எல்லா முறைகேடுகளிலும் நீட் தேர்வு நம்பர் 1.. பல்கலைக்கழகங்களை அபகரிக்கும் முயற்சி.. மு.க.ஸ்டாலின்!

post-img
சென்னை: நாட்டின் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டிருந்தது. அதில், பல்கலைக்கழக துணை வேதர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை மாநில அரசு பரிந்துரைக்கும் நபர் குழுவில் இடம்பெற்று வந்தார். அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் யுஜிசி விதிகளுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், பள்ளிக் கல்வியை சிதைப்பதற்காகவே புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசு பொதுத் தேர்வு என்ற பெயரால் வடிகட்டி வடிகட்டி அனைவரையும் கல்வியை தொடர முடியாமல் செய்யப் போகிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மூலமாக மருத்துவக் கனவை சிதைக்கும் காரியத்தை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். தங்கை அனிதா உள்ளிட்ட எத்தனையோ உயிர்களை நாம் இழந்தோம். ஆனால் ஆண்டு முழுவதும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக், மதிப்பெண் குளறுபடி என்று எல்லா முறைகேடுகளும் நடப்பதில் நம்பர் 1 தேர்வாக நீட் தேர்வு இருக்கிறது. இதேபோல் பல்கலைக்கழகத்தை சிதைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கிவிட்டது. துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யுஜிசி எனும் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறை வகுத்துள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது பல்கலைக்கழகங்களை சிதைக்கும் காரியமாக தான் முடியும். அதற்காக தான் இப்படி செய்யப் போகிறார்கள். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கு இடையில் கருத்து மோதல் நடந்து வருகிறது. துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவில் யுஜிசி பரிந்துரை செய்யும் உறுப்பினர்களை ஆளுநர் நியமித்தார். நாம் அதனை ஏற்கவில்லை. இந்த மோதலுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு எட்டப்படாத நிலையில், தனிச்சையாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிக அதிகாரங்களை ஆளுநர்களுக்கு வழங்குவது சரியும் அல்ல.. முறையும் அல்ல. இதற்காக ஒரு உத்தரவை போட்டுவிட்டு, இதை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யுஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது என்று சொல்வது அநியாயம் அல்லவா.. பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்க மிரட்டல் அல்லவா.. மாநில அரசுகள் தங்கள் பொருளாதார பலத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரித்து கொள்கிற அக்கிரமான முயற்சியாகவே இதனை கருத வேண்டி இருக்கிறது. இந்த விதிமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சிறுமைப்படுத்தும் செயல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும். நியமன பதவிகளில் ஒரு சில ஆண்டுகள் இருந்துவிட்டு செல்பவர்களுக்கு, ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்து கொள்ள இயலாது. மத்திய அரசு கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்வதில்லை. வரம்பற்ற கட்டணம், இடஒதுக்கீடு இல்லாத தன்மை, நிதிநிலை அறிக்கையில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, ஐஐடி, ஐஐஎம் போன்ற ஒரு கல்வி நிறுவனத்தை கூட மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பது சுயநலமானது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டோ, கல்வியின் தரத்தை மனதில் வைத்தோ இந்த முயற்சி நடக்கவில்லை. நூற்றாண்டு கால பல்கலைக்கழகங்களை அபகரிக்க எத்தனிப்பது எதேச்சதிகாரமாகும். சிறந்த கல்வி நிறுவனங்களை நாட்டில் அதிகமாக கொண்டு தமிழ்நாடு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்காது. எதிர்கால தலைமுறையை காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வெண்டும். இந்த தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு மனம் மாறாவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று முன்னுரையுடன் தீர்மானத்தை முன் மொழிகிறேன். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட விதிகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்தப் பேரவை கருதுகிறது. அதேபோல் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகளுக்கான குறைந்தபட்ச வரவு நெறிமுறைகள் 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு நெறிமுறைகள் 2025 உள்ளிட்டவை தேசியக் கல்வி கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல, உயர்கல்வி முறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த 2 வரைவு நெறிமுறைகளையும், துணை வேந்தர் நியமனம் தொடரான விதிமுறையையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித்துறையை பேரவை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post