தாலிபன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்துவதால் பாகிஸ்தானில் கவலை எழுவது ஏன்?

post-img
இந்தியாவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே அதிகரித்து வரும் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தானின் ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தாலிபனை எதிர்த்து வந்த இந்தியா தற்போது அதற்கு ஆதரவான போக்கை கடைபிடிக்க தயாராகி வருகிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு விவகாரம் குறித்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தாலிபன் அரசின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர்கான் முத்தாகியை துபாயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பிராந்தியத்தில் இந்தியாவை முக்கியமான பொருளாதார கூட்டாளியாக ஆப்கானிஸ்தான் கருதுவதாக தாலிபனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை நிபுணரான ஆயிஷா சித்திகா, நாயா தூர் தொலைக்காட்சியின் ராஸா ரூமியிடம் பேசினார். அப்போது, "ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன் கைப்பற்றிய கால கட்டத்தில், இந்தியா தாலிபனுடன் அதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என்பதால் தாலிபனுடன் பேச தயங்கியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் இன்றி இருப்பது பலன் அளிக்காது என்று இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது," என்று அவர் கூறியுள்ளார். மேற்கொண்டு பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆப்கானிஸ்தானுடனான உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் கொண்டுள்ள செல்வாக்கை குறைக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது," என்றும் குறிப்பிட்டார். "ஆப்கானிஸ்தானுடன் வரலாற்று ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளதாக இந்தியா நம்புகிறது. அதனை ஏன் தாலிபன் அரசுடனான உறவை மேம்படுத்த பயன்படுத்தக் கூடாது என்றும் நினைக்கிறது. இரு நாட்டு உறவு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடைமுறைக்குரிய முன்னெடுப்பாக பார்க்கிறேன்," என்றும் சித்திகா கூறினார். ஆப்கானிஸ்தானில் ஹமீத் கர்சாய், அஷ்ரஃப் கானி தலைமையிலான ஆட்சி நடந்த போது இரு நாட்டு உறவும் சிறப்பாக இருந்தது. அந்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள் போன்றவற்றை கட்டவும் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் முதலீடு குறித்து சித்திகா பேசும் போது, "ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை இந்தியா முதலீடு செய்துள்ளது. சாலைகளையும், அணைகளையும் இந்தியா கட்டியுள்ளது. இதனால் பேச்சுவார்த்தைகள் நடத்துவது இந்தியாவுக்கு லாபகரமானது. மத்திய ஆசியாவை அடைவதற்கான ஒரு முக்கியப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது என்பதால் இந்தியா தனக்கு சாத்தியமான வாய்ப்புகள் அனைத்தையும் முயற்சித்துப் பார்க்கிறது," என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் தாலிபன் அரசு இடையே மோசமடைந்து வரும் உறவு குறித்தும் சித்திகா பேசினார். "தாலிபன் அரசுடனான உறவை வலுப்படுத்த இந்தியா எவ்வளவு முயற்சி செய்தாலும் அதற்கு ஒரு எல்லையுண்டு. மற்றொரு புறம் பாகிஸ்தானுக்கு நிறைய அனுகூலங்கள் உள்ளன. ஏனென்றால் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மத்தியில் பரஸ்பர உறவை மேம்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஆனால் பாகிஸ்தானை பொருத்தமட்டில் இரண்டு எல்லையோர நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது,"என்று அவர் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தான் அரசுடனான உறவை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் நஜாம் சேத்தி, சாமா டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, இந்த இரு நாட்டு உறவும், ஹமீத் கர்சாய் மற்றும் அப்துல்லா அப்துல்லா ஆட்சி காலங்களில் இருந்த உறவைப் போன்று சிறப்பானதாக இருக்குமா? என்ற கேள்வியை முன்வைத்தார். "தாலிபன், ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது பாகிஸ்தான் ஆதரவு வழங்கியது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. பாகிஸ்தானில் இயங்கி வரும் தெஹ்ரீக்-இ-தாலிபன் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகள் தாலிபனுக்கு எதிராக போர் தொடுக்குமோ என்ற அச்சத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இது ஆப்கானிஸ்தானில் ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் பாகிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவர ஆப்கானிஸ்தான் முயற்சி செய்து வருகிறது," என்று விளக்கினார் சேத்தி. "இந்த இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பிரச்னைகள் குறித்து இந்தியா உணர்ந்துள்ளது. அதனால் தாலிபன் அரசுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற உத்தியை தாலிபனும் இந்தியாவும் பின்பற்றி வருகின்றன. தாலிபனுக்கு தேவையான நிதி உதவியை வழங்க இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஆப்கானிஸ்தானும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சியில் எந்த கவலையுமின்றி ஈடுபட்டு வருகிறது. தற்போது ஒரு பெரிய மாற்றத்திற்கு ஆப்கானிஸ்தான் தயாராகி வருகிறது," என்று கூறினார் சேத்தி. மேற்கொண்டு பேசிய அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறிவிடவில்லை என்பதையும் குறிப்பிட்டார். இன்றளவும் அங்கே இந்திய தூதரகமும் இதர அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியா - தாலிபன் இடையேயான உறவு வலுப்பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் பிரச்னைகளை சந்திக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். தாலிபனை, அதன் ஆரம்ப காலங்களில் இருந்து பாகிஸ்தான் ஆதரித்து வந்தது. ஆப்கானிஸ்தானை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தாலிபன் கைப்பற்றிய போது, அன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "அடிமை விலங்குகளை ஆப்கானிய மக்கள் உடைத்தெறிந்தனர்," என்று குறிப்பிட்டார். சாமா பாட்காஸ்ட் நிகழ்வில் பாகிஸ்தான் வெளியுறவு விவகார நிபுணர் அப்சர் அலாம் பேசினார். "தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது பாகிஸ்தான் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. ஆனால் தற்போது சூழல் மாறியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜே.பி. சிங், தாலிபன் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். தற்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தாலிபனின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர்கான் முத்தாகியை சந்தித்துள்ளார். "தெஹ்ரிக் - இ - தாலிபன், சாபஹர் தொடர்பான பிரச்னைகள் குறித்து இரு நாடுகளும் விவாதித்துள்ளன. தாலிபனுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. அந்த நாட்டுக்கு தேவையான மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. சாபஹர் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று இந்தியா நம்பிக்கை அளித்துள்ளது," என்று அவர் மேற்கோள்காட்டினார். "இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பானது அமீரகத்தில் நடைபெற்றுள்ளது. அங்கே பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது" என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான மலீஹா லோதியும் சாமா தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அப்போது, "பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகளில் சவால்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தற்போது மும்முனைகளிலும் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா தீவிர கொள்கையை கையாண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காபூல் உடனான உறவும் சிறப்பாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இரானுடனான உறவும் சரியாக இல்லை. பாகிஸ்தான் மூன்று முனைகளில் இருந்தும் சவால்களை எதிர்கொள்ள முடியாது," என்று கூறினார். மேற்கொண்டு பேசிய அவர், "இந்தியா விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. காஷ்மீர் குறித்து இந்தியா பேச மறுத்துவிட்டது. ஆப்கானிஸ்தானுடனான கொள்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். பழைய கொள்கைகள் மூலமாக பாகிஸ்தான் எந்த நன்மையும் அடையவில்லை. இரானுடனான உறவை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதனை பாகிஸ்தான் சரியாக பயன்படுத்தவில்லை," என அவர் தெரிவித்தார். "நீங்கள் அனைத்து நாடுகளுடனும் கடுமையான போக்கை பின்பற்ற இயலாது. இரான் விவகாரத்தில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை தாலிபன் அழுத்தத்தை விரும்பாது. அமெரிக்காவின் அழுத்தத்தையே அவர்கள் நிராகரித்த போது நாம் எல்லாம் எங்கே? நம்முடைய வியூகங்களின்படி தான் தாலிபனை சமாளிக்க வேண்டும்," என்று லோதி குறிப்பிட்டார். இந்தியா மற்றும் தாலிபன் இடையேயான உறவு குறித்து பாகிஸ்தானின் செய்தித்தாளான டானின் (Dawn) யூடியூப் பக்கத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. 'ஸரா ஹட்கே' என்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய நிபுணர் ஒருவர், 2021-ஆம் ஆண்டு தாலிபன் ஆட்சிக்கு வந்த போது இந்தியா அதனை ஆதரிக்கவில்லை. தற்போது வரை வேறெந்த நாடும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபன் அரசை அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஒரு சிறு அமைதிக்குப் பிறகு இந்தியா தன்னுடைய தூதரகத்தை ஆப்கானிஸ்தானில் மீண்டும் திறந்துள்ளது. இரு நாட்டு உறவையும் மேம்படுத்தும் பணிகள் ஓரளவுக்கு ஆரம்பமாகியுள்ளன," என்று குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரு நாட்டு உறவும் முன்னேறியுள்ளது என்பதற்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரியும், ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சரும் சந்தித்துக் கொண்ட சமீபத்திய நிகழ்வே முக்கியமான சாட்சி என்று குறிப்பிட்டார் அவர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post