ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அரசுடன் முரண்படும் தேர்தல் ஆணையம்

post-img
இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் இன்று (ஜன. 13) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறை மசோதா விவகாரத்தில், மத்திய அரசின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு, "அடிக்கடி தேர்தல் நடத்துவதால், செலவு அதிகரிக்கிறது. நேரம் வீணாகிறது. அடிக்கடி நடக்கும் தேர்தல்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால், வளர்ச்சி திட்டங்கள் முடங்குகின்றன" போன்ற பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான சட்ட ஆணையத்தின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதில் மத்திய அரசின் கருத்துடன் முரண்படுகிறது. "தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலாக்கத்தை இடையூறாக பார்ப்பது சரியல்ல. அது, தேர்தல் பிரசாரத்தின் போது, அனைத்து தரப்பினருக்கும் சமமாக போட்டியிடும் வாய்ப்பை உருவாக்குவதற்கான முக்கிய கருவி ஆகும்." "அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்த அவை அவசியம். தேர்தல் தேதி அறிவிப்பு முதல், தேர்தல் பணிகள் முடிவடையும் வரை குறைவான காலத்துக்குத்தான் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்படுகிறது." இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் போலி ஆதார் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேரை, காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) அன்று கைது செய்தது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருள்புரம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி போலி ஆதார் அட்டை மூலம் வீடு எடுத்து சிலர் வசிப்பதாகவும், சில காலம் கழித்து இங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர் என தினமணி செய்தி கூறுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம், ஊத்துக்குளி, மங்களம் பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு, அருள்புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் போலியான ஆதார் அட்டைகளைக் கொடுத்து பணியாற்றி வருவதாக கோவை தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில், பல்லடம் பகுதியில் தங்கியிருந்த 28 பேர் மற்றும் திருப்பூர் மாநகர் பகுதியில் தங்கியிருந்த 3 பேர் என மொத்தம் 31 வங்கதேசத்தினரைக் கைது செய்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பேறுகால இறப்பு விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவாக ஒரு லட்சத்திற்கு 19 என்ற விகிதத்தில் உள்ளது. இப்போது இந்த விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்ட இந்தியாவில் பேறுகால இறப்பு குறித்த சமீபத்திய மாதிரி பதிவு முறை சிறப்பு அறிக்கையில் (2018-20), கேரளாவின் பேறுகால இறப்பு விகிதம் 19 ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மாநில சுகாதாரத் துறையின் பேறுகால இறப்புகள் குறித்த மதிப்பீடுகள் (கேரளாவில் ஏறக்குறைய 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன) இந்த எண்ணிக்கை 29 என தெரிவிக்கிறது. கேரளாவில் 2020-21ஆம் ஆண்டில், கோவிட்-19 காரணமாக கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது பல பெண்கள் உயிரிழந்ததைத் தவிர்த்து, பேறுகால இறப்பு விகிதத்தில் அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று அந்த செய்தி கூறுகிறது. அதே சமயம், இந்த விகிதத்தின் தற்போதைய அதிகரிப்புக்கு காரணம் அதிகமான பெண்கள் பிரசவத்தின் போது இறப்பது அல்ல, மாறாக கேரளாவில் முன்னெப்போதையும் விட குறைவான பிரசவங்களே நடைபெறுவதால் தான் என 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அதனை தோண்டி எடுக்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர் என்றும், இதையடுத்து அந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது என்றும் தினத்தந்தி செய்தி கூறுகிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் அட்டோ பகுதியில் உள்ள சிந்து ஆற்றினுள் 32.6 டன் தங்க படிமங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த நாட்டு புவியியல் நிபுணர்கள் கூறுகையில், பாகிஸ்தானின் வடபகுதியில் உள்ள மலைப்பகுதியில் இருந்து இந்த தங்க படிமங்கள் வந்து இருக்கலாம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் தட்டுகள் மோதி மலை உருவானபோது ஏற்பட்ட அரிப்பால் இந்த தங்க படிமங்கள் சிந்து நதியால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். இந்த தங்கத்தின் மதிப்பு, அந்த நாட்டின் மதிப்பில் ரூ.60 ஆயிரம் கோடி இருக்கும் என்றும் அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கனிம வளத்துறை இதுபற்றி எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இதையறிந்த பொதுமக்கள் பலர், ஆற்றுக்குள் புதைந்து இருக்கும் தங்கத்தை தோண்டி எடுக்க, சிந்து நதிக்கரையில் திரண்டனர் என்று தினத்தந்தி செய்தி கூறுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவை பாகிஸ்தான் அமல்படுத்தியுள்ளது. யாரும் தங்கத்துக்காக ஆற்றுக்குள் இறங்காதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் கிரிக்கெட் வீரராக இருந்தவர்தான். கபில்தேவ் காலத்தில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், ஒரு கட்டத்தில் கபில்தேவை கொல்ல முயன்றதாக கூறியிருப்பதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. "கபில்தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது நான் வடக்கு மண்டலம், ஹரியாணா அணியின் கேப்டனாக இருந்தேன். கபில்தேவ் என்னை எந்த காரணமும இல்லாமல் அணியில் இருந்து நீக்கினார் இதனால், ஆவேசமடைந்த நான் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கபில்தேவ் வீட்டிற்குச் சென்றேன். அப்போது கபில் அவரது அம்மாவுடன் வந்தார். தாயின் முன்னிலையில் கொல்லக் கூடாது என்ற காரணத்தால் உன்னை சுடவில்லை என்று கூறிவிட்டு கபில்தேவை எச்சரித்துவிட்டு வந்தேன். அதன் பிறகே கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முடிவெடுத்தேன்" என்று யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post