இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?

post-img
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம், "காஸாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பாலத்தீன மக்களுக்கு மிகவும் தேவையான மனிதநேய உதவிகளை அதிகரிக்கும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அதே நேரம் இதை 'ஊக்குவித்ததற்காக' அமெரிக்க அதிபர் பைடனுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் காலில் அல்-ஹய்யா இது பாலத்தீனத்தின் "மீண்டு எழும் திறனின்" விளைவாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். பாலத்தீனர்கள் பலரும், இஸ்ரேல் பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த செய்தி அறிந்து கொண்டாடினர். ஆனால், காஸாவில் போர்முனையில் பதற்றம் குறையவில்லை. கத்தார் அறிவிப்பைத் தொடர்ந்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. இதில் காஸா நகரில் உள்ள ஷேக் ரத்வான் குடியிருப்புப் பகுதியில் இருந்த 12 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து இதுகுறித்து உடனடியாக பதில் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், "போரினால் ஏற்பட்ட அதிகப்படியான பாதிப்பை" சரி செய்வதே முதல் வேலை என்று தெரிவித்தார். பாலத்தீனர்களுக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க ஐக்கிய நாடுகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பயங்கரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அப்போது முதல் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. மனிதநேய உதவிகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், உணவு, எரிபொருள், மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ஹமாஸ் 94 பணயக்கைதிகளை கொண்டிருப்பதாகவும், அதில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், போருக்கு முன்பாக இஸ்ரேலை சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர், அதில் இருவர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கிறது. ஆறு வார கால முதல் கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மக்கள் அதிகமாக வாழும் காஸாவின் பகுதிகளிலிருந்து விலகி கிழக்கு திசையில் இஸ்ரேல் படை நகரும். இடமாற்றம் செய்யப்பட்ட பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர், மக்களுக்குத் தேவையான உதவிகளை கொண்டு வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஒவ்வொரு நாளும் உள்ளே வர அனுமதிக்கப்படும். இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஜனவரி 16ம் தேதி) தொடங்கவுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின்போது மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலகி, அந்த பகுதியில் 'நீடித்த அமைதி' நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி கட்ட போர் நிறுத்தத்தின்போது காஸாவின் மறுகட்டமைப்பு நடைபெறும் - இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளின் உடல்கள் இருந்தால் அவை திருப்பி கொடுக்கப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள 'தெளிவான நடைமுறை' இருப்பதாக, ஷேக் முகமது தெரிவித்தார். இதன் "விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஓரிரு நாட்களில்" ஒப்பந்தம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகியவை கூட்டாக வேலை செய்யும். "இதுவே போரின் கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்" என்றார் ஷேக் முகமது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post