பொன்முடி மீது சேறு வீச்சு.. விரட்டி விரட்டி மக்கள் கைது! வெட்கமாக இல்லையா? சீறிய நாம் தமிழர் சீமான்!

post-img
சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கை வயலில் குடிநீடில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும். வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப் புனிதரா? மகளுக்கும் ஆயிரம் - அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது வேங்கை வயலில் மக்கள் குடிக்க பயன்படுத்திய குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா? ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆகவே, வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post