மத்திய அமைச்சர் சொன்னது அப்பட்டமான பொய்.. பாய்ந்து வந்த திமுக! இடையே அண்ணாமலை செய்த வேலை!

post-img
சென்னை: மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பது அப்பட்டமான பொய் என திமுக குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதம் இதனை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று, "தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது." எனத் தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. புதிய ரயில் வழித்தட திட்டத்தை வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளதாக பொய்யான தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாக திமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தென்னக ரயில்வே, தமிழ்நாடு போக்குவரத்து செயலாளருக்கு ரயில்வே திட்ட பணிகளின் நிலை குறித்து அனுப்பிய கடிதத்தில், "மதுரை - தூத்துக்குடி வழித்தடத்தில் குறைவான போக்குவரத்துக்கு வாய்ப்பு என்பதால் அத்திட்டத்தை நிறுத்திவைக்க தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது" என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக மாநில அரசு இந்த திட்டத்தை வேண்டாம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் என திமுக தரப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் திமுக ஐ.டி விங் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "தெற்கு இரயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்த நிலையில், தமிழ்நாட்டிற்க்கான அனைத்து திட்டங்களுக்கும் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென 19.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மதுரை- தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை) உட்பட அனைத்து திட்டங்களும் உள்ளது. இதற்கு 19.12.2024 அன்று பதில் கடிதம் எழுதிய தெற்கு இரயில்வே, மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்காது என்பதால் இந்த திட்டத்தினை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஆகஸ்டில் எழுதிய கடிதம், கடந்த டிசம்பரில் தெற்கு ரயில்வே எழுதிய கடிதம் ஆகியவற்றையும் ஆதாரங்களாக வெளியிட்டுள்ளது திமுக தரப்பு. இதன் காரணமாக ரயில் வழித்தட விவகாரத்தில், யார் சொல்வது உண்மை என பெரிய அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, மதுரை - தூத்துக்குடி புதிய வழித்தடம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post