை என்று நாம் வரையறுத்துக் கொண்டோம் எனில், பிரச்னை இல்லை. ஆனால் 40-50 நாட்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வாங்கலாம் என்று நினைத்தால் சிக்கிக் கொள்வோம். அவசர தேவைக்கு கடன் வாங்குவதற்கு பதிலாக கிரெடிட் கார்டை ஒரு 'தயார் நிலையில் இருக்கும் தேர்வாக' பயன்படுத்திக் கொள்ளலாம். நாற்பது நாட்களுக்கு வட்டி ஏதும் இன்றி, உங்களின் நிதிசார் தேவைகளுக்காக இந்த கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்தும் போது நீங்கள் அபராதம் கட்ட வேண்டியதில்லை. காலக்கெடுவுக்குள் நீங்கள் பணத்தை திருப்பிச் செலுத்தும் போது ரிவார்ட் புள்ளிகள் மற்றும் சலுகைகள் போன்றவற்றை நீங்கள் போனஸாக பெற இயலும். ஆனால், தேவையில்லாமல் செலவு செய்து கடன் பொறிக்குள் சிக்கிக் கொண்டால் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். நமக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, ரூ. 100க்கு ஏதேனும் ஒரு பொருள் சலுகை விலையில் கிடைக்கிறது என்றால், நாம் அதில் விழுந்துவிடுவோம். கிரெடிட் கார்டுகள் இருக்கிறது என்பதற்காக பொருட்களை தேவையில்லாமல் வாங்கக் கூடாது. அத்தியாவசியம் எது ஆடம்பரம் எது என்று தெரிந்திருக்க வேண்டும். விலை, கட்டணம், சலுகை, கோ-பிராண்டட் கார்டுகள் என எதை அடிப்படையாக கொண்டு நீங்கள் கிரெடிட் கார்டுகள் வாங்கினாலும் சரி, நம்முடைய தேவைக்கு எந்த கார்டுகள் சரியான முறையில் செயல்படும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். சில வங்கிகள் வருடாந்திர கட்டணங்கள் வசூலிப்பதில்லை. சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட அளவு கிரெடிட் கார்ட் பயன்பாட்டிற்கு பிறகு வருடாந்திர கட்டணத்தை ரத்து செய்யும். சில வங்கிகள் எத்தனை முறை கிரெடிட் கார்டை பயன்படுத்தியிருந்தாலும் வருடாந்திர கட்டணத்தை வசூலிக்கும். இதுபோன்ற தகவல்களை நீங்கள் முன்பே அறிந்திருக்க வேண்டும். வருடாந்திர கட்டணங்களை வசூலிக்கும் சில நிறுவனங்கள் அடிக்கடி ரிவார்ட் புள்ளிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதும் உண்டு. அதனை நீங்கள் எந்த அளவிற்கு பயன்படுத்த இயலும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். அதிகமாக பொருட்களை வாங்கும் நபர்களுக்கு, பல நிறுவனங்களின் சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கோ-பிராண்டட் கார்டுகளை இ-காமர்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. அதிகமாக பயணிக்கும் நபர்களுக்கான கோ-பிராண்டட் கார்டுகளை போக்குவரத்து துறையில் செயல்படும் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த கார்டுகள் உங்களுக்கு அதிக ரிவார்ட் புள்ளிகளையும், சலுகைகளையும் வழங்கும். உங்களின் முதல் கிரெடிட் கார்டை வாங்கிய பிறகு உங்களின் 'கிரெடிட் ஹிஸ்டரி' உருவாக சிறிது காலம் ஆகலாம். குறைந்தபட்சம் ஓராண்டாவது கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் வேறேதும் நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகளை வழங்குகிறோம் என்று கூறினால் அதனை வாங்க வேண்டாம். ஏன் என்றால் ஒருமுறை இதனை வாங்கி பழகிவிட்டால் அதில் இருந்து விடுபடுவது மிகவும் கடினம். எனவே ஒரே ஒரு கார்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தால் உங்களின் கிரெடிட் உச்ச வரம்பை வங்கிகள் அதிகரிக்கும். உங்களுக்கு வங்கிகள் ரூ.100 என்பதை கிரெடிட் வரம்பாக வைத்து கார்டை வழங்குகிறது என்றால் நீங்கள் அதிகபட்சமாக ரூ. 20 முதல் ரூ. 30 வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை தாண்டி நீங்கள் பயன்படுத்தும் போது உங்களின் கிரெடிட் ஸ்கோர் குறையத் துவங்கிவிடும். கிரெடிட் கார்டு பக்கம் பலரை ஈர்க்கும் மற்றொரு அம்சம், குறைந்தபட்ச நிலுவைத் தொகையாகும். குறிப்பிட்ட காலத்தில் நம்மால் பணத்தை முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை திருப்ப செலுத்தலாம். இப்படியாக குறைந்தபட்ச நிலுவைத்தொகையை திருப்பிச் செலுத்தும் போது உங்களின் கிரெடிட் ஸ்கோருக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. உங்களின் கிரெடிட் வரம்பின் 5 முதல் 10% தொகையே குறைந்தபட்ச நிலுவைத்தொகையாக கணக்கிடப்படும். உதாரணத்திற்கு உங்களின் கிரெடிட் வரம்பானது ரூ. 50 ஆயிரமாக இருந்தால் , உங்களின் குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூ.2500 ஆக இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்த சிறிய நிலுவைத் தொகையை நீண்ட காலத்திற்கு செலுத்தி, முழு பணத்தை திருப்பிச் செலுத்துவதை பல மாதங்களாக தாமதப்படுத்துவார்கள். இது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். எனவே சரியான தேதியில் ( billing cycle) நீங்கள் முழுமையாக உங்களின் கடனை திருப்பி செலுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் உங்களின் வங்கிகள் ஏதேனும் தவணை முறை திட்டத்தை (EMI) வழங்குகிறதா என்பதை தெரிந்து கொண்டு, தவணை முறையில் பணத்தை திருப்பிச் செலுத்துங்கள். அது கடனுக்கான வட்டிச் சுமையை குறைக்க உதவும். உங்களின் பில்லிங் சைக்கிள் அடிப்படையில் நீங்கள் பொருட்கள் வாங்குவதை பட்டியலிடலாம். பில்லிங் நாளுக்கும் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கும் இடையே 40 முதல் 50 நாட்கள் வரை கால அவகாசம் உள்ளது. எனவே உங்களின் கார்டை பில்லிங் சைக்கிளின் ஆரம்ப நாட்களிலேயே பயன்படுத்தும் போது நீங்கள் அதிக நாட்கள் வட்டியில்லா கடன் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி கூடுதலாக நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கார்டு கட்டணங்கள் மற்றும் தாமதமாக செலுத்தும் போது வசூலிக்கப்படும் அபராதம் போன்றவை குறித்தும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அரசு வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம் மற்றும் தாமதக் கட்டணம் போன்றவை தனியார் நிதி நிறுவனங்கள் விதிக்கும் கட்டணத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். விமான நிலைய லாஞ்ச் (lounge) சலுகைகள் மற்றும் இலவச டிக்கெட்டுகளை பெறுங்கள். வட்டி இல்லாத கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது மட்டுமின்றி பல்வேறு சலுகைகளையும் அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன. அதில் முக்கியமானது விமான நிலைய லாஞ்சை பயன்படுத்துவது மற்றும் இலவச விமான டிக்கெட்டுகள் போன்றவையாகும். உங்களின் பயன்பாட்டைப் பொறுத்து உள்ளூர் விமான பயணத்திற்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும். இந்த சலுகைகள் குறித்தும் தெரிந்து கொள்ளவும். உள்நாட்டு விமான நிலையங்களில் வருடத்திற்கு இரண்டு முதல் ஆறு முறை இலவசமாக லாஞ்ச்களை அணுக வழி வகை செய்கின்றன சில நிறுவனங்கள். இது தவிர, ஷாப்பிங் கூப்பன்களைப் பெற நீங்கள் ரிவார்ட் புள்ளிகளைப் பயன்படுத்தலாம். ஒரு முறை நீங்கள் கிரெடிட் கார்டை வாங்கினால் அதனை பயன்படுத்த வேண்டும். ஆர்.பி.ஐ. விதிமுறைகளின் படி, உங்களின் கார்டை ஓராண்டு வரை பயன்படுத்தவில்லை என்றால், அது முடக்கப்பட்டுவிடும். எனவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கார்டை பயன்படுத்துங்கள். உடனடியாக அதற்கான பணத்தையும் திருப்பிச் செலுத்தவும். எனவே உங்களின் கார்டு பயன்பாட்டில் இருந்த வண்ணம் இருக்கும். சில வங்கிகள் உங்களின் கார்டுகளை பயன்படுத்தவில்லை என்றால் அதற்காக வருடாந்திர அபராதத்தை வசூலிப்பதுண்டு. அது குறித்து அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் கார்டுகளை பயன்படுத்தவில்லை என்றால், செயலியை பயன்படுத்தி அனைத்துவிதமான பரிவர்த்தனைகளையும் நிறுத்திவிடுவது நல்லது. இதன்மூலம் உங்களின் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் குறையும். கடன் வாங்கினால் நாம் வட்டி செலுத்திதான் ஆக வேண்டும். அவர்கள் கூறும் நேரத்திற்குள் அதை நாம் திருப்பிச் செலுத்த வேண்டும் இல்லை என்றால் வட்டி விகிதம் அதிகரிக்கக் கூடும். அதிகபட்ச வட்டியானது 36 - 48% வரை இருக்கக் கூடும். அதாவது ரூ.100க்கு ரூ.3 முதல் 4 வரை வட்டி வசூலிக்கப்படும். தாமதமாக பணத்தை திருப்பிச் செலுத்துவது, வரி, அபராதம் போன்றவையும் அதிகமாக இருக்கும். நீங்கள் சரியான நேரத்துக்குள் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் மிக வேகமாக வீழ்ச்சி அடைந்துவிடும். நம்முடைய முதல் கிரெடிட் கார்ட் நம்முடைய கிரெடிட் ஸ்கோரில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் உங்களின் கார்டை ரத்து செய்ய வேண்டும் என்றால் முதன்முதலாக வாங்கிய கார்டை ரத்து செய்வதற்கு பதிலாக புதிதாக வாங்கிய ஒன்றை ரத்து செய்யலாம். உங்களின் முதல் கிரெடிட் கார்டு அல்லது முதல் கடன் உங்கள் ஒட்டுமொத்த கிரெடிட் ஹிஸ்டரியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கடன் ஸ்கோர் தொடர்பான அறிக்கை இதன் அடிப்படையில் தான் அமையும். இதைச் சரியாகச் செய்யாவிட்டால், நாளை வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் அல்லது தங்கக் கடன் பெறுவது கடினமாக இருக்கலாம். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான நினைவூட்டலை 'செட்' செய்யுங்கள். க்ரெட் போன்ற செயலிகள் இதில் நமக்கு உதவியாக இருக்கும். உங்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் தானாக வங்கி கணக்கில் இருந்து செல்வது போல் மாற்றிக் கொள்ளுங்கள். தாமதமாக பணம் செலுத்துவதை தவிர்க்கவும். குறைந்தபட்ச நிலுவைத் தொகையை தொடர்ந்து செலுத்துவதன் மூலம் கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம். தேவைப்படும் போது மட்டுமே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்கள் உங்களின் செலவுகள் குறித்து உங்களுக்கு ஒரு தெளிவான திட்டம் இருக்க வேண்டும். நீங்கள் எதன் மீது எவ்வளவு செலவிடுகிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் (இது விழிப்புணர்வுக்கான கட்டுரை மட்டுமே. நிதிசார் முடிவுகளை மேற்கொள்ள துறைசார் நிபுணர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்) Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post