அவசரமாக முடிவு எடுத்த அண்ணாமலை.. ரயில்வே விவகாரம் தப்பா போச்சே! பாஜக போராட்டம் நடக்குமா?

post-img
சென்னை: அருப்புக்கோட்டை வழியாக மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை திட்டத்தை தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று சொன்னதாக குற்றம்சாட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தவறானது என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதனால், பாஜக போராட்டம் வாபஸ் பெறப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது." எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் பல்வேறு ரயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரயில்வே அமைச்சர் கூறியிருந்தார். அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது. ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது. திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20, 2025 அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார். புதிய ரயில் வழித்தட திட்டத்தை வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளதாக பொய்யான தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாக திமுக தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது. தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு குறைத்த நிலையில், தமிழ்நாட்டிற்கான அனைத்து திட்டங்களுக்கும் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென 19.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மதுரை- தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை) உட்பட அனைத்து திட்டங்களும் உள்ளது. இதற்கு 19.12.2024 அன்று பதில் கடிதம் எழுதிய தெற்கு இரயில்வே, மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளில் சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்காது என்பதால் இந்த திட்டத்தினை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தது 'தூத்துக்குடியை அல்ல, தனுஷ்கோடி ரயில் பாதைத் திட்டம்' என்று தெற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்கள் குறித்து தனித்தனியாக கேள்விகளை செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது. அப்போது ஒரு செய்தியாளர், மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது. அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார். ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால், அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கானது என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில ஆர்ஜிதப் பிரச்சனையும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் பேச்சு குறித்து புதிய விளக்கம் அளித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக அவசர அவசரமாக போராட்டம் அறிவித்ததை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ரயில்வே விளக்கம் அளித்துள்ள நிலையில், இன்னும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறப்படவில்லை. அண்ணாமலை அறிவித்த பதிவு, சமூக வலைதளங்களில் அப்படியே உள்ளது. போராட்டம் வாபஸ் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது 20 ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடக்குமா? என குழப்பம் எழுந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post