MahaKumbh Mela 2025: உ.பி. கும்பமேளா- கலக்கும் 'ஐஐடி பாபா'- விண்வெளி பொறியியலை கைவிட்டு சாதுவான கதை!

post-img
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பல்வேறு வகையான தோற்றங்களில் சாதுக்கள் வலம் வருகின்றனர். வினோதமான உருவங்களில் நடமாடும் சாதுக்களிடையே கவனம் ஈர்த்திருக்கிறார் ஐஐடி பாபா என்கிற அபய்சிங். ஐஐடி மும்பையில் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்று புகைப்படக் கலைஞராகி பின்னர் இந்து சாதுவாக துறவறம் மேற்கொண்டவர் அபய்சிங். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. வட இந்தியாவில் புனித பண்டிகையாக ஜனவரி 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளில் அதுவும் மகா கும்பமேளா காலத்தில் புனித நீராடுதல் பெரும் புண்ணியமாக போற்றப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் மட்டும் சுமார் 3 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். மகா கும்பமேளா என்பது சாதாரண விழா அல்ல. திரிவேணி சங்கமத்தின் கரைகளை நம்பிக்கை, தெய்வீகத்தின் அம்சமாக மாற்றும் ஒரு நிகழ்வு இது. பிரம்ம முகூர்த்தத்திலிருந்து, சூரிய ஒளியின் முதல் கதிர்கள் தண்ணீரைத் தொட்டதில் இருந்து, இரவின் வருகை வரை, பக்தர்களின் இடைவிடாத நீராடல் இருந்தது. ஒவ்வொருவரும் புனித நீராடலின் மூலம் ஆசீர்வாதங்களைத் தேடினர். கூட்டு பக்தியின் வெப்பத்துக்கு முன்னால் ஜனவரி மாதக் குளிர் அற்பமாகத் தோன்றியது. இது இந்திய கலாச்சாரத்தின் நீடித்த மதிப்புகளுக்கு ஒரு வாழும் சான்றாக உள்ளது. பயபக்தி, கடமை ஒற்றுமை ஆகியவற்றின் கலவையாகும் இது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பமேளாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் ஒன்று திரண்டனர். இந்த சாதுக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்தி புனித நீராடும் காட்சியை காண்பதும் சிவபெருமான் தரிசனமாகவே வட இந்திய பக்தர்கள் போற்றுகின்றனர். இத்தகைய சாதுக்கள் வினோதமான உருவங்களில் நடமாடி வருகின்றனர். இவர்களில் ஒருவர்தான் ஐஐடி பாபா எனப்படும் அபய் சிங். மும்பை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறையில் பட்டம் பெற்ற அபய் சிங் பின்னர் புகைப்படக் கலைஞராக பரிணமிக்கத் தொடங்கினார். தாம் புகைப்படக் கலைஞராக பயணிக்கிற போதுதான் இந்து சமயத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொள்ள முடிந்ததாகவும் இதனாலேயே தாம் கற்ற கல்வி, பணி அத்தனையையும் துறந்து சாதுவாக மாறியதாக பெருமிதத்துடன் கூறுகிறார் இந்த ஐஐடி பாபா. இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்ஜினியர் பாபா என்ற பெயரும் உண்டு. மேலும் சிவபெருமானை தாம் உணருவதாகவும் எல்லாமும் சிவமயம்தான்.. சிவமயம் மிகவும் அழகானது என தத்துவ உரையை நிகழ்த்துகிறார் இந்த ஐஐடி பாபா. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post