சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை.. கடல் மேல் மேம்பாலம்.. அரசின் திட்டம் என்ன?

post-img
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கடல் மேல் பாலம் அமைக்க அரசிடம் திட்டம் இருக்கிறதா? என்று சட்டசபையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். இந்த யோசனையை வரவேற்ற அமைச்சர் எ.வ.வேலு, கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் அமைப்பது குறித்து ஆராயப்படும் எனறும் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் என்ஜினியர்கள் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். சென்னையை பொறுத்தவரை எல்லா சாலைகளுமே மிகவும் நெரிசல் மிகுந்த சாலைகளாக உள்ளன. சாலைகளை அகலப்படுத்த இடமே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை பல முக்கிய சாலைகள் உள்ளன. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை, வட பழனி சாலை, பூந்தமல்லி சாலை, வேளச்சேரி சாலை, ஓஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலை என எல்லா சாலைகளுமே முடிந்தவரை அகலப்படுத்திவிட்டார்கள். இந்நிலையில் சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கத்தில இருந்து நீலாங்கரை வரை சாலைகள் மிக குறுகிய அளவில் உள்ளன. இந்த சாலையில் வாகன நெருக்கம் மிக அதிகம் என்கிற போதிலும், இதற்குமேல் சாலையை அகலப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில், கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் அமைப்பது குறித்து ஆராயப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும் போது, மும்பை அடல் சேது பாலம் போல தனுஷ்கோடி-இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா? என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பட்டினப்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கடல் மேல் பாலம் அமைக்க அரசிடம் திட்டம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசுகையில், தனுஷ்கோடி-இலங்கை இடையே பாலம் அமைக்கப்படுமா என்று துணை சபாநாயகர் கேட்கிறார். இலங்கையின் உள்நாட்டுப் போர் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அது கனவுத்திட்டமாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த ரணில் விக்கிரமசிங்கே உடன் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை இந்திய-இலங்கை சுரங்க பாலம் குறித்து இந்தியா சார்பில் பேசப்பட்டது. ஆனால் இலங்கை அதனை ஏற்கவில்லை. இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலினின் உரிய அறிவுறுத்தலை பெற்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் கடிதம் அனுப்பப்படும் என்றார். பட்டினம்பாக்கம், மகாபலிபுரம் கடல் மேல் பாலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, " சென்னையில் கடல் மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. மத்திய, மாநில மற்றும் தனியார் பங்களிப்புடன், எவ்வகையில் அந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராயப்படும். துணை சபாநாயகர் நல்ல யோசனை தான் அளித்துள்ளார். மும்பையில் கட்டப்பட்டுள்ள அடல் சேது பாலத்தை நான் பார்த்து இருக்கிறேன். எனவே சென்னை கலங்கரை விளக்கம்-நீலாங்கரை இடையே 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் மேல் பாலம் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபடுவார்கள். முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை ஆணையம் மூலம் முதல்கட்டமாக சென்னை திருவான்மியூர்-மாமல்லபுரம் இடையே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும், திருவான்மியூர்-அக்கரை இடையே மேல்மட்ட 6 வழிச்சாலை அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை ஆணையம் மூலம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அனைத்து இடங்களிலும் மேல்மட்ட சாலை அமைக்கப்படும்" என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post