இந்தியா: 4.7 கோடி ஆண்டுகள் முன் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி பாம்பு' - எங்கே? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

post-img
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பண்டாரோ பகுதிக்கு அருகே உள்ள லிக்னைட் சுரங்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சில புதைபடிவங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதுவே உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புதைபடிவங்களில் மிக நீளமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதைபடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பாம்பின் நீளம் 10 முதல் 15 மீட்டர் வரை இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது 4.7 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவம் என நம்பப்படுகிறது. ஐஐடி ரூர்க்கி பேராசிரியர்கள் சுனில் வாஜ்பேயி மற்றும் தேப்ஜீத் தத்தா ஆகியோர், இந்தப் புதைபடிவம் அடையாளம் காணப்பட்டது குறித்து, இந்துஸ்தான் டைம்ஸில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். 'நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' இதழிலும் இதன் ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தப் பாம்புக்கு 'வாசுகி இண்டிகஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புராணங்களைப் பார்த்தால், இந்தப் பெயர் சிவபெருமானுடன் தொடர்புடைய பாம்பைக் குறிக்கப் பயன்படுகிறது. ராயல் சொசைட்டி ஆஃப் ஓப்பன் சயின்ஸில் 2018இல் மட்சோய்டே (Madsoidae) இனம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதன்படி, மட்சோய்டே இனமானது பூமியில் காணப்படும் கோண்ட்வானா 'பேய்ப் பாம்பு' வகையைச் சேர்ந்தது. இந்த வகைப் பாம்புகள் கிரெட்டேசியஸ் காலம் (சுமார் 66 லட்சம் முதல் ஒரு கோடியே 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) முதல் ப்ளீஸ்டோசீன் காலம் வரை (சுமார் 1.2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாம்புகளின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதில் இந்த வகைப் பாம்புகளின் ஆய்வு மிகவும் முக்கியமானது. மட்சோய்டே இனத்தைச் சேர்ந்த இந்தப் பாம்புகளின் நீளமும் அளவும் மிகப் பெரியது. 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவ்வகை பாம்புகள் இப்போது இந்தியா இருக்கும் பகுதியில் வாழ்ந்தவை. "அந்தக் காலகட்டத்தில் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்த தீவிர வெப்பநிலை காரணமாக பாம்புகளின் அளவு மிகப் பெரியதாக இருந்திருக்கலாம்," என்று ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 27 விதமான புதைபடிவங்களை ஆய்வு செய்ததில், இது மிகப்பெரிய பாம்பு என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் முழு உடலும் நீண்ட குழாய் போல் இருக்கும். பாம்பின் நீளம் 10.9 மீட்டர் முதல் 15.2 மீட்டர் வரை இருக்கலாம். இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் 'வலைவடிவ மலைப்பாம்பு' தான் தற்போதைய காலகட்டத்தில் பூமியில் மிக நீண்ட காலம் வாழும் பாம்பு. இருப்பினும், அவற்றின் நீளம் 6.25 மீட்டர் மட்டுமே. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாம்பு படிமம் இதைவிட மிகப் பெரியது. கடந்த 1912இல் 10 மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்று 'கின்னஸ் உலக சாதனை'யில் இடம் பிடித்தது. அது ஒரு பச்சை அனகோண்டா. இவற்றில் பெண் பாம்புகள் ஆண் பாம்புகளைவிட நீளமானவை. பொதுவாக இந்தப் பாம்புகள் வெப்பமான காலநிலையில் காணப்படும். 'வாசுகி இண்டிகஸ்' பாம்பு படிமங்கள் முதன்முதலில் 2005இல் பேராசிரியர் சுனில் வாஜ்பேயினால் கண்டறியப்பட்டது. கட்ச் பகுதியில் உள்ள பண்டாரோ நிலக்கரிச் சுரங்கம் அருகே இவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எச்சங்கள் முதலையின் படிமங்களாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. இருப்பினும், இந்தப் புதைபடிவங்கள் 2022 வரை சுனிலின் ஆய்வகத்தில் இருந்தன. அதன்பிறகு, தேப்ஜீத் தத்தா தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்ததால், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அப்போதுதான் இந்தப் புதைபடிவமானது சாதாரண முதலை அல்ல, வேறு இனம் என்பது பேராசிரியர்கள் இருவருக்கும் புரிந்தது. “இந்தப் புதைபடிவங்கள் 2005இல் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இவற்றைப் பற்றிய ஆராய்ச்சியை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினோம். 2022இல் மீண்டும் ஆய்வைத் தொடர்ந்தோம். முதலில் இது ஒரு முதலை படிமம் என்று நினைத்தோம். அதிக அளவு புதைபடிவங்கள் இருப்பதே இதற்குக் காரணம். ஆனால், அது ஒரு பாம்பு படிமம் என்று ஆய்வின்போது பின்னர் தெரிய வந்தது,” என்று சுனில் வாஜ்பேயி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். வாசுகி பாம்பு அளவில் பெரிதாக இருப்பதால், அது மற்ற உயிரினங்களை வேட்டையாடி வாழ்ந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தற்போதுள்ள மலைப் பல்லிகள் மற்றும் அனகோண்டா பாம்புகள் போன்று இதுவும் இரையைப் பிடித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. பேராசிரியர் தேப்ஜீத் கூறுகையில், “இந்தப் பாம்பு அவ்வளவு கொடூரமானதாக இருக்காது. அன்றைய தட்பவெப்பநிலையால் பாம்புக்கு அப்படியொரு பிரமாண்ட உடலமைப்பு இருந்திருக்கலாம்,” என்றார். புதைபடிவ ஆய்வின்படி, இதுவே மிக நீளமான பாம்பு. இதுகுறித்த ஆராய்ச்சி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post