கேரளா: தாய், இரட்டை குழந்தை கொலை - செயற்கை நுண்ணறிவு மூலம் 19 ஆண்டுக்கு பிறகு துப்பு துலங்கியது எப்படி?

post-img
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 2006 -ஆம் ஆண்டு ஒரு பெண் மற்றும் அவரின் 17 நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ கண்டுபிடித்தது கைது செய்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்த அவர்களை 19 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடித்ததில் ஏ.ஐ. தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த 19 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை அப்பெண்ணின் தாய் தனியாக நின்று நடத்தியுள்ளார். "இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்கத்தான் நான் இத்தனை ஆண்டுகள் என் உயிரை கையில் பிடித்து வைத்திருந்தேன். என் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டார்." என்கிறார் அந்த பெண்ணின் தாய். பிப்ரவரி 10, 2006. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் எனும் கிராம பஞ்சாயத்தில் வசித்துவந்த சாந்தம்மா, ஒரு வேலையாக பஞ்சாயத்து அலுவலகம் சென்றிருந்தார். மீண்டும் வீடு திரும்பியபோது, அவருடைய 24 வயது மகள் ரஞ்சினியும், பிறந்து 17 நாட்களேயான ரஞ்சினியின் இரட்டைப் பெண் குழந்தைகளும் கொடூரமாக, கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ரஞ்சினி தரையிலும் குழந்தைகள் கட்டிலிலும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அதிர்ச்சியில் மயங்கினார் சாந்தம்மா. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்தான் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான், தற்போது 67 வயதாகும் சாந்தம்மாவின் நீண்டகால வேண்டுதல். ஆனால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக வலைதளங்கள் இல்லாத, இணையம் வளர்ந்திராத காலகட்டத்தில் நிகழ்ந்த அந்த கொலையை செய்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒரிரு ஆண்டுகள் அல்ல, 19 ஆண்டுகளாகிவிட்டன. சாந்தம்மாவின் இத்தனை ஆண்டுகால வேண்டுதல், 2025 புத்தாண்டின் முதல் வாரத்தில் நிறைவேறியிருக்கிறது. அசாத்தியமான தொழில்நுட்ப யுகத்தில், சாந்தம்மாவின் மகள் மற்றும் அவருடைய இரட்டைக் பேரக்குழந்தைகளின் கொலையில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்படும் இருவரை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கேரள மாநில காவல்துறை கண்டுபிடித்தது. அவர்கள் புதுச்சேரியில் இருப்பது தெரியவந்ததையடுத்து, சிபிஐ அவர்கள் இருவரையும் கைது செய்தது. அதில் ஒருவர் ரஞ்சினியுடன் பழகியவரும், அவரின் இரட்டைக் குழந்தைகளின் தந்தையுமான டிவில் குமார் என போலீசார் கூறுகின்றனர். மற்றொருவர் அவரின் நண்பர் ராஜேஷ். அதுமட்டுமல்லாமல், அவ்விருவரும் தங்கள் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றி, வேறொரு பெயரில் புதுச்சேரியில் தங்களுக்கென குடும்பங்களையும் உருவாக்கியிருந்தனர் என்கிறது காவல்துறை. டிவில் குமார் அஞ்சல் பஞ்சாயத்தைச் சேர்ந்தவர், ராஜேஷ் கண்ணூர் மாவட்டம் ஸ்ரீகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர். பிப்ரவரி, 2006-ல் அவர்களை கண்டுபிடிக்கும்பொருட்டு, சிபிசிஐடி வெளியிட்ட லுக் அவுட் நோட்டீஸில் அவர்கள் இருவரும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளை பேசுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. டிவில் குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் அப்போது ராணுவத்தில் பணிபுரிந்துவந்தனர். "என் இத்தனை ஆண்டுகால பிரார்த்தனைக்கும் கண்ணீருக்கும் கிடைத்த பரிசு இது. என் மகளை கொலை செய்தவர்களை கண்டுபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகள் நான் நீதிக்காக போராடியுள்ளேன். தனியாக இந்த போராட்டத்தை நடத்துவதற்கான தைரியம் எனக்கு எங்கிருந்து வந்தது என தெரியவில்லை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இருவருக்கும் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்." என்கிறார் சாந்தம்மா. சாந்தம்மா தன் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து முழுமையாக மீளவில்லை. அப்போது நடந்த அனைத்தும் அவருக்கு இன்றும் நன்கு நினைவில் இருக்கின்றது. மிக ஏழ்மையான பின்னணியை கொண்டவர் சாந்தம்மா. ஆரம்ப காலத்திலேயே கணவரிடமிருந்து பிரிந்துதான் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். மகளின் இறுதிச் சடங்குக்கு மட்டும் சாந்தம்மாவின் கணவர் வந்துள்ளார். தன்னுடைய மற்றொரு மகள் ரஜினி மற்றும் உறவினர்கள் சிலரின் உதவியுடன் தற்போது கொல்லத்தில் ஒரு சிறிய வீடு கட்டி அங்கே தனியாக வாழ்க்கை நடத்திவருகிறார். ஆஸ்துமா, தைராய்டு பிரச்னை போன்ற உடல்நலக் குறைகளுடன் இப்போராட்டத்தை நம்பிக்கையின் கயிற்றைப் பற்றிக்கொண்டு நடத்தியிருக்கிறார் சாந்தம்மா. இந்த சட்டப் போராட்டத்தில் தனக்கு யாரும் உடன் நிற்கவில்லை என சாந்தம்மா வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். இந்த 19 ஆண்டுகள் ஒருகட்டத்தில் எந்த புள்ளியிலும் சட்டப் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கவில்லை என்கிறார் சாந்தம்மா. "இந்த நாள் வரும் என எனக்குத் தெரியும். கொலையாளிகள் என்றேனும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லாம் கைமீறியதாக தோன்றும் சமயத்தில், எல்லாம் சரியாகும் என எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன்." தன் மகளை கொலை செய்தவர்களை நிச்சயமாக பார்க்க வேண்டும் என சாந்தம்மா விரும்புகிறார். "என் மகளையும் அவளுடைய குழந்தைகளையும் ஏன் கொன்றீர்கள் என அவர்களிடம் கேட்க வேண்டும்." சாந்தம்மாவின் உறுதிதான் இந்த வழக்கை இவ்வளவு தூரம் நகர்த்திவந்ததாக நம்மிடம் கூறுகிறார், கேரள காங்கிரஸின் மூத்தத் தலைவர் ஜோதிகுமார் சமக்கலா. "சாந்தம்மாவுக்கு பெரிதாக ஆதரவு என யாரும் இல்லை.கொலையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் இத்தனை ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை." என்கிறார் ஜோதிகுமார். இந்த கொலை சம்பவம் நடந்த காலகட்டத்தில் கேரள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஜோதிகுமார், சாந்தம்மாவை அப்போதைய கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியிடம் அழைத்துச் சென்றார். கேரளாவில் இந்த வழக்கு கவனம் பெறுவதிலும் சாந்தம்மா சட்டப் போராட்டத்தை தொடர்வதிலும் உறுதுணையாக இருந்துள்ளார் ஜோதிகுமார். 2006, பிப்ரவரி 10 அன்று மதியம் அப்போதைய அஞ்சல் காவல்நிலைய ஆய்வாளர் ஷாநவாஸுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. "அஞ்சல் கிராமத்தில் ஏரம் எனும் பகுதியில் வாடகை வீட்டில் வசித்திருந்த ரஞ்சினி மற்றும் அவருடைய 17 நாள் இரட்டைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருந்ததை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர்." என நினைவுகூர்கிறார் ஷாநவாஸ். உடனடியாக தன் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார் ஷாநவாஸ், அங்கு சாந்தம்மா ஆக்ரோஷமாக கதறி அழுதது அவருக்கு இன்றும் ஞாபகத்தில் உள்ளது. அந்த கொலையில் நீடித்த சந்தேகங்களும் மர்மங்களும் அவருக்கு இன்னும் நினைவில் உள்ளது. மிக கவனமாக திட்டமிட்டு இக்கொலையை டிவில் குமாரும் ராஜேஷும் நிகழ்த்தியுள்ளதாகக் கூறுகிறார் அவர். "கொலை நிகழ்ந்த சமயத்தில், டிவில் குமார் கொல்லத்தில் இல்லாமல், பதான்கோட் ராணுவ தளத்தில் பணியில் இருந்தார். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என இப்படி திட்டம் தீட்டியுள்ளனர். அவருடைய நண்பர் ராஜேஷ் தான் இக்கொலையை செய்தார்" என்கிறார் அவர். டிவில் குமார் ரஞ்சினியுடன் உறவில் இருந்ததாகவும் பின்னர் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும் கூறுகிறார் ஷாநவாஸ். ''டிவில் குமாருடனான உறவில் தான் ரஞ்சினிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், அதை டிவில் குமார் ஏற்காததால் மாநில மகளிர் ஆணையத்தில் வழக்கும் பதிவு செய்திருந்தார் ரஞ்சினி. இதுதான் அவரையும் அக்குழந்தைகளையும் கொலை செய்ததற்கான காரணம்'' என ஷாநவாஸ் தெரிவித்தார். ரஞ்சினி குழந்தைகளை பெற்று அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில், ராஜேஷ் தன்னை அனில் குமார் எனும் போலியான பெயரில் ரஞ்சனியுடன் அறிமுகமாகிறார். தன் மனைவியும் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, ரஞ்சினிக்கும் சாந்தம்மாவுக்கும் மருத்துவமனையில் சில உதவிகளை செய்துள்ளார். வீடு திரும்பிய பிறகும் அவருக்கு உதவிகளை செய்துள்ளார் ராஜேஷ். ''கொலை செய்வதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, டிவில் குமாரும் ராஜேஷும் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளனர். அதன் பதிவுச் சான்றிதழ் ஆவணம் சம்பவ இடத்தில் இருந்தது. அதுமட்டும்தான் எங்களிடமிருந்த ஒரே துப்பு. அந்த வாகனத்தின் உரிமையாளர் கொடுத்த அடையாளங்களை வைத்தே டிவில் குமாரும் ராஜேஷும்தான் இதை செய்ததாக தெரியவந்தது." என்றார் ஷாநவாஸ். கொலை நடந்த பிறகு வாகனத்தை வேகமாக ஒருவர் ஓட்டிச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ''ராஜேஷை பிடிக்கும் முயற்சியில் இறங்கியது காவல்துறை. வழியே, ராஜேஷ் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க நிற்கவே, காவல்துறையை சேர்ந்த ஒருவர் அவரை பிடிக்க முயற்சித்து அதில் தோல்வியடைந்தார். பின்னர் அந்த வங்கி விவரங்களை ஆராய்ந்ததில் அந்த கணக்கு, பதான்கோட்டில் உள்ள ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்மூலம் அவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்ததும் ராஜேஷ்- டிவில் குமாருக்கும் இடையேயான தொடர்பும் தெளிவானது. அந்த வங்கிக்கணக்கின் மூலம்தான் ராஜேஷின் முதல் புகைப்படம் எங்களுக்கு கிடைத்தது'' என்றார் ஷாநவாஸ் "இருவரையும் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டோம். மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், பதான்கோட், ஹரியாணா என பல்வேறு இடங்களில் தேடினோம். மஹாராஷ்டிராவில் இருவரையும் மிகவும் நெருங்கியும் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பல இடங்களில் அவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந்த குற்றச்சம்பவம் குறித்து ராணுவத்திற்கு தெரிவித்தோம், அங்கும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்றார் அவர் இதனிடையே, கேரள சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கு, 2010ல் சிபிஐ வசம் செல்லவே, 2013-ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஷாநவாஸ் பின்னாளில் ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்து, கேரள காவல்துறையில் உளவுப்பிரிவில் எஸ்.பியாக இருந்து 2022-ல் ஓய்வு பெற்றார். இந்த கொடூரமான கொலையின் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியாதது ஷாநவாஸுக்கு நெருடலான ஒன்றாகவே இருந்தது. "கொலையாளிகள் யார் என தெரிந்தும் கண்டுபிடித்து அதற்கான தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியாதது உறுத்தியது." உளவுப்பிரிவில் அவர் இருந்தபோது, தீர்க்கப்படாத வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கு குறித்து ஷாநவாஸ் தன் மேலதிகாரிகளிடம் தெரிவிக்கவே, தொழில்நுட்பத்தின் உதவியுடன் விசாரணையை தொடங்கினர் "நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களிடம் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய டிவில் குமாரின் பழைய புகைப்படம் இருந்தது," என்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய கேரள மாநில சட்ட ஒழுங்கு ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம். கேரள காவல்துறை பிரத்யேகமாக வடிவமைத்த ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தினர். அதன்மூலம், டிவில் குமாரின் பழைய புகைப்படங்களை பயன்படுத்தி அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை உருவகப்படுத்த முடிந்திருக்கிறது. இதன்பின், அந்த படத்துடன் பொருந்திப்போகும், இணையத்தில் உள்ள பல லட்சக்கணக்கான படங்களுடன் ஒப்பிட முடியும். அப்படிதான் டிவில் குமாரை கண்டுபிடித்துள்ளனர். "இந்த தொழில்நுட்பம் மூலம் டிவில் குமாரின் முக அம்சங்கள், தலைமுடியில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் கூட தெரியவந்தது," என விளக்குகிறார் மனோஜ் ஆபிரஹாம். டிவில் குமாரின் தற்போதைய உருவகப் படம் ஃபேஸ்புக்கில் உள்ள ஒரு புகைப்படத்துடன் பொருந்தி போயிருக்கிறது. அந்த ஃபேஸ்புக் கணக்கில் உள்ள மொபைல் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரியில் டிவில் குமார் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சிபிஐ பிரிவில் தகவல் அளித்தனர். சிபிஐ டிவில் குமாரை கைது செய்து அவர்மூலம் ராஜேஷையும் கைது செய்தது. ''டிவில் குமாரும் ராஜேஷும் தங்கள் அடையாளங்களை முற்றிலுமாக மறைத்து இருவரும் திருமணமும் செய்துள்ளனர். அவர்கள் முறையே விஷ்ணு, பிரவீன் குமார் என பெயரை மாற்றிக்கொண்டு, இண்டீரியர் டிசைனிங் துறையில் தொழில் செய்து வந்துள்ளனர்.அவர்கள் குறித்து இத்தனை ஆண்டுகள் அவர்களின் குடும்பத்தினருக்கோ, அக்கம்பக்கத்தினருக்கோ எந்த சந்தேகமும் வரவில்லை," என்கிறார் ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாம். ''இப்படி ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் போக்கு உலகளவில் வளர்ந்துவருகிறது'' என்கிறார் அவர் "ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிவது, எளிதாகவும் திறன் வாய்ந்ததாகவும் இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் வருங்காலத்தில் ஏ.ஐ. இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படலாம்" என்பது மனோஜ் ஆபிரஹாமின் நம்பிக்கையாக இருக்கிறது. கைது செய்யப்பட்ட டிவில் குமார் மற்றும் ராஜேஷ் இருவரும் தற்போது சிபிஐ காவலில் உள்ளனர். ஜனவரி 18 வரை அவர்களை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இறந்துபோன குழந்தைகளுக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்வதற்காக, அக்குழந்தைகளின் மாதிரிகளை பாதுகாத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவையும் காவல்துறையினர் பெற்றிருந்தனர். ''டிவில் குமார் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், டி.என்.ஏ பரிசோதனை இனி மேற்கொள்ளப்படும்'' என்கிறது காவல்துறை. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post