போதைப் பொருட்கள் கடத்திய புலிகள்-இழிவுபடுத்திய துக்ளக் குருமூர்த்தியை சீமான் கண்டிப்பாரா? வன்னி அரசு

post-img
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் போதைப் பொருட்கள் கடத்தியதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகள் பேரியக்கத்தை கொச்சைப்படுத்துவது என்பது தமிழீழ மக்களை கொச்சைப்படுத்துவதாகும்; இப்படிப் பேசிய துக்ளக் குருமூர்த்தியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டிப்பாரா? எனவும் வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக வன்னி அரசு கூறியிருப்பதாவது: போதைப்பொருட்கள் தமிழ்நாட்டில் அதிக நடமாட்டம் இருப்பதாக துக்ளக் ஆண்டு விழாவில் அவதூறு பரப்பி இருக்கிறார் குருமூர்த்தி. இந்தியாவில் எங்கிருந்து போதைப்பொருட்கள் இறங்குகின்றன என்பது குறித்து தரவுகளோடு அடுத்து பதிவிடுகிறோம். ஆனால், விடுதலைப்புலிகள் போதைப்பொருட்கள் கடத்தியதாக போகிற போக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் தூற்றுகிறார் குருமூர்த்தி. விடுதலைப் புலிகள் பேரியக்கம் மக்களுக்கான விடுதலை இயக்கம். தமிழீழ மக்களை பாதுகாக்க சிங்கள பவுத்த பேரினவாதிகளுக்கு எதிராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறவழியில் ஆயுதப்போராட்டத்தை நடத்திய பேரியக்கம் விடுதலைப்புலிகள். தனி நாடாகவே தமிழீழம் செயல்பட்டது. ராணுவம்,காவல்துறை, சுங்கத்துறை,சிறைத்துறை, கல்வித்துறை,அரசியல் துறை,நீதித்துறை, தமிழீழ காவல்துறை என மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து நல்லாட்சி நடத்தியவர் பிரபாகரன் எனும் மகத்தான மக்கள் தலைவன். தன்னுடைய குடும்பத்தை விட மண்ணையும் மக்களையும் நேசித்தவர் பிரபாகரன். ஆயிரக்கணக்கன மாவீரர்கள் வீரச்சாவடைந்தார்கள். லட்சக்கணக்கில் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் சிங்கள ராணுவமே எதிரியென இலக்கை வைத்து போர்புரிந்தனர் புலிகள். ஒரு போதும் அப்பாவி சிங்கள மக்கள் மீது தாக்குதலை நடத்தியதில்லை. அப்படிப்பட்ட மக்கள் இயக்கத்தின் மீது போதைப்பொருட்கள் கடத்தினார்கள் என அவதுறு பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அறத்தோடும் போரியல் திறத்தோடும் களமாடிய மக்கள் இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு யுத்தக்களத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இன்றைக்கும் விடுதலைப்புலிகள் அரசியல் ரீதியாக செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழீழம் ஒன்றே இலக்கு என களமாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட பேரியக்கத்தை கொச்சைப்படுத்துவது தமிழீழ மக்களை கொச்சைப்படுத்துவதாகும் என எச்சரிக்கிறோம். இவ்வளவு மோசமாக பேசிவரும் அரசியல் தரகர் குருமூர்த்தியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா? இவ்வாறு வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post