நீலகிரி, கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா?

post-img
உதகை, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளுக்குச் செல்ல இ-பாஸ் முறை கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இந்த இரு சுற்றுலாத் தலங்களுக்குமான பயணிகள் வருகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று சுற்றுலாத் துறையை நம்பியிருப்பவர்கள் வலியுறுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழலைக் காக்க இது அவசியமென்று சூழல் அமைப்பினர் வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்ற உத்தரவு என்பதால், இதை அரசால் விலக்கிக்கொள்ள இயலாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் பரவலானபோது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸ் முறை கொண்டு வரப்பட்டது. பின்னர் நிலைமை ஓரளவுக்குச் சீரான பிறகு, விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் என்ற முறை நடைமுறைக்கு வந்தது. கடந்த 2022க்குப் பிறகு இவையனைத்தும் நீக்கப்பட்டது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நிலவுவது குறித்து, நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, இவ்விரு மலைப்பகுதிகளுக்கும் எவ்வளவு வாகனங்கள் வருகின்றன என்று கேள்வி எழுப்பினர். நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜரான நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில், சில விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் உதகைக்கு சீசன் காலங்களில், தினமும் கார், வேன் உள்பட 20,011 வாகனங்களும், பிற நாட்களில் தினமும் 2,002 வாகனங்களும் வருவதாகவும், கொடைக்கானலுக்கு சீசன் நேரங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாத காலங்களில் 2,100 வாகனங்களும் வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவைத் தவிர்த்து, இரு நகரங்களிலும் உள்ள தங்குமிடங்கள், அறைகள், வாகன நிறுத்தங்கள் குறித்த விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த விவரங்களைப் பார்த்த நீதிபதிகள், இரு நகரங்களுக்கும் எவ்வளவு வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டனர். இவ்வளவு வாகனங்கள் சென்றால் ஏற்படும் சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இவ்விரு நகரங்களுக்கும் மே 7 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன் பிறகு, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் முறை தொடர வேண்டுமென்றும் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டு, இப்போது வரை இ-பாஸ் முறை கடைபிடிக்கப்படுகிறது. இ-பாஸ் நடைமுறைக்கு வந்த பின், இவ்விரு நகரங்களுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது; சுற்றுலாத் துறை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகப் பல தரப்பினரும் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் உதகையில் சுற்றுலாவை நம்பியுள்ள பல்வேறு தொழில்களும் 45 சதவீதம் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் கேம்சந்த் தெரிவித்திருந்தார். இவர்களின் கருத்தை நிரூபிப்பதைப் போல, ஒரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, அங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களை வைத்தே கணக்கிடப்படுகிறது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் இந்த பூங்காவுக்கான பார்வையாளர்கள் குறித்த விவரங்களை இந்தத் துறையிடம் இருந்து பிபிசி தமிழ் பெற்றதில் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொரோனா தாக்கம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த மே மாதத்தில் இ-பாஸ் நடைமுறைக்கு வந்த பின்னர், இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் 24,12,483 பேர், தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்தனர். 2023ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 28 லட்சத்து 18 ஆயிரத்து 502 ஆக உயர்ந்தது. ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டில் பார்வையாளர்கள் எண்ணிக்கை, 23 லட்சத்து 95 ஆயிரத்து 906 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 600 பயணிகள் குறைந்துள்ளனர். இ-பாஸ் நடைமுறைக்குப் பிறகே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதை, மூன்று ஆண்டுகளில் ஜனவரி–ஏப்ரல் வரையிலான பார்வையாளர்கள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. உதாரணமாக கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் 22 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் முறையே 33 ஆயிரம் மற்றும் 37 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் மே மாதங்களைக் கணக்கிட்டால், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 51 ஆயிரம் மற்றும் 55 ஆயிரம் என உயர்ந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, 2024 மே மாதத்தில் 42 ஆயிரமாகச் சரிந்துள்ளது. கொடைக்கானலிலும் பிரையன்ட் பூங்காவில், கடந்த 3 நிதியாண்டுகளில் 1,90,971 (2021–2022), 4,90,696 (2022–2023), 5,52,577 (2023–2024) என உயர்ந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை, 2024 மே மாதத்துக்குப் பிறகு கணிசமாகக் குறைந்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பூங்காவின் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன். இதனால் இவ்விரு சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாவை நம்பியுள்ள தொழில் முனைவோர் பாதிப்புக்குள்ளாகி வருவதாக பல தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர். நீலகிரி ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் நாயர் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கத் தெரியாத அல்லது விரும்பாத பல லட்சம் சுற்றுலாப் பயணிகள், வேறு இடங்களைத் தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு, இ-பாஸ் நடைமுறையில்லை. அதற்குக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் வேறு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் சுரேஷ், சாலைகளை விரிவாக்கம் செய்வது, பாலம் கட்டுவது, புதிய இணைப்புச் சாலைகளை ஏற்படுத்துவது, புறவழிச்சாலைகள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், உதகைக்கான சிறப்பு மக்கள் போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்கிறார். அதோடு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என்றார். ஆனால் இ-பாஸ் நடைமுறை என்பது, உதகைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும், இந்த நகரத்தின் தாங்குதிறன் எவ்வளவு என்பதையும் அறிவதற்கான ஒரு முயற்சிதான் என்று கூறுகிறார், நீலகிரி சுற்றுச்சூழல் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியும், உலக காட்டுயிர் நிதியத்தின் ஆய்வாளருமான மோகன்ராஜ். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மோகன்ராஜ், ''இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஒரு செயல் அமைப்பை உருவாக்க வேண்டும். பூடானில் அங்கே இருக்கும் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையைக் கணக்கிட்டே மற்றவர்களுக்கு உள்ளே வருவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதுபோன்ற நடைமுறையை இங்கேயும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக தனிநபர்களின் வாகனங்களைக் குறைக்க பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்'' என்றார். வெளிநாடுகளைப் போன்று அதிநவீனமான, பாதுகாப்பான பேருந்துகளை இயக்கலாம்; தற்போதுள்ள மலை ரயில் போக்குவரத்தை இன்னும் மேம்படுத்தலாம் என்று கூறும் மோகன்ராஜ், அப்படிச் செய்தால் மட்டுமே கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் நீலகிரி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் என்றார். சுற்றுலாத் துறையைக் காப்பாற்ற, இ-பாஸ் முறையை நீக்க வேண்டும் என்று ஒரு புறமும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அது அவசியம் என்று மறுபுறமும் வாதங்கள் வலுத்து வருகின்றன. இவைபோக, இப்போது நடைமுறையில் உள்ள இ பாஸ் முறையால், உள்ளூர் மக்களுக்கும், வாகனதாரர்களுக்கும் கடும் பாதிப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது நீலகிரி பதிவெண் (TN 43) கொண்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி தருவதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உதகையில் டிராவல்ஸ் நடத்தி வரும் பாஸ்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''நான் இதுவரை நான்கு நீலகிரி பதிவெண் கார்களை வைத்திருந்து, வெளிமாவட்டங்களுக்கு விற்றுவிட்டேன். தற்போது நான் வைத்துள்ள இரண்டு கார்களில் ஒன்று திருச்செந்துார் பதிவெண் கொண்டது; மற்றொன்று கோவை பதிவெண் உடையது. அந்த ஆர்சி புத்தகங்களில் எனது உதகை விலாசம்தான் உள்ளது. என்னிடம் டிஎன் 43 வாகனம் வாங்கிய மற்றவர்களின் ஆர்சி புத்தகங்களில் வேறு மாவட்ட விலாசங்கள் உள்ளன. ஆனால் எனது வாகனங்களில் வர இ-பாஸ் போட வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள டிஎன் 43 வாகனங்கள் எவ்வித இ-பாஸ் பதிவும் இன்றி சாதாரணமாக வந்து செல்கின்றன. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்'' என்றார். இவரைப் போலவே நீலகிரியில் வெளிமாவட்ட பதிவெண் வாகனங்களை வைத்துள்ள பொது மக்களும், டிராவல்ஸ் வாகனங்களை இயக்கும் பலரும் இந்த நடைமுறையையே அதகுக் காரணம் என்று குறை கூறுகின்றனர். இதே பிரச்னை, தங்கள் ஊரிலும் இருப்பதாகச் சொல்கிறார் கொடைக்கானலைச் சேர்ந்த ஓட்டுநர் முத்து. ஆனால் கொடைக்கானலுக்கு வருவதற்கு இ-பாஸ் கோரி விண்ணப்பித்தவர்களில், பாதிக்கும் குறைவான வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளே, அங்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது இ-பாஸ் புள்ளி விவரம். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் பிபிசி தமிழ் பெற்ற தகவல்களின்படி, கடந்த 2024 மே மாதத்தில் இருந்து இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரத்து 375 வாகனங்களில், 25 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேர் வருவதற்கு விண்ணப்பித்தனர். ஆனால், அதில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 762 வாகனங்களில், 11 லட்சத்து 34 ஆயிரத்து 890 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர். கொடைக்கானலில் இருந்து வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வரும் செபாஸ்டியன் பிபிசி தமிழிடம், ''படித்தவர்கள் இ-பாஸ் முறையில் விண்ணப்பித்து வருகின்றனர்; கிராமப்புறங்களைச் சேர்ந்த விவரம் அறியாத மக்கள் இந்த நடைமுறையைப் பார்த்து பயந்து வருவதையே தவிர்க்கின்றனர். இதனால் கொடைக்கானலில் கீழ்நிலையிலுள்ள பேரிக்காய், பிளம்ஸ் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள்தான் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் அளவுக்குத் தொழில் பாதிப்பு உள்ளது'' என்று கூறினார். கடந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில், வரும் கோடை சீசனுக்குள் இந்த இ-பாஸ் நடைமுறை நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, இவ்விரு மலை நகரங்களிலும் உள்ள எல்லாத் தரப்பு மக்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பதில் பெறுவதற்காக பிபிசி தமிழ் பலமுறை முயன்றபோதும், அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. கடந்த அக்டோபரில் இ-பாஸ் நடைமுறை பற்றி நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உயர்நீதிமன்ற மறுஉத்தரவு வரும்வரை, டிஎன் 43 பதிவெண் உள்ள வாகனங்களைத் தவிர, மற்ற வாகனங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று, நீலகிரி மாவட்டத்துக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக'' தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தில் இதுகுறித்த தகவல் அறிந்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, "இ-பாஸ் நடைமுறை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலில் உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்க முடியாது" என்று தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post