தமிழகத்தில் முதல் முறை.. திருச்சி-மதுரை சாலை தனியார் மயம்.. பல கோடிக்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா?

post-img
திருச்சி: தமிழகத்தில் முதன் முதலாக தேசிய நெடுஞ்சாலை ஒன்று தனியார் மயமாகி உள்ளது. அது தமிழ்நாட்டின் மிக பிரபலமான சாலையான திருச்சி- மதுரை 4 வழிச்சாலையாகும். இந்த சாலையை பராமரிப்புக்காக தனியார் நிறுவனம் ஒன்று ரூ.1,692 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. விராலிமலை, மேலூர் வழியாக மதுரையை இணைக்கும் இந்த சாலையை இதுநாள் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் கட்டணம் வசூலித்து வந்தது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சாலையில், நேரடியாக சென்னையில் இருந்து மதுரை வரை ஒரே சாலையாக இருக்கிறது. இதில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு இடம் என்கிற அடிப்படையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முக்கிய நகரங்கள் அனைத்தும் சுங்கச்சாவடிகள் செலுத்திய நகரகங்களுக்குள் செல்லும் வகையில் தான் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்கிற விதிகளின் படி எல்லாம் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவில்லை. சுங்கச்சாவடிகள் என்பது தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தூரத்திற்கு சாலை அமைத்ததிற்கும், அமைத்த சாலையை பராமரிக்கவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலை அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களே செய்கின்றன. அதேநேரம் அரசிடம் குத்தகை பெற்று தனியாருக்கு கட்டணம் வசூலித்து தரும் உரிமை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதன் முதலாக திருச்சி- மதுரை 4 வழிச்சாலை தனியார் மயமாகிறது. தனியார் தான் அந்த சாலையை பராமரிக்க உள்ளார்கள். திருச்சியில் இருந்து மதுரைக்கு 4 வழிச்சாலை (தேசிய நெடுஞ்சாலை எண் 38) மிகவும் பிஸியான சாலையாக உள்ளது. இந்த சாலையின் மொத்த நீளம் 124 கி.மீ. ஆகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (என்.எச்.ஏ.ஐ.) இந்த சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த 2010ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை, விராலிமலை அருகே பூதக்குடி, மேலூர் அருகே சிட்டம்பட்டி ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், இந்திய தேசிய ஆணையத்தினால் விதிவிலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள், மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான வாகனங்களுக்கு கட்டணம் இல்லை.. அதேநேரம் கார், வேன், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து பெரிய வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நேரடியாக இதுநாள் வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை பராமரிப்பு பணிகள், மேம்படுத்துதல் மற்றும் கடன்களை அடைப்பதற்காக மத்திய அரசு சில சாலை திட்டங்களை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் டோல்- ஆப்பரேட்- டிரான்ஸ்பர் (டி.ஓ.டி.) திட்டத்தின் கீழ் திருச்சி -மதுரை சாலை தற்போது தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த சாலையை அதானி சாலை போக்குவரத்து நிறுவனம் ரூ.1,692 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது. தமிழகத்தில் முதன் முதலாக இந்த சாலை சுங்க கட்டணம் வசூலித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. அதானி நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post