லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: வீடுகளை இழந்த மக்கள்; தீயை அணைக்கப் போராட்டம் - புகைப்படத் தொகுப்பு

post-img
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அபாயம் ஏற்படும் வகையில், இந்த காட்டுத்தீ பரவி உள்ளது என்று லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் ஹாலிவுட் ஹில்ஸ் உட்பட பல முக்கியமான பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர். பாரிஸ் ஹில்டன், பில்லி கிறிஸ்டல் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பலரின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அன்று, முதன்முறையாக பசிஃபிக் பலிசடேஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், காட்டுத்தீ ஏற்பட்டது. அதன் பிறகு, லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறையின் தகவல்களின் படி, பலிசடேஸ், பசதேனா, சைல்மர், மற்றும் ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கலிஃபோர்னியா ஆளுநர் காவின் நியூசம், இந்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் 1,400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆக்டோன் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் ஜனவரி 8ம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் தீ பரவ தொடங்கியது. பொதுமக்கள் அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய பிறகு, முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். இரண்டு மணிநேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழந்து காணப்பட்டது. இரண்டாவது நாளாக தொடர்ந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயணைப்புத் துறையினர். தற்போது தீயை அணைக்கப் போதுமான தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முன் அனுபவம் ஏதுமின்றி உள்ள தீயணைப்பு துறையினர் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், புதன்கிழமை காலையில் பேசிய அதிகாரிகள், நெருப்பை அணைக்கும் பணியால் நகரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் அளவாக நீரை பயன்படுத்தவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தீயணைப்புத்துறையினர் இதுவரை 3,624 அவரச உதவி அழைப்புகளுக்கு பதில் அளித்துள்ளனர். 24 மணிநேரத்தில் அவர்களுக்கு வந்த அழைப்புகளின் சராசரி எண்ணிக்கை 1,500 என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நகரத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post