“ரயில் பாதை திட்டம் ரத்தாக காரணமே திமுக அரசுதான்”.. போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

post-img
சென்னை: மதுரை - தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய வழித்தடத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்த நிலையில், திமுக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது.” எனத் தெரிவித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார். அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post