இந்தியாவுக்காக அதானி குழுமம் தயாரித்த ட்ரோன்.. டெலிவரிக்கு முன் விழுந்து சிதறியது.. என்ன நடந்தது?

post-img
காந்தி நகர்: பிரபல தொழிலதிபர் அதானி நிறுவனம் சார்பில் இந்திய கடற்படைக்கு ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்திய கடற்படைக்கு டெலிவரி செய்வதற்கு முன்பாகவே வானில் பறந்த அதானி நிறுவனத்தின் த்ரிஷ்டி 10 ட்ரோன் கீழே விழுந்து நொறுங்கியது. நம் நாட்டில் உள்ள பெரும்பணக்காரர்களில் 2வது இடத்தில் இருப்பவர் கவுதம் அதானி. இவர் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை நிறுவி பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கீழ் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் அதானி டிபெஃன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் (Adani defence and aerospace)நிறுவனம். இந்த நிறுவனம் என்பது அதானி குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ட்ரோன், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அதானி டிபெஃன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் நம் நாட்டின் கடற்படைக்கு தேவையான ட்ரோன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் த்ரிஷ்டி 10 (ஸ்டார்லைனர்) வகையை சேர்ந்த ட்ரோன் அதானி குழுமத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த ட்ரோனை கடற்படையிடம் விரைவில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் போர்பந்தரில் ட்ரோன் பறக்கவிடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று ட்ரோன் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த ட்ரோன் எப்படி விபத்தில் சிக்கியது ? என்ற தகவல் தற்போது வரை வெளிவரவில்லை. இதுபற்றி அதானி நிறுவனம் விசாரணையை தொடங்க உள்ளது. இந்திய கடற்படைக்கு அதானி குழுமம் சார்பில் தயாரித்து வழங்கப்படும் இந்த த்ரிஷ்டி 10 (ஸ்டார்லைனர்) ட்ரோன் என்பது மல்டி ரோல் MALE (Medium Altitude Long Endurance) வகையை சேர்ந்தது. இந்த ட்ரோனால் 30 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியும். 450 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இடைவிடாது 36 மணிநேரம் பறக்கும் திறன் கொண்டது. சவாலான இடங்களில் இந்த ட்ரோனால் எளிதாக பறக்க முடியும். அதேபோல் அனைத்து வானிலை சூழலிலும் இந்த ட்ரோனால் பறக்க முடியும். இது இஸ்ரேலின் ஹெர்மெஸ் 900 ட்ரோனுக்கு நிகரானது என்று சொல்லப்படுகிறது. த்ருஷ்டி 10 ட்ரோன் வானில் பறப்பதற்கான தரச் சான்றிதழை நேட்டோவின் ஸ்டாநாக் 4671 என்ற அமைப்பு வழங்கியுள்ளது. இந்த ட்ரோன் குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் கடற்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு இந்திய பாதுகாப்பு படைகளுக்கு 3 த்ருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோன் டெலிவரி செய்யப்பட்டது. இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2வது ட்ரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது. அதன்பிறகு 2வது முறையாக கடற்படைக்கு த்ருஷ்டி 10 ட்ரோன் வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் கடற்படைக்காக த்ரிஷ்டி 10 ட்ரோன் பறக்கவிட்டு சோதனை செய்தபோது குஜராத் மாநிலம் போர்பந்தரில் விழுந்து நொறுங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post