சென்னையில் கேட்ட துப்பாக்கி சத்தம் ! தப்ப முயன்ற ரவுடி பாம் சரவணன் மீது சுட்ட போலீசார்!

post-img
சென்னை: ரவுடி பாம் சரவணனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு, நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். பாம் சரவணன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆந்திராவில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் நேற்று கைது செய்யப்பட்டார். ரவுடி பாம் சரவணை கைது செய்து சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். இந்நிலையில் எம்.கே.பி. நபர் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பி ஓட முயன்ற பாம் சரவணனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம் சரவணனிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகளில் பிரபல ரவுடி பாம் சரவணன் தொடர்புடையவர். பிரபல ரவுடி சரவணன் என்கிற பாம் சரவணன் "A ப்ளஸ்" ரவுடிகள் பட்டியலில் இருப்பவர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளருமான தென்னரசு கடந்த 2016 ஆம் ஆண்டு, ஆற்காடு சுரேஷ் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த தென்னரசுவின் சகோதரர்தான் இந்த பாம் சரவணன். தனது சகோதரர் கொலைக்கு பழிவாங்க ஆற்காடு சுரேஷை கடந்த 2023 ஆம் ஆண்டு கூட்டாளிகளோடு சேர்ந்து கொலை செய்ததாக இவர் மீது வழக்கு உள்ளது.சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி காரியத்தை கச்சிதமாக முடிப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு அதுவே பட்டப்பெயரானது. இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். தனது சகோதரர் தென்னரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க, பாம் சரவணன் தலைமறைவாக இருப்பதாகவும், அதற்காக திட்டமிட்டு காத்திருப்பதாகவும் உளவுப்பிரிவு எச்சரித்ததையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். தென்னரசு மற்றும் பாம் சரவணனின் இன்னொரு சகோதரரான மாரி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்கச் சென்றபோது அவர் கதறி அழுதார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாரி உயிரிழந்தார். அந்த அளவுக்கு, உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது 3 சகோதரர்களும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், பாம் சரவணன் மட்டும் பழிக்கு பழி வாங்க திட்டமிட்டுக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் பலர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கொலையை அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். தற்போது ஆற்காடு சுரேஷ் தரப்பினரை மொத்தமாக காலி செய்ய பாம் சரவணன் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஆந்திரா எல்லையில் பாம் சரவணன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பாம் சரவணனை தீவிரமாக தேடி வந்த போலீசார், நேற்று மாலை ஆந்திர மாநிலம் சித்தூர் ஔகே வரதப்பாளையம் பகுதியில் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வரும்போது ஆந்திர - சென்னை எல்லைப் பகுதியில் தனிப்படை போலீசாரை தாக்கி விட்டு, நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்ப்பி ஓட பாம் சரவணன் முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர். பாம் சரவணனிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post