அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம் - மாடுபிடி வீரர்களுடன் களத்தில் நின்ற சிறுவன்

post-img
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 12 பேருக்கு காயம் அடைந்துள்ளனர். இரண்டாவது சுற்றில் காளை குத்தியதில் இடுப்பில் காயமடைந்த மாடு பிடி வீரர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டில் 12 பேர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒன்பது நபர்கள் வீடு திரும்பி விட்டனர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி தற்போது வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன. முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். இரண்டாம் சுற்றில் விளையாடிய திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியை சேர்ந்த டேவிட் என்பவர் இடுப்பில் காலை குத்தியதில் காயமடைந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேபோல வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சேது ராஜன் என்பவர் வாடிவாசலில் தனது காளையை அவிழ்க்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக காலில் அரிவாள் வெட்டியதில் காயமடைந்தார். தற்போது அவனியாபுரம மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறிய அளவில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். ஜல்லிக்கட்டு விதிகளை மீறி 18 வயதுக்குட்பட்ட ஒரு சிறுவன் மாடு பிடிக்கும் வீரர்கள் இடையே இருப்பதை கண்டறிந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை வெளியேற்றினர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும். போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரு அண்டா, ஒரு வேஷ்டி பரிசாக வழங்கப்படுகிறது. போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால மருத்துவ தேவைக்காக குழுக்களும், கால்நடை மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post