சென்னையில் இன்று திருவிழா மாதிரி.. காணும் பொங்கலையொட்டி கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள்!

post-img
சென்னை: சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெரினா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். போகி தொடங்கி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என தொடர்ந்து, நான்காம் நாளில் நிறைவாக கொண்டாடப்படும் திருநாள் தான் காணும் பொங்கல். தமிழகத்தில் மிகவும் சிறப்புக்குரியதாக காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று, உறவினர்கள், நண்பர்கள் உடன் சந்திப்பு மேற்கொண்டு அளவளாவி மகிழ்வது வழக்கம். சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளவர்கள் கடற்கரை, மால், தியேட்டர், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றிற்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்து விட்டு வருவார்கள். கிராமங்களில், வீட்டில் பல விதமான உணவுகளை சமைத்து எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அங்கு நீர் நிலைகளை வழிபட்டு, நண்பர்கள், உறவினர்களுடன் உணவுகளை பகிர்ந்து, விளையாடி மகிழ்வார்கள். காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இதனையொட்டி சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி கடற்கரையில் இருந்து கடலுக்கு செல்ல முடியாதபடி 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னைக்குள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். இதற்கு ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாமல்லபுரம், கோவளம், எம்ஜிஎம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி, இறக்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள், பரிசோதகர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post