பெரியார் சொன்னதாக சீமான் சர்ச்சை கருத்து - பெரியார் உண்மையில் அப்படி குறிப்பிட்டாரா?

post-img
பெரியார் சொன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. பெரியார் அப்படிச் சொன்னாரா? கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தச் செய்தியாளர் சந்திப்பில், "தமிழ் மொழியையே காட்டுமிராண்டி மொழி என பெரியார் பேசியிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? கம்பன் உங்களுக்கு எதிரி, இளங்கோவடிகள் ஒரு எதிரி, திருவள்ளுவர் எதிரி - பிறகென்ன சமூக சீர்திருத்தம்? அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி?'' என சீமான் பேசினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை குறித்து பேசிய சீமான், பெரியார் சொன்னதாக கூறி ஒரு கருத்தை குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து உடனடியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரிய அமைப்புகள் பெரும் கண்டனம் தெரிவித்தன. அப்படிப் பெரியார் பேசிய அல்லது எழுதிய ஆதாரங்களை வெளியிடும்படி கோரினர். இதற்கடுத்து புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டபோது, "எல்லா ஆதாரங்களையும் நீங்கள் முடக்கிவைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? இவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கிவிட்டு, சான்று கேளுங்கள் தருகிறேன். வெளியிட்ட புத்தகத்தையெல்லாம் முடக்கிவைத்துக்கொண்டு, என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?" என்று பதிலளித்தார். இதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெரியார் குறித்த சீமானின் கருத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என கூறியது. மேலும் அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதுபோல பெரியார் பேசியதாக கூறப்படுவது முதல் முறையல்ல. 2017-ஆம் ஆண்டுவாக்கில்தான் முதன்முதலில் பெரியார் இப்படிச் சொன்னதாக செய்தி பரவ ஆரம்பித்தது. சில இயக்கங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்ற வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டன. இந்தச் செய்தி 1953-ஆம் ஆண்டு மே மாதம் திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான விடுதலையில் வெளிவந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தக் கருத்து பரப்பப்பட்டு வந்தது. இதனை அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மறுத்தனர். 2020ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு செய்தியைப் பதிவுசெய்த, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் மீது காவல்துறையில் புகாரும் அளித்தனர். அவரைக் காவல்துறை கைதும் செய்தது. இந்த நிலையில்தான் மீண்டும் சீமான் இதே கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளில் இந்தச் செய்தி விடுதலை இதழில் 1953-ஆம் ஆண்டின் மே 11ஆம் தேதி வெளியாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிபிசி ஆராய்ந்த போது, அப்படி எந்தச் செய்தியும் அன்றைய தினம் வெளியான விடுதலை இதழில் இடம்பெறவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று வெளியான விடுதலை இதழ், மொத்தம் நான்கு பக்கங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நான்கு பக்கங்களிலும் இதுபோன்ற ஒரு செய்தி எங்கேயும் இடம்பெறவில்லை. தென் சென்னை திராவிட கழக மாநாடு குறித்த செய்தியும் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் குறித்த செய்தியுமே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post