வியத்தகு வளர்ச்சி: ஃபேஷன் உலகில் ஐந்தே ஆண்டுகளில் சிகரம் தொட்ட சீன நிறுவனம் - உள்ளே என்ன நடக்கிறது?

post-img
தெற்கு சீனாவின் 'பேர்ல்' நதிக்கரையில் அமைந்திருக்கும் துறைமுக நகரமான குவாங்சோவின் (Guangzhou) பல பகுதிகளில் தையல் இயந்திரங்களின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த தையல் இயந்திரங்களின் சத்தம், தொழிற்சாலைகளின் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக, காலை துவங்கி, நள்ளிரவு வரை கேட்கும். மக்கள் அங்கு ஆயத்த ஆடைகளான டி-சர்ட், கால்சட்டை, மேலாடை, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை தைத்து 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். உலகின் மிகப்பெரிய துரித ஆயத்த ஆடைகள் விற்பனை நிறுவனமான ஷையனுக்கு (Shein) ஆதாரமாக திகழும் பல தொழிற்சாலைகள், பன்யூ என்ற நகரத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை ஷையன் கிராமம் என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். ஒரு மாதத்தில் 31 நாட்கள் வேலை இருந்தால், நான் 31 நாட்களும் பணியாற்றுவேன் என்று ஒரு தொழிலாளர் பிபிசியிடம் தெரிவித்தார். பலரும், அவர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே விடுப்பு கிடைக்கும் என்று கூறுகின்றனர். பிபிசி இந்த ஷையன் கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தது. இங்குள்ள 10 தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டோம். நான்கு உரிமையாளர்களிடம் பேசினோம். 20க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் பேசினோம். தொழிலாளர்களுடன் நேரத்தை செலவிட்டோம். சில விநியோகஸ்தர்களிடமும் உரையாடினோம். மாபெரும் பேஷன் சாம்ராஜ்ஜியத்தின் இதயத்துடிப்பு, வாரத்திற்கு 75 மணி நேரம் தையல் இயந்திரங்களுடன் அமர்ந்து பணியாற்றும் மக்களின் உழைப்பு தான் என்பதை அறிந்து கொண்டோம். இந்த அதிக வேலை நேரம் சீன தொழிலாளர்கள் சட்டத்தை மீறுவதாகும். ஆனால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யும் தொழில் மையமான குவாங்சோவிலோ, நிகரற்ற தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் சீனாவிலோ, வாரத்திற்கு 75 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவது என்பது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு இல்லை. ஒரு காலத்தில் சீனாவைச் சேர்ந்த தொழில் நிறுவனமாக மட்டுமே அறியப்பட்ட ஷையன், வெறும் ஐந்தே ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஃபேஷன் நிறுவனமாக மாறிவிட்டது. அதிக நேரம் மக்கள் இங்கே உழைப்பது ஷையன் பற்றி புதிய கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கிறது. ஷையனின் மொத்த மதிப்பானது 36 பில்லியன் யூரோக்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனின் பங்கு வர்த்தகத்தில் செயல்பட ஆர்வம் காட்டிவருகிறது இந்த நிறுவனம். ஆனாலும் இந்நிறுவனம் அதன் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பது தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு, சீன தொழிற்சாலைகளில் குழந்தைகள் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது. பிபிசியுடனான நேர்காணலுக்கு மறுப்பு தெரிவித்த அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஷையன் நிறுவனம், "அதன் விநியோக சங்கிலியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் நியாயமாகவும் மரியாதையாகவும் நடத்த உறுதி பூண்டுள்ளோம்," என்று குறிப்பிட்டிருந்தது. நிர்வாகம் மற்றும் இணக்கத்தை வலுப்படுத்த பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது அந்த நிறுவனம். "நாங்கள் ஊதியத்திற்கான மிக உயர்ந்த தரத்தை உருவாக்க முயற்சி செய்கிறோம். இந்த விநியோகச் சங்கிலியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் எங்களின் நடத்தை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்," என்று குறிப்பிட்டிருந்தது. ஷையனின் வெற்றியானது அதன் உற்பத்தியின் அளவைப் பொறுத்தது. ஆன்லைனில் சரக்குகள் லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது. 10 யூரோக்களுக்கு ஆடைகள், 6 யூரோக்களுக்கு ஸ்வெட்டர்கள் என்று பல சலுகைகளையும் அது வழங்கி வருகிறது. ஹெச் & எம், ஸாரா மற்றும் பிரிட்டனின் பிரைமார்க் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி அதன் வருவாயை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இத்தகைய சலுகை விலை விற்பனை, ஷையன் கிராமம் போன்ற கிராமங்களால் சாத்தியமாகிறது. இப்பகுதியில் மொத்தம் 5,000 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஷையன் நிறுவனத்திற்கு ஆடைகளை விநியோகம் செய்கின்றன. தையல் இயந்திரங்கள், துணி மூட்டைகள் போன்றவற்றை கையாள கட்டிடங்களில் போதுமான காலியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. 'டெலிவரிகள்' மற்றும் ஆடைகளை சேமிப்பதற்காக தொடர்ந்து நடைபெறும் பணிகளை கருத்தில் கொண்டு அந்த தொழிற்சாலைகளின் தரைத்தள கதவுகள் திறந்தே உள்ளன. நேரம் செல்லச் செல்ல கிடங்கில் உள்ள அலமாரிகளில், ஐந்தெழுத்துகள் கொண்ட லேபிளுடன் பிளாஸ்டிக் பைகள் நிரம்ப ஆரம்பிக்கின்றன. தரைத்தளத்தில், பெரிய லாரிகள் மூலம் வண்ண துணி ரகங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்க, அங்கே பணியாற்றும் மக்கள் இரவு பத்து மணிக்கும் மேலாக, தையல் இயந்திரங்கள் முன்பு அமர்ந்து தைத்துக் கொண்டிருக்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10, 11, 12 மணி நேரம் வேலை பார்ப்போம் என்று கூறுகிறார், பெயர் கூற விரும்பாத 49 வயது பெண்மணி. அவர் சியாங்ஷி பகுதியை சேர்ந்தவர். "ஞாயிறு அன்று மூன்று மணி நேரம் குறைவாக பணியாற்றுவோம்," என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் பாதையில் நின்று நம்மிடம் பேசும் போது, ஒரு சிலர் கால் சட்டை ஒன்றை தைத்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணி குறித்து தகவல் பலகையில் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிய அல்லது சிறிய அளவிலான அளவில் 'ஆர்டர்கள்' வரும் போது, அதனை உருவாக்கும் வகையில் இந்த தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இப்போது தைக்கப்படும் சினோஸ் வகையான ஆடைக்கு நல்ல வரவேற்பு இருந்தால், 'ஆர்டர்களும்' அதிகரிக்கும், உற்பத்தியும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரிக்க நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை போதவில்லை என்றால் தற்காலிக பணியாளர்களை தொழிற்சாலைகள் நியமிக்கும். சியாங்ஷியில் இருந்து குறைந்த கால ஒப்பந்தத்தை தேடிக் கொண்டிருக்கும் ஒரு புலம் பெயர் தொழிலாளிக்கு இது நல்வாய்ப்பாக இருக்கும். "குறைவாகவே சம்பாதிக்கின்றோம். இங்கு விலைவாசி மிகவும் அதிகம்," என்று கூறுகிறார் அந்த பெண்மணி. தன்னுடைய சொந்த ஊரில் தாத்தா, பாட்டியுடன் வசித்து வரும் அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் பணம் அனுப்ப போதுமான அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார். ஒரு ஆடைக்கு இவ்வளவு ஊதியம் என்ற அடிப்படையில் தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு ஆடையை தைப்பதற்கு இருக்கும் சவால்களைப் பொறுத்து அதற்கான ஊதியமும் மாறுபடும். ஒரு எளிமையான டி-சர்ட் என்றால் அதற்கு ஒன்று அல்லது இரண்டு யுவான்கள் (சீன பணம்) வழங்கப்படும். "ஒரு மணி நேரத்திற்கு என்னால் டஜன் டி-சர்ட்டுகளை தைக்க இயலும்," என்கிறார் அந்த பெண்மணி. சினோஸில் உள்ள தையலை சரிபார்ப்பது ஒரு முக்கியமான பணி என்று அவர் கூறுகிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரும், ஒரு மணி நேரத்தில் அவர்களால் எந்தெந்த ஆடைகளை தைக்க இயலும்? ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் ஊதியம் என்ன? ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்க இயலும் என்று கணக்கிட்டனர். பன்யூவில் உள்ள தெருக்கள் தொழிலாளர் சந்தைகளாகவே செயல்படுகின்றன. அதிகாலையில் வேலையாட்களும், இருசக்கர வாகனங்களும் காலை உணவு வண்டிகள், சோயாபீன்ஸ் பால் விற்கும் வண்டிகள், சிக்கன் மற்றும் கோழி முட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளை கடந்து செல்கின்றனர். இங்கு வேலை நேரமானது காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணியை தாண்டி செல்கிறது என்பதை பிபிசி கண்டறிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, உரிமைகளுக்காக போராடும் குழுவான பப்ளிக் ஐ அமைப்பு வெளியிட்ட அறிக்கையோடு இது ஒத்துப்போகிறது. ஷையன் நிறுவனத்திற்கு ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றிய 13 ஊழியர்களிடம் நடத்திய நேர்காணலின் அடிப்படையில் பப்ளிக் ஐ இந்த அறிக்கையை வெளியிட்டது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் பலர், மிகை நேரமாக பணியாற்றுகின்றனர் என்று கண்டறிந்தது அக்குழு. மிகை நேரம் இல்லாமல் பணியாற்றும் போது கிடைக்கும் ஊதியமானது 2,400 யுவான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருந்தது. ஆசியா ஃப்ளோர் வேஜ் அல்லியன்ஸ், வாழ்வதற்கு தேவையான வருமானம் என்று நிர்ணயித்திருக்கும் 6512 யுவான்களைக் காட்டிலும் இது குறைவு. ஆனால் பிபிசியிடம் பேசிய பல பணியாளர்கள், ஒரு மாதத்திற்கு 4000 முதல் 10,000 யுவான்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்தனர். "இவர்களின் பணி நேரம் என்பது அசாதாரணமானது இல்லை. ஆனால் நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பானது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்," என்று அந்த குழுவில் பணியாற்றும் டேவிட் ஹாச்ஃபீல்ட் கூறுகிறார். "இது உழைப்புச்சுரண்டலின் தீவிர போக்கு. இது வெளிச்சத்திற்கு வர வேண்டும்," என்றார் ஹாச்ஃபீல்ட். சீன தொழிலாளர்கள் சட்டத்தின் படி, ஒரு வாரத்திற்கு சராசரியான பணி நேரம் என்பது 44 மணி நேரத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. தொழிலாளர்கள் ஓய்வு பெற வாரத்திற்கு ஒருமுறையாவது விடுப்பு வழங்குவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்டம் வலியுறுத்துகிறது. இந்த குறிப்பிட்ட வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. ஷையனின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இருந்தாலும், அநேக ஆடைகள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. சீன நிறுவனங்கள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்கும் அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது ஷையனின் வெற்றி. வெளியுறவுத்துறை செயலாளராக டொனால்ட் டிரம்பால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மார்கோ ரூபியோ ஜூன் மாதம், சீனாவுடனான ஷையன் நிறுவனத்தின் உறவு கவலை அளிப்பதாக தெரிவித்தார். அடிமைத்தனம், உழைப்பை சுரண்டுவது, மோசமான சூழலில் பணியாற்றுவது, வர்த்தக தந்திரங்கள் ஆகியவை தான் ஷையனின் வெற்றிக்கு காரணம் என்று கூறினார். ரூபியோவின் இந்த கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் குவாங்சோவில் பலரின் வாழ்க்கை முறை, நீண்ட வேலை நேரம் கொண்டதாக மாறியுள்ளது. இது நியாயமற்றது மற்றும் சுரண்டல் போக்கைக் கொண்டது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஒரு வேலை நாளை, அங்கே கேட்கும் தையல் இயந்திரத்தின் சத்தம் கொண்டு தீர்மானிக்கலாம். உணவு இடைவேளையின் போது மட்டுமே அது நிற்கும். அப்போது பணியாளர்கள் தட்டும், கையில் சாப்ஸ்டிக்ஸுடனும் உணவகத்தில் சாப்பாடு வாங்க நீண்ட வரிசையில் நிற்பார்கள். உட்கார்ந்து உணவு உண்ண இடம் இல்லையென்றால் தெருவில் நின்று உண்பார்கள். "நான் நாற்பது ஆண்டுகளாக இங்கே பணியாற்றி வருகிறேன்," என்று கூறுகிறார் 20 நிமிடம் உணவுக்காக வெளியே வந்த பெண். நாங்கள் பார்வையிட்ட தொழிற்சாலைகள் நெரிசலுடன் இல்லை. போதுமான வெளிச்சம் உள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்விசிறி அங்குள்ள சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டதாக இரண்டு வழக்குகள் பதிவான சூழலில், சிறுவர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் உடனே புகாரளிக்க வலியுறுத்தி பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. லண்டன் பங்குச் சந்தையில் தங்களின் நிறுவனத்தை பட்டியலிட நிறுவனம் முயற்சி செய்து வருவதால், ஷையன் அதன் விநியோகஸ்தர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. "இது அவர்களின் நற்பெயரைப் பற்றியது," என்று குறிப்பிடுகிறார் ஷெங் லு. அவர் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் மற்றும் ஆடை ஆய்வுகள் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். "ஷையன் ஒரு ஐ.பி.ஓவை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால், அது ஒரு கண்ணியமான நிறுவனம் என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதை குறிப்பதாகும். ஆனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்க வைக்க அந்த நிறுவனம் சில பொறுப்புகளை ஏற்று தான் ஆக வேண்டும்," என்று தெரிவித்தார். ஷையன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்து பருத்தியை பெறுகிறது என்ற குற்றச்சாட்டு தான். உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாயப்படுத்தி இந்த பகுதியில் பருத்தி விளைவிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனை பெய்ஜிங் மறுத்தாலும், ஒரு காலத்தில் சிறந்த பருத்தி விளையும் பகுதி என்ற புகழைப் பெற்ற ஜின்ஜியாங், தன்னுடைய மதிப்பை இழந்தது. இந்த விமர்சனத்தைச் சமாளிப்பதற்கு இருக்கும் ஒரே வழி ஷையன் இன்னும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுதான் என்கிறார் ஷெங். "தொழிற்சாலைகள் பட்டியலை முழுமையாக வெளியிடாத வரையில், விநியோகச் சங்கிலியை பொதுமக்களுக்கு வெளிப்படையானதாக மாற்றும் வரையில், ஷையனுக்கு இது மிகவும் சவாலானதாக இருக்கும்," என்றார் ஷெங். இந்த விநியோக சங்கிலி முழுமையாக சீனாவில் ஒருவகையில் நன்மை. ஏன் என்றால் வெகு சில நாடுகளே முழுமையான விநியோக சங்கிலியை அந்தந்த நாடுகளுக்குள் வைத்துள்ளது. சீனாவிடம் இது இருக்கிறது என்பதால் அதனுடன் யாராலும் போட்டியிட இயலாது. வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், துணிகளை தயாரிக்க சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கின்றன. ஆனால் சீன தொழிற்சாலைகள் துணியிலிருந்து பொத்தான்கள் வரை அனைத்திற்கும் உள்ளூர் வளங்களையே நம்பியுள்ளன. எனவே பலவிதமான ஆடைகளை தயாரிப்பது எளிது. அதனை விரைவாக செய்தும் முடிக்க இயலும். ஷையனுக்கு இது நன்றாகவே செயல்படுகிறது. ஏன் என்றால் அதன் 'அல்காரிதம்' தான் 'ஆர்டர்களை' தீர்மானிக்கிறது. ஆன்லைனில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒரே ஆடையை பலமுறை 'க்ளிக்' செய்தாலோ, ஒரே ஸ்வெட்டரை பல முறை பார்த்தாலோ, அத்தகைய ஆடைகளை தொழிற்சாலைகள் அதிகமாகவும், விரைவாகவும் உருவாக்க ஆடை நிறுவனங்கள் வேண்டுகோள் வைக்கும். குவாங்சோவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது சவால் மிக்கதாக இருக்கும். ஷையன் நிறுவனத்தில் நன்மை தீமை என இரண்டும் உள்ளது. ஆர்டர்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்பது நல்லது. ஆனால் லாபம் மிகவும் குறைவாகவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாகவும் இருக்கும். ஷையனின் அளவு, செல்வாக்கை கருத்தில் கொண்டால், பேரம் பேசுவது கடுமையானதாக இருக்கும். அதனால் செலவீனத்தைக் குறைக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் பிற வழிகளை நாடுகின்றனர். இது இறுதியில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க செய்கிறது. "ஷையனுக்கு முன்புவரை ஆடைகளை சொந்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்தோம்," என்கிறார் மூன்று தொழிற்சாலைகளின் உரிமையாளர். "செலவு, விலை மற்றும் லாபம் என அனைத்தையும் எங்களால் அப்போது முடிவு செய்ய முடியும். ஆனால் தற்போது ஷையன் விலையை கட்டுப்படுத்துகிறது. எனவே செலவினங்களைக் கட்டுப்படுத்த பிற வழிகளை யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும்," என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஆர்டர்கள் அதிகரிக்கும் போது அது கூடுதல் பலன் தான். ஷிப்மேட்ரிக்ஸ் என்ற லாஜிஸ்டிக்ஸ் ஆலோசனை நிறுவனத்தின் தரவுகளின் படி, ஷையன் நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேக்கேஜ்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிறது. ஷையன், ஃபேஷன் உலகின் ஒரு தூண் என்று கூறுகிறார் விநியோகஸ்தரான குவோ க்யூங் இ. "அந்த நிறுவனம் துவங்கும் போது நான் என்னுடைய பணியை துவங்கினேன். அதன் வளர்ச்சியை நான் பார்த்தேன். உண்மையில் இது ஒரு சிறந்த நிறுவனமாக செயல்படுகிறது. வருங்காலத்தில் இது மிகவும் பலம் அடையும். ஏன் என்றால் அந்த நிறுவனம் சரியான நேரத்தில் சம்பளத்தை வழங்கிவிடுகிறது. அதனால் தான் இது மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருக்கிறது" என்றார். "எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அன்று சம்பளம் வழங்க வேண்டும். லட்சமோ, கோடியோ, எதுவாக இருந்தாலும் அந்த பணம் சரியான நேரத்தில் எங்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது," என்றார். ஷையன் தொழிற்சாலையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றுவது என்பது பல உழைப்பாளர்களுக்கு ஆனந்தமான ஒன்று அல்ல. சிலருக்கு இது பெருமையான விசயமாக இருக்கிறது. "உலகுக்கு, சீனர்களாகிய எங்களின் பங்களிப்பு இது," என்று கூறுகிறார் 33 வயது பெண்மணி. தன்னுடைய அடையாளத்தை வெளியிட விரும்பாத அவர், காங்டாங்கில் (Guangdon) உள்ள ஷையன் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலை முடிந்து இரவு படரும் வேளையில், தொழிலாளர்கள் அவர்களின் இரவு உணவை முடித்துக் கொண்டு மீண்டும் தொழிற்சாலைக்குள் வந்து கொண்டிருந்தனர். வேலை பார்க்கும் நேரம் மிகவும் அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அந்த மேற்பார்வையாளர், "நாங்கள் ஒவ்வொருவரும் நன்றாக பழக துவங்கிவிட்டோம். ஒரு குடும்பம் போல் செயல்படுகிறோம்," என்று கூறினார். சில மணி நேரம் கழித்து தொழிலாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பிச்செல்கின்றனர். அந்த இரவிலும் பல வீடுகளில் மின்விளக்கு எரிந்த வண்ணம் இருந்தது. சிலர் நள்ளிரவு வரை பணியில் ஈடுபடுவார்கள் என்று ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் கூறுகிறார். அவர்களுக்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post