வரலாற்றில் முதல்முறை.. ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சல்லிவன்.. நீள்கிறது 200 வருட நீலகிரியுடன் பந்தம்

post-img
சென்னை: ஊட்டி என்ற மலைப்பிரதேசத்தை, இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜான் சல்லிவன்.. இன்று இவரது 170வது நினைவுநாளாகும். 200 வருடங்களுக்கு முன்பு ஊட்டியில் வாழ்ந்த ஜான் சல்லிவனை, வெறும் 40 வருடங்களுக்கு முன்புதான் நீலகிரி மக்களே தெரிந்து கொண்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இவரை எப்படி வரலாறு மறந்தது? என்ன நடந்தது? - 1819-ல் நீலகிரியை முதல்முதலாக கண்டுபிடித்து, கட்டமைத்தவர் ஜான் சல்லிவன்.. - நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும் ஜான் சல்லிவன்தான்.. - ஊட்டி நகரம் மற்றும் ஊட்டி ஏரியை நிர்மாணித்தவரும் இவரே ஆவார் - கோவையின் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தபோது, "உழுபவர்க்கே நிலம்" என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் ஜான் சல்லிவன்தான். - "இந்திய மக்களுக்கு அனைத்திலும் சம உரிமையை முதன்முதலாக பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் கேட்டவரும் ஜான் சல்லீவன்தான்.. - ஆங்கிலவழி பாடமுறையை இந்தியாவில் முதல்முதலாக கொண்டுவந்ததும் ஜான் சல்லீவனின் அப்பாதான்.. - முதன்முதலாக டீச்சர் டிரெயினிங் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ஜான் சல்லீவனின் சித்தப்பாதான். - "கங்கையை பிழிந்து, உறிஞ்சி, தேம்ஸ் நதியில் விட்டு பிழைக்கிறார்கள்" என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அன்று ஜான் சல்லிவன் சொன்ன வார்த்தை, உலகளவில் மிகப்பெரிய விவாதத்தை இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. ஜான் சல்லிவன்: ஆனால், ஜான் சல்லீவன் யாரென்று நீலகிரி மக்களுக்கே கடந்த 40 வருடங்கள் முன்புவரை தெரியாது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை.. அந்தவகையில், நீலகிரியை கண்டெடுத்த ஜான் சல்லிவனை , நீலகிரிக்கே அறிமுகப்படுத்தியவர் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால். ஜான் சல்லிவனை பற்றி எப்படி தெரிந்துகொண்டார்? ஊட்டிக்கும், இங்கிலாந்துக்குமான தொடர்பை எப்படி மீண்டும் ஏற்படுத்தினார்? என்பதை அவரிடமே நாம் கேட்டோம். "ஒன் இந்தியா தமிழ்" வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்தான் இவை: தேடல்கள்: "40 வருடங்களுக்கு முன்பு வரை, ஜான் சல்லிவன் என்ற பெயரை ஊட்டியில் யாருமே கேள்விப்பட்டதில்லை. 1985ம் ஆண்டு, பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் என்னிடம், "நல்லவர்களை யாருய்யா இப்போ ஞாபகம் வெச்சிருக்கா?" என்றார்.. அந்த நொடியிலிருந்துதான், ஜான் சல்லிவனை பற்றின தேடலை துவங்கினேன். ஆனால், முதல் 10 வருடங்களுக்கு அவரை பற்றின எந்த தகவலுமே எனக்கு கிடைக்கவில்லை. பலருக்கும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்டும் பலனில்லை. 1995-க்குபிறகு இணையதள வசதிகள் வரதுவங்கின.. கடந்த 2006-ல் "சல்லிவன் நினைவகம்" கோத்தகிரியில் துவங்கினேன் இதுதான் இந்தியாவிலேயே, ஒரு இடத்தின் உள்வரலாற்றினை எடுத்து கூறும் அருங்காட்சியகமாகும்.. (Local History Musium).. கல்லறை: பின்னர் 2009-ல் ஜான் சல்லீவன் இறந்து 150 வருடங்கள் ஆகிவிட்டதாகவும், அவருடைய கல்லறை இங்கிலாந்தில் உள்ளதாகவும் இணையதளம் மூலம் தகவல் கிடைத்தது. உடனே அடுத்த மாதமே இங்கிலாந்திலுள்ள அவரது கல்லறைக்கு சென்று, ஜான் சல்லீவனை பற்றியும், அவருக்கும் ஊட்டிக்குமான தொடர்பை பற்றியும் ஆராய்ந்தேன். தன்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பேயே, அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜான் சல்லீவன்.. அதனால் குடும்ப அந்தஸ்து, அங்கீகாரம் கிடைக்காமல், தனித்து வளர்ந்து, தனித்தே வாழ்ந்து மறைந்துள்ளார். அதனால்தான், இவரது கல்லறையும், அவரது குடும்பத்தினருடன் இல்லாமல் தனித்தே ஒதுக்கப்பட்டிருந்தது. பலருக்குமே இவரை பற்றி தெரியாமல் போக, இதுவும் ஒரு காரணம் என்பதை கண்டறிந்தேன். நற்பணிகள்: ஜான் சல்லிவனின் அப்பா பெயர், "ஜான் சல்லிவன் சீனியர்" என்பார்கள்.. சர்போர்ஜி மகாராஜா அரசவையில், இங்கிலாந்து பிரதிநிதியாக இருந்தார். பல நற்பணிகளை இவர் செய்தாலும், இந்தியாவில் முதன்முதலாக ஆங்கில வழிப்பள்ளிக்கூடங்களை நிறுவியர் இவர்தான்.. ராமநாதபுரம், புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் முதல்முதலாக பள்ளிக்கூடங்களை துவங்கினார். இந்த பள்ளிகளின் வளர்ச்சிதான், பிற்காலத்தில், இந்தியா முழுவதும் "லார்டு மெக்காலா" காலத்தில் ஆங்கில வழி பாடமுறையாக மாறியது. சல்லீவனின் சித்தப்பா பெயர் பெஞ்சமன் சல்லீவன்.. இவர் சென்னை நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். இவர்தான் இந்தியாவுக்கு, முதன்முதலாக டீச்சர் டிரெயினிங்கை அறிமுகப்படுத்தியவர்.. ஹென்றிதா: ஜான் சல்லீவன் 1820ல் சென்னையில் பிறந்த ஹென்றிதா என்பவரை, சென்னை கதீட்ரல் சர்ச்சிலேயே திருமணம் செய்து கொண்டார்.. பிறகு ஊட்டியில் ஹென்றிதாவுடன் வாழ்க்கையை துவங்கினார்.. இவர்களுக்கு 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால், 1838-ல் ஒரே வாரத்தில், மனைவியும், முதல் மகளும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அவர்களது கல்லறையை ஊட்டி சர்ச்சிலேயே அடக்கம் செய்தார். கடைசிகாலம்வரை ஊட்டியிலேயே வாழ்ந்துவிட வேண்டும் என்று விரும்பியவருக்கு, மகள், மனைவியின் பிரிவை தாங்க முடியவில்லை. இதனால் 1838ம் ஆண்டு ஊட்டியை விட்டு வெளியேறி, சென்னையில் 3 வருடம் பணியாற்றிவிட்டு, 1841ம் ஆண்டு, இங்கிலாந்துக்கே சென்றுவிட்டார். தன்னுடைய 8 குழந்தைகளையும் வளர்ப்பதற்காக, மனைவியின் உறவுக்கார பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இவர்கள் அனைவரது கல்லறையும் இங்கிலாந்திலேயே உள்ளது. இப்படி ஜான் சல்லிவனை பற்றி எனக்கு கண்டுபிடிக்க, 40 வருடங்கள் ஆகிவிட்டது. ரோஸ் சல்லிவன்: கடந்த 2010-ல் சல்லீவனின் 5வது தலைமுறையை சேர்ந்தவர் ஊட்டிக்கு வந்திருந்தார்.. "என்னுடைய மூதாதையர் சல்லீவன், இந்த ஊட்டிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.. அவரது பெயரில் ஒரு ரோஜா பூ செடி இருந்தால் நல்லா இருக்குமே" என்று ஆசையை சொன்னார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பேத்தி மூலமாக இந்த கோரிக்கையை நான் எடுத்து சென்றேன்.. அதன்படியே, "ரோஸ் சல்லீவன்" என்ற புது ரோஜா வகை செடியை அவர் அறிமுகப்படுத்தினார். இதற்கு பிறகு, இங்கிலாந்தில் சல்லீவன் புதைக்கப்பட்டிருந்த சர்ச் ஊழியர்கள், நீலகிரிக்கும் வந்து சென்றார்கள்.. ஜான் சல்லிவன் தன்னுடைய 15 வயதில் இந்தியாவுக்கு வந்தபோது வரைந்த ஓவியத்தையும் எனக்கு பரிசாக வழங்கினார்கள். தேடல் தொடரும்: கடந்த 2023ல், ஊட்டியின் 200ம் ஆண்டு விழாவினை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடியது.. அதில் ஒரு பகுதியாக, ஜான் சல்லிவனின் 5வது தலைமுறையினரும் அரசு விருந்தினர்களாக பங்கேற்றிருந்தனர். ஆனால், ஜான் சல்லிவன் இந்தியாவுக்கும், இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு செய்த பங்களிப்புகளில், பாதியளவுகூட வெளியே வரவில்லை.. அதைத்தான் இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்" என்கிறார் வேணுகோபால், Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post