பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து! படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

post-img
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது அடையாளம் தெரியாத கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளார். சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர், திடீரென அவரை தாக்கியுள்ளார். சைஃப் அலி கான் இப்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சைஃப் அலி கான். இவர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையே இன்று அதிகாலை இவரது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது கொள்ளையடிக்க வந்த நபர், கத்தி போன்ற ஒரு கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு சைஃப் அலி கானை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகப் படுகாயமடைந்துள்ள நடிகர் சைஃப் அலி கான், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டில் இரவு 2-2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அதிகாலை 3.30 மணியளவில் அவர், மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சைஃப் அலி கான் மொத்தம் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாகவும் அதில் இரு கத்திக்குத்து ஆழமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு கத்திக்குத்து முதுகுத் தண்டுக்கு மிக அருகே ஏற்பட்டுள்ள போதிலும், சைஃப் அலி கான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அந்த மர்ம நபர் கொள்ளையடிக்க வீட்டிற்குள் வந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சைஃப் அலி கான், என்ன சத்தம் என்பதைப் பார்க்க படுக்கை அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது சைஃப் அலி கான் கொள்ளையனைப் பார்த்த நிலையில், இருவரும் சண்டையிட்டதாகவும் அப்போது கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சைஃப் அலி கானை சரமாரியாகக் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்த போது சைஃப் அலி கானின் குடும்பத்தினர் சிலரும் வீட்டில் இருந்துள்ளனர். இதன் காரணமாகவே அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வர முடிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார், குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் தீட்சித் கெடம் கூறுகையில், "நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் ஊடுருவி இருக்கிறார். கொள்ளையனைப் பார்த்த சைஃப் அலி கான் தடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவரும் சண்டையிட்ட சூழலில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த சைஃப் அலி கானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நாங்களும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவம் சைஃப் அலி கானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ரசிகர்கள் பொறுமையாக இருக்கும்படியும் அமைதி காக்கும்படியும் சைஃப் அலி கானின் டீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும், "சயீப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது போலீஸ் விவகாரம். அவரது உடல்நிலை குறித்த தகவலை விரைவில் பகிர்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. சைஃப் அலி கான் இப்போது மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆறு முறை குத்தப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு வெட்டுக்கள் ஆழமாக இருப்பாகவும் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், "சாய்ஃப் அலி கான் தனது பாந்த்ரா வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு, அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது உடலில் ஆறு கத்திக்குத்துகள் இருந்தன. அதில் இரண்டு ஆழமாக இருந்தது. குறிப்பாக ஒரு கத்திக்குத்து முதுகுத்தண்டுக்கு அருகில் உள்ளது. இதையடுத்து அவருக்கு இப்போது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே உள்ளிட்டோர் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post